இந்தியாவின் மொத்த சில்லறைக் கடன்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மட்டும் 40% அளவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தற்போது வந்துள்ள புள்ளிவிவரம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து ஒப்பிடும்போது, 32% பேர் இந்த மூன்று மாநிலங்களிலிருந்து கடன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ரூ. 2,77,400 கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி உள்பட இந்தியாவிலுள்ள பத்து பெரிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வாங்கியுள்ள கடன் தொகை ரூ.21,27,400 கோடியாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக சில்லறை விற்பனை வளர்ச்சியடைந்துள்ளதால், கடன் வாங்குவோரின் அதிகரித்திருப்பதாக ட்ரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் கடன் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது ஏன், இதனைக் கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கர் சித்திக்கிடம் கேட்டோம்.
“சில்லறைக் கடன்கள் எனப்படுவது வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன், கல்விக் கடன், வீட்டு உபயோகப்பொருள்களுக்காக வாங்கும் லோன் போன்றவற்றைக் குறிக்கும். மொபைல், உடைகள், காலணிகள் எனப் பலவற்றிற்கும் தற்போது கடன் தரப்படுகிறது. தற்போது கடன் வாங்குவது மிகவும் எளிமையாகி இருப்பதால், பலருக்கும் கடன் வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. தொழில்வளம் நிறைய இருப்பதால், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், இங்கே கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்கள் குறித்த புகார்கள் குறைவாக இருப்பதால், எளிதில் கடன் கிடைக்கிறது.

இன்னொருபுறம், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உயர, செலவழிக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்குமுன், வீட்டுத் தேவைகளுக்காக நம்மிடமிருந்த சேமிப்புடன் ஒப்பிட்டால், தற்போது மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. (பார்க்க, வரைபடம்) 2012-13 நிதியாண்டில் 23.6% என்ற அளவிலிருந்த சேமிப்பு, கடந்த 2017-18 நிதியாண்டில் 16.3% ஆகக் குறைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய இந்தியாவிலுள்ள எட்டு பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் மட்டுமே 40% சில்லறைக் கடன்களை வாங்குகின்றனர்.
கடன் பெற்ற வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்யும் ட்ரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீடு வழங்குகிறது. சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால், அதாவது 750 புள்ளிகளுக்குமேல் இருந்தால் கடன் வாங்குவதற்கான பொருளாதாரச்சூழல் நல்ல முறையில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், 750 புள்ளிகளைவிடக் குறைவாக இருந்தால், கடன் வாங்குவதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவைப் பொறுத்தவரை, பணம் செலுத்த 10% பேர் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதில் கிரெடிட் கார்டுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவந்த கிரெடிட் கார்டுகள் பயன்பாடு 3.5 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண்டுக்கு 30 - 40% அதிகரிக்கிறது. சராசரியாக மாதத்திற்கு ரூ.21,700 கோடி கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், ரூ.40,600 கோடி டெபிட் கார்டுகள் மூலமாகவும் செலவழிக்கப்படுகின்றன.
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் கடனை இ.எம்.ஐ-ஆக மாற்றி திருப்பிச் செலுத்துகிறார்கள். கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதம் தோராயமாக ஆண்டுக்கு 32 - 52 சதவிகிதமாக இருப்பதால், கடனை முழுவதும் முறையாகத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகிறார்கள்.

சிறிய தேவைகளுக்காக பர்சனல் லோன் வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இதில் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறுபவர்களின் எண்ணிக்கை காலாண்டுக்கு காலாண்டு 1% அதிகரித்து வருகிறது. வாகனக் கடன் வாங்குபவர்கள் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அதிகம் உள்ளனர். இந்தக் கடனைத் திரும்ப செலுத்தத் தவறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சொத்து அடமானக் கடன் வாங்குவது 20% அதிகரித்துள்ளது. வீட்டுக் கடனுக் கான மாதாந்திர இ.எம்.ஐ அளவு ஒருவரது மாத சம்பளத்தில் 40% என இருந்தது 55% என்கிற அளவுக்கு கடன் வழங்குபவர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன், 0% வீட்டு உபயோகப் பொருள் லோன் எனப் பல்வேறு வகையான லோன்கள், கவர்ச்சிகர மான விளம்பரங்களுடன் நம்மைக் கடன் வாங்கத் தூண்டுகின்றன. இவற்றால் ஆர்வம் உந்தப்பட்டு நம்முடைய பொருளாதாரச் சூழலை மீறி கடன் வாங்கும்போது நிதி நெருக்கடியைச் சந்திக்க நேர்கிறது. இந்த நெருக்கடி நம் சந்ததிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, கடன் வாங்குவதில் கவனத்துடன் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்” என்றார்.
கடனில் சிக்காத வரை வாழ்க்கை மகிழ்ச்சிதான்!
- அபுபக்கர் சித்திக்
தெ.சு.கவுதமன்