மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை வாக்காளர்களாகச் சேர்த்த குமரி கலெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நாகர்கோவிலில் உள்ள ஓரல் காது கேளாதோர் பள்ளியில், ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் துவக்கிவைத்தார். அப்போது, அவர் பேசும் போது, "இந்தியத் தேர்தல் ஆணையம், 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட  புதிய இளம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சிறப்புப் பணி, 2017 ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறன்கொண்ட மாணவ மாணவியர்களுக்கிடையே வாக்களிப்பதன் அவசியம்குறித்தும், ஜனநாயகக் கடமைகள்குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின்மூலம்  நாகர்கோவில், ஓரல் காதுகேளாதோர் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது"  என்று தெரிவித்தார்..

இந்த சிறப்பு முகாமில், 18 வயது பூர்த்தியான மாற்றுத்திறன் கொண்ட 35 மாணவ மாணவிகளிடமிருந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டன. மேலும், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, வருகிற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதிசெய்திட, மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள், கல்வி கற்பதை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, கலெக்டர் ஆய்வு செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!