வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (08/04/2015)

கடைசி தொடர்பு:12:31 (08/04/2015)

மருந்தாகும் இசை!

''பிடித்தமான பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளி, அன்றைய நாளையே இனிமையாக்கிவிடுகிறது.  'மூட் அவுட், என்றால் உடனே, பிடித்த பாடல்களை கேளுங்கள்' என்கிறோம். மனசுக்கும் இசைக்கும் ஏராளமான தொடர்பு உண்டு. நம் அன்றாட வாழ்வில் கடந்து வரும் சில நோய்களை கசப்பான மாத்திரைகள் இல்லாமல், வலி தரும் ஊசிகள் இல்லாமல் நோயையோ அதன் வீரியத்தையோ குணப்படுத்த முடியும்" என்கிறார் விஷ் ட்ரீ அமைப்பின் மருத்துவர் ரேகா ராஜேஷ்வரி.

தெரபியாகும் இசை

இசையின் மூலம் நோயை குணப்படுத்தக் கூடிய ஒருவகை சிகிச்சைதான் இந்த மியூசிக் தெரபி. நோயை மட்டுமின்றி மனிதனுக்கு தேவைப்படுகிற ஒய்வு, நினைவாற்றல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய சிகிச்சையும் இதுவே.

மருந்தாக செயல்படும் இசை

மனதுக்கும், மூளைக்கும் இதமான வகையில் மெல்லிய இசைக்கருவிகளால் வாசிக்கப்பட்ட வருடும் இசை.  பாடல் வரிகள் இல்லாத இசை கருவிகளால் மட்டுமே வாசிக்கபட்டு தற்போது சிடிகளாக கடைகளில் விற்கப்படுகிறது. இதை நாள்தோறும் சில நிமிடங்களுக்கு கேட்கலாம்.

இசையால் தீரும் நோய்கள்

கவன திறன் மற்றும் நினைவாற்றல் பெருக, மன சோர்வு நீங்க, சர்க்கரை நோய் குணமாக, பயம் மற்றும் கவலைகள் நீங்க, இதயத்தின் செயல்பாடு சீராக, மன அமைதி பெற, கருவுற்று இருக்கும் பெண்களுக்காக, தூக்கம் மற்றும் ஒய்வு கிடைக்க, மன அழுத்தம் மற்றும் பளு குறைய, அறிவு மற்றும் படைப்பாற்றல் திறன் ஒங்க, வலி குணமாக, தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி நீங்க, குழந்தை அழுவதை நிறுத்த, ஓய்வை நிம்மதியாக அனுபவிக்க, குழந்தை தூங்குவதற்கு போன்ற பல சிடிகள் உள்ளன.

கருவுற்ற பெண்களுக்கு...

கருவுற்ற பெண், 19- வது வாரத்திலிருந்து இசையை கேட்கத் தொடங்கலாம். தொடர்ந்து கேட்கையில், ஒருநாள் இசையை கேட்காமல் விட்டாலும் வயிற்றிலிருக்கும் கரு 'கிக்' (kick) மூலமாக தன் தாய்க்கு நினைவுப்படுத்தும். இத்தகைய அனுபவத்தை மியூசிக் தெரபி சிகிச்சையை மேற்கொண்ட அனைத்து பெண்களும் உணர்ந்திருக்கின்றனர். இந்தச் சிகிச்சை எடுத்தால் இந்த அனுபவத்தை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் உணரலாம். மேலும், கர்ப்ப காலத்தில் மனஉளைச்சல் இருந்து, அதனுடைய பாதிப்பு இருக்குமானால் அதன் பளுவாக கை, கால்கள், முகம் போன்றவை வீங்கும். இசையை கேட்கும்போது மகிழ்ச்சியான மனநிலை உருவாகுவதால் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படாது.
 
மியூசிக் தெரபியின் பலனாக சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உண்டு. குழந்தையின் முன்பக்க மூளை (Prefrontal lobe) சீராக வளர்ந்து, படைப்பாற்றல் திறனை வளர்க்கும். குழந்தை பிறந்த பிறகும் தனது 7 வயது வரை இந்த இசையின் பலன்கள் இருக்கும். ஒரு ஓவியத்தை கற்க குழந்தைக்கு  4 மாதங்கள் தேவைப்படும்.  ஆனால், மியூசிக் தெரபி கேட்கப்பட்டு பிறந்த குழந்தைக்கு ஒரு மாத காலம் (4:1)  மட்டுமே தேவைப்படும். வெகு சீக்கிரத்தில் அனைத்து கலைகளையும் கற்றுக் கொள்ளும் திறன் குழந்தைக்கு இருக்கும் என்பது மியூசிக் தெரபியின் சிறப்பு. புரிந்து கொள்ளும் திறன், தெளிவான மனப்பான்மை போன்ற நல்ல குணங்களுடன் குழந்தை வளர தொடங்கும்.

மியூசிக் தெரபி எப்படி வேலை செய்யும்...

நோயை பற்றி கவலைப்படாமல் இசையை கேட்கத் தொடங்கலாம். நாளடைவில் அதன் வீரியம் குறைந்து முன்னேற்றம் தென்படும். உதாரணத்துக்கு, கணையத்தின் செயல்பாட்டின் திறன் மேம்படுவதால், சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோனின் செயல்பாட்டை அமைதிப்படுத்துவதால், மன அழுத்தம் குறையும். இப்படியாக, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு வகையான இசை ஒலிக்கப்படும்.  இதனால், நோயும் அதன் தீவிரத்திலும் நிச்சயம் மாற்றம் ஏற்படும். ஒருநாள் மட்டுமே இசையை கேட்டுவிட்டு நோய் குணமாகவில்லையே என்று எண்ணுதல் தவறு. மியூசிக் தெரபி என்பது ஒர் தொடர் சிகிச்சை. தொடர்ந்து கேட்கையில் பலன்கள் கிடைப்பது உறுதி. இருவேளை பல் தேய்ப்பது போல, இருவேளை குளிப்பது போல நம் அன்றாட வாழ்வில்  சில நிமிடங்களை இசையைக் கேட்பதற்காக ஒதுக்குவது சிறப்பு. இதனால் நல்ல உணர்வுகளும், ஆரோக்கியமும் நிச்சயம் நமக்கு தொடர்ந்து இருக்கும். 

இசையின் பலன்கள்

இசையை கேட்போரின் மனதில் நல்ல உணர்வுகள் மேம்படும். மனப் பிரச்னைகள் விலகும்
சுகபிரசவம் நடக்க வாய்ப்புகள் அதிகம். பிரசவ வலி கூட குறையலாம்.
குழந்தைகளின் நடத்தையில் முன்னேற்றம், படைப்பாற்றல் திறன், கவன திறன், நேர்மறை சிந்தனைகள் போன்ற நன்மைகள் நடக்கும்.
ஆட்டிஸம் குழந்தைகளின் நடத்தையில் கூட முன்னேற்றத்தை காண முடியும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
கர்ப்ப கால சுமைகள் இல்லாத மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும்.
அமைதியான சூழல் உருவாகும். மன அமைதி கிடைக்கும்.
தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை நீங்கி ஆழ்ந்த தூக்கம் வரும்.
தீராத வலிகளிலிருந்தும் விடுபடலாம்.

- ப்ரீத்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்