Published:Updated:

`மூன்றரை ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி!'- மினிமம் பேலன்ஸால் கல்லா கட்டிய வங்கிகள்!

`மூன்றரை ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி!'- மினிமம் பேலன்ஸால் கல்லா கட்டிய வங்கிகள்!
`மூன்றரை ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி!'- மினிமம் பேலன்ஸால் கல்லா கட்டிய வங்கிகள்!

எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸைவிட 75 சதவிகிதம் குறைவாக இருந்தால், 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாகவும், மினிமம் பேலன்ஸ் 50-75 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் 75 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணமும், 50 சதவிகிதத்துக்குக் கீழ் இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸைவிட குறைவாக இருந்தால், 20 முதல் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

இதே நடவடிக்கை மற்றபொதுத்துறை வங்கிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.10,391 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். 

அதில், ``இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் மினிமம் பேலன்ஸ் இல்லாத பொதுமக்களிடமிருந்து ரூ.1000 கோடி அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்றரை ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத பொதுமக்களிடமிருந்து ரூ.6,246 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து ரூ.2,894 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ரூ.493 கோடியும் வசூலாகியுள்ளது. 

இதேபோல் தங்கள் வங்கி ஏடிஎம்கள் இல்லாமல் அதிக முறை வேறு வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தியவர்களிடமிருந்து இந்த ஆறு மாதங்களில் ரூ.850 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் ரூ.4,145 கோடி வசூலாகியுள்ளது. இதிலும் அதிகபட்சமாக எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து ரூ.1,554 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ரூ.464 கோடியும் வசூலாகியுள்ளது