வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/08/2017)

கடைசி தொடர்பு:17:30 (19/08/2017)

'அணிகள் இணைப்பு பெரிய பிரச்னையா?' - கொதிக்கும் சீமான்

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துவரும் நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையாகப் பேசப்பட்டு வருவதை வெறுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான்


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் போராடி வருகின்றன. இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒப்புதல் கொடுத்திருப்பதாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி யாரும் பேசவில்லை. பவானி ஆற்றில் வரிசையாகத் தடுப்பணைகளை கேரள அரசு கட்டி வருகிறது. நமது நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்து, தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்கின்றன. அதிலிருந்து தமிழகத்தை மீட்பது குறித்தோ காப்பது குறித்தோ சிந்தனை அல்லது செயல்வடிவம் தமிழக அரசிடம் இல்லை. இந்தநிலையில் அணிகள் இணைந்தால் என்ன... இணையாவிட்டால் என்ன?. இதை ஒரு பெரிய பிரச்னையாகக் கருதி கடந்த 3 மாதங்களாகப் பேசப்பட்டு வருகிறது. இதை நான் வெறுக்கிறேன். அருவருக்கிறேன்’ என்று கொந்தளித்தார்.