வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (12/02/2018)

கடைசி தொடர்பு:17:29 (12/02/2018)

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அப்டேட்ஸ் 2

புது YZF-R15 V3.0 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் யமஹா.

 

Yamaha R15

6 வருஷ காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக அப்டேட் ஆகிவிட்டது யமஹா R15. தற்போது வெளிவந்துள்ள யமஹா R15 V3.0 எனும் மூன்றாவது தலைமுறை ஆர்.15 பைக் ரேஸ் பிரியர்கள் வெகுகாலம் எதிர்பார்த்த பைக். முன்பைவிட டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் பலத்த முன்னேற்றம் கண்டிருக்கும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.25 லட்சம் (டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய YZF-R15 V3.0 பைக்கின் வடிவமைப்பு, YZF-R1 பைக்கை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இரட்டை LED ஹெட்லைட்டுக்கு (DRL உடன்) நடுவே ஸ்டைலாக இருக்கும் ஏர் வென்ட் மற்றும் LED டெயில் லைட், இதற்கான சிறந்த உதாரணம். மேலும் ஃபுல்ஃபேரிங்கும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது. 41 மிமீ டெலஸ்கோப்பிக் ஃபோர்க், 100/80 17 சைஸ் முன்பக்க டயர், 140/70 17 பின் பக்க டயர், முன் பக்கம் இரண்டு பிஸ்டன் கேலப்பர்கள் கொண்ட 282 மிமீ டிஸ்க் பிரேக், பிக் பக்கம் தற்போது உள்ள R15 பைக்கில் உள்ள அதே சிறிய டிஸ்க் பிரேக்தான் உள்ளது. ஏபிஎஸ் ஆப்ஷினலாக கூட இந்த பைக்கில் தரவில்லை.

இந்த பைக்கின் 155 சிசி, SOHC, 4 வால்வ் FI இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 19.3hp பவரை தரக்கூடியது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியுடன் வரும் இந்த பைக்கில் Assist & Slip க்ளட்ச் தொழில்நுட்பம் உள்ளது. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், USB சார்ஜிங் போர்ட்டும் கூட உள்ளது. YZF-R15 V2.0 விட V3.0 விலை அதிகமாக உள்ளது. அதிக விலை கொடுப்பதற்கு இந்த பைக் வொர்த்தா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஹோண்டா CR-V

 

Honda CR-V

முதன்முறையாக 1.6 லிட்டர் டீசல் இன்ஜினுடன், ஐந்தாம் தலைமுறை CR-V எஸ்யூவியை காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா. 160hp பவர் கொண்ட இந்த கார், ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அதிக இடவசதி மற்றும் 7 சீட்களைக் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவி, அக்கார்டு ஹைபிரிட் செடானில் இருப்பதுபோன்ற கேபின் மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏப்ரிலியா மற்றும் பியாஜியோ ஸ்கூட்டர்கள்

 

Aprilia scooter

ஏப்ரிலியா மற்றும் பியாஜியோ நிறுவனம் ஏப்ரிலியா SR 125, பியாஜியோ வெஸ்பா Elettrica மற்றும் ஏப்ரிலியா strom என்ற மூன்று புதிய ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா SR 125 இந்தியாவில் ரூ.65,310/- எக்ஸ் ஷோரூம் (புனே) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 125 cc, 3 வால்வ் இன்ஜின், 14 இன்ச வீல், 120/70 சைஸ் டயர் என்று அம்சமாக உள்ளது ஏப்ரிலியா. SR 1500 பைக்கின் மினி வெர்ஷன்தான் இந்த SR 125. இதில் 9.5hp பவர் மற்றும் 9.9Nm டார்க்கும் உள்ளது. முன் பக்கம் 220 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. SR 150 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 6.5 லிட்டர் பெட்ரோல் டாங்க்தான் இதிலும் உள்ளது.

SR125 ஸ்கூட்டருடன் அதன் இன்னொரு வேரியண்ட்டான ஸ்டார்ம் 125 எனும் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஏப்ரிலியா. SR125 ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது இதில் 12 இன்ச் வீல் மற்றும் ஆஃப் ரோடு டயர்கள் உள்ளது. வீலின் டிசைனும் மாறுபட்டுள்ளது. 120/80 சைஸ் முன்பக்க டயரும் 130/80 சைஸ் பின்பக்க டயரும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் மேட் ஃபினிஷில், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் வருகிறது. இந்த ஸ்கூட்டருக்கு வின்ட் ஸ்கிரீன் போன்ற கூடுதல் அசிஸ்செரிஸும் வருகிறது. 9.5hp பவரும் 9.9Nm டார்க்கும் தரக்கூடியது இந்த ஸ்கூட்டர்.

ஏப்ரிலியாவின் இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் அனைத்து வெஸ்பா மற்றும் ஏப்ரிலியாவின் ஷோரூம்களில் கிடைக்கும்.

ஏப்ரிலியாவின் இந்த ஸ்கூட்டர்களுக்கு இடையில் பியாஜியோ தனது வெஸ்பா Elettrica ஸ்கூட்டரையும் வைத்துள்ளது. ஒரு முழு சார்ஜில் 100 கிலோ மீட்டர் தூரம் போகும் இந்த ஸ்கூட்டரின் கான்சப்டை மட்டுமே தற்போது காட்சிக்கு வைத்துள்ளது பியாஜியோ. இது இந்தியாவில் விற்பனைக்கு வருமாக என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

 

புது ஹூண்டாய் ஐ20 எலீட் (I20 Elite)

Hyundai i20 elite

ஹூண்டாயின் புதிய ஐ20 எலீட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஐ20 எலீட்டின் பெட்ரோல் இன்ஜின் கார் Rs 5.34 லட்சம் முதல் 7.90 லட்சம் எனவும், டீசல் கார் விலை Rs 6.73 லட்சம் முதல் Rs. 9.15 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கூட்டணி 83bhp பவரையும், 11.5 kgm டார்க்கையும் தரவல்லது. இதில் உள்ள 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் கூட்டணி 89bhp பவரையும் 21.9 kgm டார்க்கையும் தரும். எலீட் ஐ20-யின் டிசைன் அம்சங்களாக ஷார்ப்பான DRL உடன் கூடிய LED ப்ரோஜக்டர் ஹெட்லைட்டுகள், டூ பீஸ் டெயில் லைட், 16 இன்ச் அலாய் வீல், கருப்பும் சிகப்புமாக இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் போன்ற மாற்றங்கள் உள்ளன. காரின் உள்பக்கத்தில் black மற்றும் Beige நிறம் கலந்த இரண்டு வண்ண இன்டீரியர் வேலைப்பாடுகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், Arkamys நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆண்டராய்ட் ஆட்டோ, ஆப்பில் கார்பிலே என்று பல வசதிகள் உள்ளது. பாதுகாப்பைப் பொருத்தவரை இரண்டு ஏர் பேக்கும், ஏபிஎஸ் வசதியும் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. விலை உயர்ந்த வேரியண்டில் 6 ஏர்பேக் வசதி உள்ளது. கூடுதலாக ஹூண்டாய் நிறுவனம் எலீட் ஐ20 வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டு/11 லட்சம் கி.மீ வாரண்ட்டி தரவுள்ளது.

 

ஹூண்டாய் அயனிக் (Ioniq)

Hyundai Inoniq

ஐ20 எலீட் காருடன் ஹூண்டாய் தனது அயனிக் ஹைப்ரிட் மற்றும் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அயனிக் மின்சார காரின் 120 bhp, 29.5 kgm டார்க் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கிறது. இந்த கார் 9.9 விநாடியில் 0-100 கி.மீ-யை எட்டுமாம். ஃபுல் சார்ஜில் 280 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம், இதன் டாப் ஸ்பீடு 165 கி.மீ என்று சொல்கிறது ஹூண்டாய். ஹைப்ரிட் காரை பொருத்தவரை 43hp பவரும்17 kgm டார்க்கும் தரும் மோட்டார் உள்ளது. இந்த மோட்டாருக்கு 1.56kWh lithium-ion-polymer பேட்டரியில் இருந்து பவர் கிடைக்கிறது. இன்ஜின் மற்றும் மோட்டார் சேர்ந்து 139hp பவரும் 26.5kgm டார்க்கும் இந்த காரில் இருந்து கிடைக்கும். இதன் டாப் ஸ்பீடு 185 கி.மீ.

தற்போது இந்தியாவிற்கு ஹைப்ரிட் காரை மட்டுமே கொண்டுவர முடிவுசெய்துள்ளதாம் ஹூண்டாய்.

கியாவின் (Kia) முதல் கார்..

 

Kia

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வருவதாக உத்தேசித்து தள்ளிபோய்கொண்டிருந்த கியாவின் இந்திய பிரவேசம் துவங்கிவிட்டது. கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவுக்கான தனது முதல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

SP எனப்படும் கான்சப்ட் எஸ்யூவிதான் இது. முன்பே டீசர் படங்களை வைத்து மிரட்டியிருந்தாலும், நேரில் பார்க்க கார் மிகவும் அகலமாகவும், பெரியதாகவும் உள்ளது. முன் பக்கத்தில் டைகர் நோஸ் க்ரில், ஷார்ப்பான டிசைன் - ஆஜானுபாகுவான பாடி லைன் - சாய்ந்து இருப்பதைப் போன்ற c-pillar மற்றும் ரூஃப் - காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் கியாவின் ஆப்டிமா கரை போன்ற உள்ள மெல்லிசான LED லைட்கள், பெரிய பனி விளக்கு, தடிமனான வீல் ஆர்ச், டைமண்ட் கட் அலாய் வீல், காரின் கலருக்கு முரணான கலரில் ரூஃப் என கணிசமான அம்சங்கள் அசத்தலாக உள்ளது. '' இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீனமான பாணியில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் எஸ்யூவி '' என இதைத் தெரிவித்துள்ளது கியா மோட்டார்ஸ்.

தற்போது வைக்கப்பட்டுள்ளது கான்சப்ட் என்பதால் இதில் இருக்கும் சில அம்சங்கள் தயாரிக்கப்படும் காரில் இருந்து வேறுபடலாம். 2019-ல் சந்தைக்கு வரவிருக்கும் இந்த காரின் இன்ஜின் பற்றிய தகவல்களை இன்னும் வெளியிடவில்லை இந்நிறுவனம். மேலும் கியாவின் ஸ்டாலில் உலக சந்தையில் அறிமுகப்படுத்த வைத்துள்ள 16 புதிய மாடல் கார்களும் உள்ளது.

 

இந்தியாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹோண்டா சிவிக் (Civic)

 

HONDA CIVIC - Auto Expo

 

அமேஸ் மட்டுமல்ல, அமேஸிங்கா இன்னும் கொஞ்சம் இருக்கு என்று தனது புதிய சிவிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய கார் மார்கெட்டில் விசாரித்தால் தெரியும் சிவிக்கின் பெருமை. இன்றும் இந்தக் காரை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் உள்ளனர்.

சிவிக் காரின் தயாரிப்பை 2013-ல் நிறுத்தியது ஹோண்டா. தற்போது 2019-ல் அதிரடியாகக் களமிறங்கவுள்ளது புது சிவிக். பத்தாவது தலைமுறை காரான இது மிகவும் நேர்த்தியாகவும், ஸ்போர்ட்ஸ் கார் போல உயரம் குறைவானதாகவும், காரின் பக்கவாட்டு பகுதி, போனட் என்று பார்க்கும் இடமெல்லாம் ஸ்போர்ட்டியாக ஏரோ டைனமிக் வடிவமைப்புடன் உள்ளது. காரின் பின் பக்கம் சாதாரண செடான் போன்று இல்லாமல், ஃபாஸ்ட்பேக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது பெரிய சர்ப்ரைஸ். காரின் இன்டீரியர்களும் ஸ்பேர்ட்ஸ் கார் போலவே உள்ளது. உயரம் குறைவான சீட், பெரிய டச் ஸ்கிரீன் கொண்ட சென்டர் கன்சோல் உள்ளது. பின்பக்க சீட்டில் லெக் ரூம் குறைவாக உள்ளதுபோல தெரிகிறது.

இதுவரை பெட்ரோல் இன்ஜினோடு மட்டுமே கிடைத்துவந்த சிவிக், தற்போது டீசல் இன்ஜினோடும் வரவுள்ளது. அமேஸ் போலவே சிவிக் காரும் 2019-ல் ஷோரூம்களுக்கு வரவுள்ளது.

 

புதிய இரண்டாம் தலைமுறை அமேஸ் (Amaze)

ஹோண்டாவின் இரண்டாம் தலைமுறை அமேஸ் செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாவது அறிமுகமாக வந்துள்ளது. 2013-ல் லாஞ்ச் செய்யப்பட்ட இந்த அமேஸ் சிறிய செடான் வரிசையில் அமோக வரவேற்பை பெற்றது.

 

அமேஸ்

 

தற்போது வெளிவந்துள்ள அமேஸ் ஹோண்டாவின் முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் வரவுள்ளது. சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறை அமேஸில் கேபின் பெரிதாகவும் வசதியாகவும் உள்ளது. பழைய அமேஸ் சிட்டி காரை வைத்து வடிவமைக்கப்பட்டது, 2-ம் தலைமுறை அமேஸ் ஹோண்டாவின் அக்கார்டு காரை உதராணமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவாக இருக்கும் கார் என்றாலும், வசதிகளில் குறைவில்லை. காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கருப்பு மற்றும் Beige நிறத்தில் இன்டீரியர் வேலைபாடுகள், முந்தைய தலைமுறை அமேஸை விட அதிக இடவசதி என்று புது அமேஸ் கலக்குகிறது. இன்ஜின் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த இரண்டாம் தலைமுறை அமேஸ் பிரத்தியோகமாக இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள ஹோண்டாவின் ரிசர்ச் சென்டரில் இந்த கார் உருவாகியுள்ளது.

 

ஆட்டோ எக்ஸ்போ

 

மாருதி சுஸூகி Future S - க்ராஸ்ஓவர் கான்செப்ட்

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு அதிரடி துவக்கத்தை அளித்துள்ளது மாருதி. மாருதி சுஸூகி தனது Future S - க்ராஸ்ஓவர் கான்செப்ட் காரை வெளியிட்டுள்ளது. மாருதியில் இருந்து இனி வரப்போகும் கார்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்தான் இந்த Future S கான்சப்ட்.

Auto Expo

 

ஆல்டோ, ஸ்விஃப்ட் போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்கு பெயர் பெற்ற மாருதியின் கைவண்ணம் இந்த எஸ்.யூ.வியிலும் தெரிகிறது. உயரமான, ஆனால் மிகச் சிறிய போனட், பக்கவாட்டில் அகலமான வளைவுகள் என புதிய முயற்சிகள் பல உள்ளன. இன்னும் பல கார்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. முதல் காரே அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. தற்போது மாருதியிடம் உள்ள ஒரே எஸ்.யூ.வியனா விட்டாரா பிரெஸ்ஸாவின் வரிசையில் Future S concept விரைவில் இணையும்.