60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை -3)

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது...

குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அறுபது, அறுபத்தைந்துகளில் முன்னணி நடிகையாக இருந்து அதிகமான வருமானங்கள் சம்பாதித்தார். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நீதிபதி: (பவானிசிங்கிடம்) 91 க்கு முன்பு குற்றவாளிகளின் வருமானம் எவ்வளவு?
பவானிசிங்: தெரியவில்லை.

நீதிபதி: (சிரித்துக்கொண்டே) சீனியரான பவானிசிங்குக்கு நிச்சயம் இது தெரியும் அறுபதுகளில் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு?
பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) தெரியவில்லை.

தொடர்ந்து பவானிசிங்கிடம் நீதிபதி குமாரசாமி சராமரியாக கேள்விகளைக் கேட்டார். அதற்கு பவானிசிங் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
நீதிபதி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?

பவானிசிங்: தெரியவில்லை. (மராடியிடம் கேட்டு 714% என்றார்)
நீதிபதி: 714% எப்படி வந்தது?

பவானிசிங்: தெரியவில்லை. (அன்பழகன் வழக்கறிஞர் சரவணன் பதிலளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து வகுத்தல் வருமானம் பெருக்கல் 100 = 714% வரும். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் 540% கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.)
நீதிபதி: எத்தனை எதிர் தரப்பு சாட்சிகளை விசாரித்தீர்கள்?

பவானிசிங்: (தயங்குகிறார். மராடியைக் கேட்டு...) 99 பேர்
நீதிபதி: அவர்களின் சாட்சியங்களை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

பவானிசிங்: (மௌனம்)
குமார்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறு வரியில் சொல்லி இருக்கிறார். அந்த சாட்சியங்கள் குற்றவாளிகளுக்கு வேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படி வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்த சாட்சியங்கள் அனைத்தையும் வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை படித்துவிட்டீர்களா?

பவானிசிங்: படித்துவிட்டேன்.
நிதிபதி: பிறகு ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.

பவானிசிங்: (மௌனம்) 

பேராசிரியர் அன்பழகன் மீது கடும் கண்டனம்!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனின் வாதத்தில் இருந்து...
 
சரவணன்: உச்சநீதிமன்ற ஆணையில், அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லை. அதனால், பவானிசிங் இந்த வழக்கில் ஆஜராவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

நீதிபதி: அந்த உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பியுங்கள்?
சரவணன்: (உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பிக்கிறார்.) 
 
நீதிபதி: நீங்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வையுங்கள். அல்லது, வழக்கு போடுங்கள். என்னிடம் ஏன் வந்திருக்கிறீர்கள். என்னை உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து வழக்கை முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். (பவானிசிங்கை பார்த்து) உங்களை நியமித்தது யார்?
பவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நியமித்திருக்கிறது.

நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள் அரசு வழக்கறிஞரை நியமிக்கப்போகிறீர்களா? ஏன் அரசியலைப் புகுத்துகிறீர்கள்? உங்கள் மனுதாரர் யார்?
சரவணன்: அன்பழகன்

நீதிபதி: அவர் எங்கே? அவரை ஆஜராகச் சொல்லுங்கள்.
சரவணன்: அவர் 92 வயதுடைய முதியவர். அவர் கோர்ட்டுக்கு வர முடியாது. கோர்ட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அவரின் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். பவானிசிங்கை நீக்க வேண்டும். அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நீதிபதி: (கோபத்துடன்) தேவையில்லாமல் மனு அளிக்க இது அரசியல் மேடை கிடையாது. என்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக சி.ஆர்.பி.சி.345 ஐ பயன்படுத்த நேரிடும். நீங்கள் ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்.
சரவணன்: ஏற்கெனவே ரீட் மனு தாக்கல் செய்திருக்கிறோம். நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

(இதையடுத்து காரசாரமான இந்த விவாதம் நிறைவு பெற்றது.)

நீதிபதி: அந்த மனுவின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

விறுவிறு விசாரணைகள் தொடரும்...

-வீ.கே.ரமேஷ்
படங்கள்:
க.தனசேகரன்

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!