வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (15/07/2017)

கடைசி தொடர்பு:18:22 (15/07/2017)

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிந்த்ரா இந்திய விளையாட்டுத் துறைக்கு முக்கிய வேண்டுகோள்!

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் ஜெர்மனியின் பெர்லினில் பாரா நீச்சல் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கஞ்சன்மாலா பாண்டே பங்கேற்றார். அங்கிருந்தபோது பாண்டேவுக்கு, இந்திய விளையாட்டுத் துறை சார்பில் அனுப்பப்பட்ட பணம் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவர் சக விளையாட்டு வீரர்கள் உதவியை நாடியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையொட்டிதான், இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பிந்த்ரா.

அதில், 'சமீபத்தில் பெர்லினில் நம் பாரா ஒலிம்பிக் வீரருக்கு நிகழ்ந்த சம்பவம் விளையாட்டு வீரர்களை நிர்வகிப்பதில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதைப் போன்ற சம்பவங்கள் இந்திய விளையாட்டுத்துறை வட்டத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், இந்தத் துறையில் செய்யப்பட்ட நல்ல விஷயங்களும் மறக்கடிக்கப்படுகின்றன. இதைப் போக்க என்னிடம் ஒரு யோசனை உள்ளது. விளையாட்டு வீரர்கள் தொடர்புகொள்ளக்கூடிய வகையிலான அவசர எண் அறிமுகப்படுத்துதல் மற்றும் எதிர்பாராத விஷயங்களைச் சமாளிக்கும் வகையிலான நிதி வைத்திருத்தல் ஆகியவை பிரச்னைகளைத் தீர்க்க உதவும் என நினைக்கிறேன்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அபினவ் பிந்த்ரா.