வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (10/04/2015)

கடைசி தொடர்பு:14:15 (10/04/2015)

ஆந்திராவில் பலியானவர் குடும்பங்களுக்கு திமுக ரூ. 1 லட்சம் நிதியுதவி!

சென்னை: செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேரது குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பதி அருகே ஆந்திர மாநில காவல் துறை துப்பாக்கியால் சுட்டதால் 20 தமிழர்கள் பலியான செய்தி அறிந்ததும், நான் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தேன்.

அதற்குப் பிறகுதான் தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்குவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அரசின் சார்பில் வழங்கப்பட்ட தொகை மிகக் குறைவாக இருப்பதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம், இருபது குடும்பங்களுக்கும் மொத்தம் 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகையினை கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் நேரடியாகச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிடுவார்கள்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்