Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

மும்பை

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36சுவாமி தனது அலுவலகத்தில் இருந்தார். அவருக்கான நோட்டீஸ் காலத்தில் இன்னும் ஒரு மாதம் மீதம் இருக்கிறது. அவர் மாட்-யிடம், தான் விடுப்பில் செல்லலாமா எனக் கேட்டபோது, அவர் மிகவும் பெருந்தன்மையுடன் நோட்டீஸ் காலத்தின் கடைசி நாள் வரை ரீடெயில் பேங்கிங் பிரிவின் தலைவராகத் தொடர்ந்து செயல்படும்படி கூறினார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறும் சுவாமி கோபத்துடன் செல்லக்கூடாது என்றும், அவருக்குக்கீழ் வேலைபார்க்கும் குழுவினரின் மனநிலையிலும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் நினைத்தார்.

கணினியிலிருந்து எழும்பிய சின்ன சத்தம் யாரோ ஒருவர் அழைப்பது சுவாமிக்குத் தெரிந்தது. 

‘`ஹாய், சார்!”

சிறிது நேரத்துக்குமுன்பு என்.ஒய்.ஐ.பி-யின் ‘இன்டர்னல் சாட்’-ல் முகுந்த் அழைத்தார். அந்நியச் செலாவணிப் பிரிவில் அவர் வேலை பார்த்து வந்தார்.

‘`யெஸ், முகுந்த்?”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

‘`சார், வைஷ்ணவி மெட்டல் ஸ்ட்ரிப்ஸ் சம்பந்தப்பட்ட வேண்டுகோள் ஒன்றை உங்களின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறேன்’’.

‘`என்ன ஒப்புதல் அது?”

‘`சார், இறக்குமதி பில்லை செட்டில் செய்வதற்காக அவர்கள் 7,50,000 டாலரை வெளிநாட்டுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.”

‘`அந்த ரசீதுகளை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்ப முடியுமா?”

‘`ஏற்கெனவே அனுப்பியாச்சு, சார். இந்த நேரம் அது உங்களது இன்பாக்ஸை அடைந்திருக்கும்.”

‘`சரி, நான் பார்க்கிறேன்”

‘`ஓகே சார். கட்-ஆஃப் நேரத்தை நெருங்கிக்கொண்டிருக் கிறோம். எனவே, நீங்கள் உடனடியாகப் பார்த்துவிட்டு எனக்குச் சொன்னால் நல்லது.”

முகுந்த் டிரேட் ஃபைனான்ஸ் பிரிவில் இருந்தார். ரீடெயில் பேங்க் வாடிக்கையாளரைப் பொறுத்தவரையில் ஒரு மில்லியன் டாலரில் மூன்று பாகத்தை அனுப்புவது மிகப் பெரிய தொகையாகும். சுவாமி, பில்லைப் பரிசீலித்தார். வைஷ்ணவி மெட்டல் ஸ்ட்ரிப்ஸ் தனது தொழில் செயல்பாட்டிற்கான ஃபர்னஸ் மற்றும் அவன்களை இறக்குமதி செய்திருந்தது. இதில் ஏதோ பிரச்னை இருப்பதுபோல சுவாமி உணர்ந்தார். ஸ்டீல் விற்பனையில் இருக்கும் வைஷ்ணவி, செமிகண்டக்டர் தொழிலுக்குத் தேவையான பொருள்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் முகுந்தைத் தொடர்புகொண்டு, ‘`முகுந்த், இந்த ரசீதுகள் குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றன’’ என்றார்.

‘`என்ன சந்தேகம் சார்?’’

‘`வைஷ்ணவி ஏன் இந்தப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும்?”

‘`தெரியவில்லை, சார்’

‘`இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை யாராவது நேரில்  சென்று பார்த்தார்களா?”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

‘`இல்லை, சார்”

‘`அதிகப்படியான அந்நியச் செலாவணியைத் தரும்போது அதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டாமா?”

‘`வழக்கமாக நாங்கள் செய்வோம். ஆனால், வைஷ்ணவியைப் பொறுத்தவரை, எந்தவிதப் பரிசோதனையுமின்றி பணத்தை வழங்குமாறு மாள்விகா சொன்னார்.’’

‘`அதற்கு என்ன ஆதாரம்?’’

‘`ஆமாம், சார். மின்னஞ்சல் மூலம் கொடுத்த ஒப்புதல் இருக்கிறது.’’

‘`மாள்விகா கொடுத்த ஒப்புதல், அவர் கொடுத்ததாக இருக்கட்டும்.  நான் ஒப்புதல் தருவதற்குமுன்  அந்தப் பொருள்களைப் பார்வை யிட வேண்டும். பத்து நிமிடங்களில் என்னை வந்து பாருங்கள்”.
சுவாமி இதற்கு முன்பு இப்படி யெல்லாம் செய்ததில்லை. அவர் தன்னுடைய உள்ளுணர்வின்படி இதில் செயல்பட்டார்.

அவருடைய உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. கட்டப் பட்டிருந்த பெட்டிகளை யாரும் பிரிக்கமுடியாதபடி அடுக்கடுக் கான காப்புறைகளைக் கொண்டு சம்பந்தமில்லாத குப்பைகளைக் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.  இறக்குமதி ரசீதில் குறிப்பிடப் பட்டிருந்த பொருள்கள் எதையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பார்க்க முடியவில்லை. இது ஒரு அப்பட்டமான மோசடி எனத் தெரியவந்தது. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படாதப் பொருள்களுக்கு இறக்குமதியாளர் பணம் அனுப்ப முயற்சி செய்கிறார்.

‘`நாம் பணம் அனுப்ப ஒப்புதல் தரமாட்டோம் என வைஷ்ணவி யிடம் சொல்லுங்கள். அதோடு கறுப்புப் பணத்தை வெள்ளை யாக்கும் மோசடி குறித்து புகார் அளிப்போம் என்றும் சொல்லுங்கள்.”

‘`சார், அவர்கள் மாள்விகாவுக்கு மிகவும் வேண்டியவர்கள்.’’

‘`உங்களிடம் யார் அப்படி சொன்னது?”

‘`கடந்த வருடம் நான்கு, ஐந்து முறை இந்தமாதிரி பணம் அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மாள்விகா ஒப்புதல் அளித்திருக்கிறார்.’’

‘`என்ன ஜோக் அடிக்கிறீங்களா?”

‘`நான் அந்த ஒப்புதல்களை உங்களுக்கு அனுப்புகிறேன். எனக்கு  நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில், அவர்களுடைய முக்கியமான வணிகத்துடன் சம்பந்தமில்லாத இறக்குமதியாக இருந்ததுடன் சீராகவும் இல்லை என்பதை நானும் கவனித்தேன்’ என்றார்.

‘`விவரங்களை எனக்கு அனுப்புங்கள். எப்படியிருந்தாலும், இந்தப் பரிவர்த்தனையை ஹோல்ட் செய்துவையுங்கள். இதற்கான அந்நியச் செலாவணியை நாம் அனுமதிக்கப் போவதில்லை.”

சுவாமி தன்னுடைய அறைக்குள் நுழையும்போதே தொலைபேசி மணி அடித்துக்கொண்டிருந்தது. அவர் தனது அறையிலிருந்து வெளியே பார்த்தபோது அவருடைய செக்ரெட்டரி வேலையை முடித்து விட்டு போயிருந்தது தெரியவர தானே போனை எடுத்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

‘`சுவாமிகாரு?”

‘`யெஸ்”

‘`சார், நான் வைஷ்ணவி மெட்டல் ஸ்ட்ரிப்ஸிலிருந்து நாயுடு பேசுறேன்”

‘`சொல்லுங்கள், மிஸ்டர். நாயுடு’’  என்று பேசத் தொடங்கிய சுவாமிக்கு  இவ்வளவு சீக்கிரமாக அழைப்பு வந்தது அவருக்கு ஆச்சர்யம் தந்தது.

‘`சார், இன்னைக்கு எங்க ஆஃபிஸுக்கு வந்தீங்கபோல இருக்கு.’’

‘`ஆமாம். சரக்குகளைப் பரிசோதிக்க நான் அங்கே வந்தேன்.’’

‘`நீங்க எங்ககிட்ட சொல்லியிருந்தா, நாங்க உங்களை நல்லா கவனிச்சி ருப்போமே, சார்.’’

‘`உங்களுக்கு வெட்கமா இல்லையா, மிஸ்டர். நாயுடு? நீங்க வெளிநாட்ல கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி, பேங்க்கையும்,  நாட்டையும் ஏமாத்தப்பாக்குறீங்க!’’

சுவாமி சொன்னதைக் காதிலேயே வாங்காததுபோல, ‘`சார், நான் உங்களைச் சந்திக்க முடியுமா?”

‘`உங்களைச் சந்திக்கும்படி பிராஞ்ச் மேனேஜர்கிட்ட சொல்றேன். அதோட நாங்க போலீஸ்ல புகார் கொடுக்கப்போறோம்’’.

‘`சார், நீங்க எதுவும் செய்றதுக்கு முன்னால் ஒரு அஞ்சு நிமிஷம் என்னை மீட் பண்ணுங்க சார். உங்களை திருப்தி பண்ண முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.’’

‘`போதும், மிஸ்டர். நாயுடு! உங்க இஷ்டத்துக்கு வேலை செய்றதுக்கு எங்க பேங்க் ஒன்னும் நேர்மையில்லாத பேங்க் இல்லை.’’

‘`இல்லை, இல்லை சார், நான் அப்படிச் சொல்லல. நான் உங்க ஆபிஸ் வரவேற்புப் பகுதியிலதான் இருக்கேன். நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் கொடுத்த நான் உங்களுக்கு விளக்கிச் சொல்றேன்.’’

சுவாமி தனது கடிகாரத்தைப் பார்த்தார். பரிவர்த்தனை குறித்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால், தற்போதிருக்கும் சூழ்நிலையில் அவரால் ஐந்து நிமிடம் செலவிட முடியும். அவர் வரவேற்பாளரை அழைத்து  நாயுடுவை கான்ஃபரன்ஸ் அறையில் உட்கார வைக்குமாறு கூறிய அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த அறைக்குள் நுழைந்தார்.

‘`யெஸ், மிஸ்டர் நாயுடு?”

நாயுடு எழுந்து நின்று ‘‘உங்களுக்குச் சிரமம் ஏற்படுத்தியதுக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றார்.

‘`பரவாயில்லை, மிஸ்டர் நாயுடு. இது எங்களுடைய வேலை. என்னை எதற்காகச் சந்திக்க விரும்பினீர்கள்?”

‘`சார், அந்தப் பணம் இன்னைக்கு அல்லது நாளை காலைக்குள் அனுப்பியே ஆகவேண்டும்.”

‘`மோசடியான இறக்குமதி ரசீதின் அடிப்படையில் இதை நாங்கள் அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? உங்களுடைய இறக்குமதியின் மதிப்பு 10,000 டாலர்கூட இருக்காது. ஆனால், மோசடியான இறக்குமதி ரசீதின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலரை அனுப்புவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள்?’’ சுவாமி ஆத்திரத்துடன் பேசினார்.

‘`சார், இந்தப் பணத்தை அனுப்பலைன்னா நான் பெரிய சிரமத்தில மாட்டிக்கிருவேன்.’’

‘`அது உங்களோட பிரச்னை.’’

‘`இல்லை சார், அது உங்க பேங்குக்கும் பிரச்னைதான்’ என்றார்.

‘`என்னோட பேங்குக்குப் பிரச்னையா?”

‘`யெஸ், சார். எங்களுடைய குழும நிறுவனத்தில் ஒன்று சத்தீஷ்கரில் சுரங்கத் தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டிய தவணையில் இது ஆறாவது ஆகும். இது நிதி மந்திரியின் ஆலோசனையின் பேரில் அனுப்பப்பட்டு வருகிறது. பணத்தை இந்தியாவுக்கு வெளியே அனுப்புவது குறித்து உங்களுடைய வங்கி சி.இ.ஓ –விடம் அவர் பேசுவதாகக் கூறினார். அதனால்தான் நான் இதைச் செய்கிறேன். இது ஆறாவதும், கடைசி யுமான தவணையாகும். இதையும் சேர்த்து மொத்தம் ஐந்து மில்லியன் டாலர். நீங்கள் உங்கள் ஆவணங் களைப் பார்த்து இதைத் தெரிந்துகொள்ள முடியும், சார். இந்தப் பணமெல்லாம் நிதி மந்திரியின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டில் இருக்கும் அவருடைய பினாமி நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

‘`வாட்..?’’ சுவாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘`யெஸ், சார். உங்களுடைய சி.இ.ஓ-வுக்கு இது பற்றி தெரியும். அவர்தான் இதற்கு ஒப்புதல் அளித்தார். இது கடைசித் தவணை. எனவே, இதை அனுப்ப ஒப்புதல் கொடுங்கள். இதை இப்போது நிறுத்தினால், எனக்குப் பிரச்னை ஏற்படும். அப்புறம் உங்க பேங்க்கையும் காட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும்.’’

சுவாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் தனது அறைக்குத் திரும்பிச் சென்று முகுந்தை அழைத்து, மாள்விகா ஒப்புதல் அளித்த அனைத்து அந்நியச் செலாவணி  ஆவணங்களையும் கேட்டார். நாயுடு கூறியது சரியாக இருந்தது. மாள்விகா நேர்மையானவர் இல்லையென்று சுவாமிக்குத் தெரியும். இதில் மாள்விகாவுக்கு எவ்வளவு கமிஷன் இருக்கும் என அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அவர் கான்ஃபரன்ஸ் அறைக்குத் திரும்பச் சென்றபோது நாயுடு போனில் பேசிக் கொண்டிருந் தார். நாளை வரை எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என நாயுடுவிடம் வேண்டி கேட்டுக் கொண்டதுடன் இதுபற்றி யாரிடமும் நாங்கள் புகார் செய்ய வில்லை யென்றும் கூறினார்.

நாயுடு அங்கிருந்து கிளம்பும்போது மறுநாள் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். அன்றிரவு சுவாமி ஆதித்யாவையும், சந்தீப்பையும் சந்தித்தார்.

‘`சுவாமி, இதில் நீங்கள் தலையிடாதீர்கள். `வாடிக்கையாளர் இந்தப் பரிவர்த்தனைகளை என்.ஒய்.ஐ.பி மூலம் கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறார் என்றும், மாள்விகா ஐந்து பரிவர்த்தனைகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றும் ஆவணப்படுத்திவிட்டு, இதற்கு ஒப்புதல் அளித்து விடுங்கள்” என ஆதித்யா ஆலோசனை கூறினார். 

‘`எனக்கும் அதுதான் சரி எனத் தெரிகிறது” என சந்தீப்பும் கூறினார். இதிலிருந்து மாள்விகாவுக்கும், நிதி மந்திரிக்குமான நெருக்கம் தனிநபர்கள் மட்டும் சார்ந்திருக்காமல் அதற்குமேலும் இருக்கும் என மூவருக்கும் தெளிவானது.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு