வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (18/04/2015)

கடைசி தொடர்பு:16:13 (20/04/2015)

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

களிர் காவல் நிலையங்களுக்கு  வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல்  நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!

சம்பவம் 1:

சென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சத்யா வீட்டினர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார், ரேணுகா, அவரது தாயார் மணியம்மாள், ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 65 வயதான மூதாட்டியை மணியம்மாளை லத்தியால் அடித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த மூன்று மாதத்துக்குள் மணியம்மாள் இறந்தார்.

இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இறுதியில் ரேணுகாவுக்கு போலீஸார் கொடுத்த கெடுபிடியால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகாவிடம் விசாரித்தால் போலீசுக்குப் பயந்து அவர் எதையும் சொல்ல மறுக்கிறார்.

சம்பவம் 2:

பெயரை குறிப்பிட விரும்பாத ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரின் நிஜக்கதை இது...

"சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி. சென்னையில் இன்ஜினியர் பணி. உடன் பணியாற்றும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். சில மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் வரத்தொடங்கின. விட்டுக் கொடுத்து வாழப்பழகினேன். கடைசியில் இன்னொரு வருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கண்டித்தேன்.

பிரச்னை விஸ்வரூபமாக வெடித்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றாள். இதுதொடர்பாக என் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்ததால் மகளே இல்லை என்று கூறியவர்கள், என் மீது வரதட்சணை, குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் என புகார்களை அடுக்கினார்கள்.

விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. விசாரணைக்கு சென்றேன். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஒருவரை  காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. "அந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கேஸ் தானே... நில்லு வந்து விசாரிக்கிறேன்!" என்றார். அவரது பேச்சு ஒருவித மிரட்டலுடன் இருந்தது.

மூன்று மணி நேரத்துக்கு பிறகு உள்ளே அழைத்தார் பெண் அதிகாரி. அங்கு என்னிடம்  விசாரணை என்ற பெயரில் அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் கூனிக் குறுகி நின்றேன். 'ஏன்டா பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா... பேண்ட அவிழ்த்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே அடைச்சா தான் உனக்கு புத்தி வரும்' என்றார். 'மேடம் எனக்கும் அவளுக்கும் எந்தப்பிரச்னையும் இல்ல... வரதட்சணை எல்லாம் யாரிடமும் கேட்கல... லவ் பண்ணிதான் மேரெஜ் பண்ணினோம்!' என்ற என் பதிலை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமையாக அடித்து, ஜெயில்ல அடைச்சிட்டாங்க.

ஜாமீனில் வந்த பிறகு என் மீதான புகாரை என்னுடைய மனைவியே திரும்பப் பெற்றாள். ஆனால், அந்த அவமானத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அன்றைக்கு நான் சொன்னதை மட்டும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் காது கொடுத்து கேட்டு இருந்தா எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது. அந்த களங்கத்தை யார் நீக்க முடியும் சார்?" என்று முடித்தார்.

சம்பவம் 3:

ஆவடியை சேர்ந்தவர் டெய்சி. இவருக்கும் அருண் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்துள்ளது. டெய்சி வுடன் வாழப்பிடிக்காமல் அருண் தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து டெய்சி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியை அருண் தரப்பினர் நன்கு கவனித்து இருக்கிறார்கள். இப்போது இரண்டரை வயது குழந்தையுடன் டெய்சி தனிமரமாக தவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சமரச தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து சமூக சேவகர் பொன்சேகரிடம் பேசினோம். "குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் விசாரிக்கவும், தங்களது பிரச்னைகளை தயங்காமல் பெண் போலீஸாரிடம் சொல்லவும் வசதியாக முதல் மகளிர் போலீஸ் நிலையம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1992ல் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை உள்பட தமிழகத்தில் 198 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆனால் இந்த மகளிர் போலீஸ்  நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. விசாரணைக்கு அழைத்து வருபவர்களிடம், அங்குள்ள அதிகாரிகள் அநாகரீகமாக கேள்விகளை கேட்கின்றனர்.

ஜட்டியோடு ஆண்களிடம் விசாரணை நடத்தும் சம்பவங்களும் சில ஸ்டேஷன்களில் நடக்கின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள்" என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் முஜிபூர் ரகுமான் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங் களில் கவுன்சலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். குடும்ப பிரச்னைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நாட்டாண்மை போல மகளிர் இன்ஸ்பெக்டர்கள் செயல்படுகிறார் கள். காவல் துறையினர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை.

அதை விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். காவல் நிலையங்களில் அநாகரீகமாக நடந்த காவல்துறை யினர் மீது பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு நீதி பெற்று இருக்கிறார்கள்" என்றார்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து பாதிக்கப்பட் டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கவுன்சலிங் மையத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கவுன்சலிங் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. கவுன்சலிங் மூலம் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்தில் நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமலும், யாருக்கும் பயப்படாமலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. புகார் கொடுத்தால் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமை" என்றார்.

அதிகாரியின் கருத்தை பின்பற்றுமா மகளிர் காவல் நிலையங்கள்...?

- எஸ்.மகேஷ்
படம்: ஜெ. வேங்கடராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க