Published:Updated:

"ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்க முடியாது; மீறி எடுத்தால்..."- ஆயுஷ் செந்தமிழ்ச் செல்வன்

ஷர்மிகா சரண்
News
ஷர்மிகா சரண்

"ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதமானது. ஷர்மிகாவிடம் பேசினேன். அவர், 2020-ம் ஆண்டுதான் படிப்பையே முடித்திருக்கிறார். இறைவனால்தான் குழந்தை பிறக்கும் என்று அவர் கூறியது சரிதான்." - ஆயுஷ் மருத்துவர்கள் நலச் சங்கத் தலைவர் செந்தமிழ் செல்வன்

"ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்க முடியாது; மீறி எடுத்தால்..."- ஆயுஷ் செந்தமிழ்ச் செல்வன்

"ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதமானது. ஷர்மிகாவிடம் பேசினேன். அவர், 2020-ம் ஆண்டுதான் படிப்பையே முடித்திருக்கிறார். இறைவனால்தான் குழந்தை பிறக்கும் என்று அவர் கூறியது சரிதான்." - ஆயுஷ் மருத்துவர்கள் நலச் சங்கத் தலைவர் செந்தமிழ் செல்வன்

Published:Updated:
ஷர்மிகா சரண்
News
ஷர்மிகா சரண்
"மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசும் சித்த மருத்துவர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருந்தார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குநர் பார்த்திபன். இந்நிலையில், டாக்டர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கேட்க டாக்டர் ஷர்மிகாவைத் தொடர்புகொண்டோம். அவர், போனை எடுக்கவில்லை. ஷர்மிகாவுக்கு ஆதரவாக இருக்கும் ஆயுஷ் மருத்துவர்கள் நலச் சங்கத்தின் தலைவர், டாக்டர் செந்தமிழ்ச் செல்வனைத் தொடர்புகொண்டு பேசினோம்,

"கடந்த 1956-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில், 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவ தொழில் ஆற்றுனர்கள் பதிவுச்சட்டம்' கொண்டுவரப்பட்டது. அதன்படி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இந்திய மருத்துவ பட்டப்படிப்புகளைத் துவங்கும் கல்லூரிகளுக்கு தமிழக அரசே அனுமதி கொடுத்துவந்தது. ஆனால், இந்த அனுமதியை மத்திய அரசே கொடுக்கவேண்டும் என்பதற்காக, கடந்த 1970-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 'இந்திய மருத்துவ மத்திய கழகச் சட்டம்' கொண்டு வந்தார். அந்தச் சட்டத்தின்படி, இந்திய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கவுன்சில்கள் துவங்க மத்திய அரசிடம்தான் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உருவானது. இதன்மூலம், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

இதனை, எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் உரிமை அந்தந்த மாநிலத்திடமே இருக்கவேண்டும் என்பதற்காக, கலைஞர் ஆட்சியில் கடந்த 1997-ம் ஆண்டு 'சித்த மருத்துவ தொழில் ஆற்றுனர் பதிவுச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. அதனுடன், தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலையும் உருவாக்கினார்கள். இதனை சட்டமாக்க குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் கேட்டு அனுப்பியதற்கு, இப்போதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. சித்த மருத்துவ தொழில் ஆற்றுனர் பதிவுச் சட்டத்தில் உள்ள முக்கியமான சில பிரிவுகளை நீக்கினால்தான், ஒப்புதல் அளிப்பேன் என்கிறார் குடியரசுத் தலைவர்.

டாக்டர் செந்தமிழ் செல்வன்
டாக்டர் செந்தமிழ் செல்வன்

இதற்காக, ரஜினிகாந்த் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு தொடர்ந்த வழக்கிலும், கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசுதான் சித்த மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கமுடியும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இப்போதுவரை, ஒப்புதல் கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சித்த மருத்துவ தொழில் ஆற்றுனர் பதிவுச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள டாக்டர் ஷர்மிகா மட்டுமல்ல, 1997-ம் ஆண்டுக்குப்பிறகு பதிவு செய்த 7,000 சித்த மருத்துவர்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததால் சட்டப்படி சித்த மருத்துவர்களே கிடையாது. ஒப்புதலே கிடைக்காத சித்த மருத்துவ கவுன்சிலின் இயக்குனர் எப்படி, ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்க முடியும்? குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்காக போராடாமல், சட்டத்திற்குப் புறம்பாக ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் கொடுத்து அச்சுறுத்துகிறார்கள். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான், அவர்களின் அதிகாரமும் நடைமுறைக்கு வரும். அதனால், ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது சட்டவிரோதமான செயல்.

ஷர்மிகா சித்த மருத்துவ பட்டப்படிப்பை முடித்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி என இந்திய மருத்துவத்தைப் படிப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைந்த ஆங்கிலப் படிப்பையும் சேர்த்துதான் படிக்கிறார்கள்.

உதாரணமாக, சித்த மருத்துவப் படிப்பான பி.எஸ்.எம்.எஸ் படிப்பில் பி.எஸ் என்பது பேச்சிலர் ஆஃப் சித்தா, எம்.எஸ் என்பது மெடிசின் அண்ட் சர்ஜரி. இதில், மெடிசின் அண்ட் சர்ஜரி ஆங்கில மருத்துவமான அலோபதிதான். சித்த மருத்துவம் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறது. ஆங்கில மருத்துவம் மாட்டுக்கறி சாப்பிடச் சொல்கிறது. இரண்டையும் சேர்த்துதான் ஷர்மிகா, ஒரு இடத்தில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனவும், மற்றொரு இடத்தில் மாட்டுக்கறி சாப்பிடலாம் என்றும் கூறியிருக்கிறார்.

ஷர்மிகா சரண்
ஷர்மிகா சரண்

அதேபோல, நுங்கு சாப்பிடுவதும் சித்த மருத்துவத்தில் உள்ளது. லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றில், சிலதான் சித்த மருத்துவ பாடநூல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இறைவனால்தான் குழந்தை பிறக்கும் என்பதும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. மனித கருதரிப்பதற்கு உடலுறவு மட்டும் போதாது கடவுள் உருவாக்கிய 11 தத்துவங்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷர்மிகா இளம் மருத்துவர் என்பதால், அவர் அனைத்தையும் படித்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2020-ம் ஆண்டுதான் மருத்துவப் படிப்பையே முடித்திருக்கிறார்.

அதேநேரம், ஷர்மிகா சித்த மருத்துவத்தில் உள்ள முழு உண்மைகளை வெளியே சொல்லாமல் அரைகுறையாக பேசி சர்ச்சையில் மாட்டியது மட்டுமே, இதற்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவரது அம்மா டெய்சி சரண் பா.ஜ.கவில் இருக்கிறார் என்பதும் காரணம் கிடையாது. கடவுளுக்கு இணையாகப் பார்க்கப்படுவதால், உரிய சமூகப் பொறுப்புடன் மருத்துவர்கள் நடந்துகொள்ள வேண்டும். ஷர்மிகா அதை செய்யத் தவறிவிட்டார்" என்று ஷர்மிகாவின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் டாக்டர் செந்தமிழ் செல்வனிடம் "ஷர்மிகாவிடம் பேசினீர்களா? அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?" என்று கேட்டோம்,

"இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் நோட்டீஸ் இன்னும் தனக்கு வரவில்லை என்று கூறிய ஷர்மிகா, தன்மீது நடவடிக்கை எடுத்தால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றார். அவர் சட்டப்படி எதிர்கொள்ளட்டும். நாங்கள் ஷர்மிகாவுக்கு ஆதரவாக இருப்போம். தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனருக்கும் இணை இயக்குனருக்கும் எங்கள் மருத்துவச் சங்கம் மூலம் விளக்கம் கேட்டு நாங்கள் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார். அலைகள் ஓய்ந்தால்கூட டாக்டர் ஷர்மிகா குறித்த சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போல!