Published:Updated:

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 9சட்டம் சிவ.இளங்கோ

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கும் ‘பசுமை விகடன்’ இதழ் உற்ற துணைவனாக இருந்து உதவி வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பசுமை விகடனில் இத்தொடரை எழுத எங்கள் இயக்கத்துக்கு வாய்ப்புக் கிடைத்தது, எங்களுக்குக் கிடைத்த பெருமை. ‘நான்கு கேள்விகளில் பட்டா மாறுதல்’, ‘சிட்டா -அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்’, ‘கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்’, ‘பயிர்க் காப்பீடு செய்வோம் லஞ்சத்தை ஒழிப்போம்’, ‘பயிர்க் காப்பீட்டு முறைகேடுகள் சட்டப்படி தடுக்கும் வழிகள்’, ‘பயிர்க்கடன் முறைகேடு புகார் அளிப்பது எப்படி’, ‘விவசாய மானியங்கள் பெறுவது எப்படி’, ‘பண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை’ என்ற தலைப்புகளில் இதுவரை எட்டு இதழ்களில் வழிகாட்டும் தொடரை எழுதியுள்ளோம். இத்தொடர் குறித்து விவசாயிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைக் கேட்கும்போது, விவசாயிகள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதேசமயம், பெரும்பாலான விவசாயிகளுக்கு அடிப்படை விஷயங்கள்கூடத் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அரசும், விவசாயச் சங்கங்களும் இந்த விஷயங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை அறிகிறபோது வேதனை மேலிடகிறது.

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘புதிதாக நிலம் வாங்கிச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போதே பட்டாவுக்கான கட்டணம் செலுத்தி விடுகிறோம். தனியாகத் தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை, கட்டணம் கட்ட வேண்டியதில்லை. அதிகபட்சம் 30 நாள்களுக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டுமென அரசாணை உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவும் உள்ளது’ என்ற விஷயத்தைப் பசுமை விகடனில் படித்துவிட்டுப் பல விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொண்டனர்.  அவர்கள், இது உண்மையா, இது நாள்வரை எனக்கு இந்த விஷயம் தெரியவில்லையே என்றனர். பட்டாவுக்காகத் தனியாகக் கட்டணம் கட்டி விண்ணப்பம் செய்தாலும், பட்டா கொடுக்க லஞ்சம் கேட்கிறார்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டால் ‘லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க முடியுமா’ என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறார்கள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் இச்சட்டம் முழுமையாக மக்களிடம் சென்று சேராத வகையில் பார்த்துக் கொள்கிறது அரசு நிர்வாகம்.

இதேபோல், ‘விவசாயக்கடன் வாங்க சிட்டா- அடங்கல் பெறக் கட்டணம் கிடையாதா’ என விவசாயிகள் வியப்புடன் கேட்கிறார்கள். ‘இதுநாள் வரை நான் கிராம நிர்வாக அலுவலரிடம் பணம் கொடுக்காமல் சிட்டா -அடங்கல் வாங்கியதில்லையே’ எனப் பல விவசாயிகள் ஆதங்கத்துடன் சொன்னார்கள். இனி சிட்டா- அடங்கலை லஞ்சம் கொடுக்காமல் வாங்க முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன். கடந்த 2001-06-ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது… விவசாயி, ஒரு லாரி லோடு அளவுக்கு நெல் வைத்திருந்தால், அவரது வயலுக்கோ வீட்டுக்கோ சென்று கொள்முதல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

விவசாயிகளுக்குத் தேவைப்படும் சாக்குப் பைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து களத்துக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது சாக்குப் பைகள் கொடுப்பதில்லை என ஆதங்கப்பட்டனர், பல விவசாயிகள். புதிதாக விவசாயம் செய்ய வந்துள்ள இளைஞர்கள், லஞ்சம் கொடுக்காமல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்கப்போவதாகச் சொல்லியது ஆறுதலாக இருந்தது.

‘ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா நெல் மூட்டைகளை மட்டுமே வாங்குகிறார்கள். குறுவை நெல் ரகங்களை வாங்க மறுக்கிறார்கள்’ என விவசாயிகள் சொன்ன புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். உடனடியாகத் தீர்வு கிடைத்தது. அதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குறுவைச் சாகுபடியில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடிந்தது. அந்த விவசாயிகளுக்கு உதவி செய்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

பயிர்க் காப்பீடு குறித்து விவசாயிகள் பலரும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், இழப்பீடு குறித்த விவரங்களை வங்கியோ அரசோ அறிவிப்பதில்லை என விவசாயிகள் சொன்னார்கள். இழப்பீடு குறித்த விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் சில விவசாயிகள் காப்பீடு செய்யும் காலம் முடிந்த நிலையில், பயிர் பாதிக்கப்பட்ட பிறகு காப்பீடு செய்ய முடியுமா எனக் கேட்டனர். பயிர் பாதிப்பு அடைந்தாலும், பாதிப்படையவில்லை என்றாலும் உரிய காலத்தில் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் எனப் பசுமை விகடன் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறோம். காப்பீட்டு நிறுவனம், வங்கி, வேளாண்மைத்துறை ஆகியவை விவசாயிகளிடம் உரிய காலத்தில் காப்பீடு செய்ய அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்!

பயிர்க் காப்பீடு முறைகேடுகள் குறித்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் எப்படிக் கேட்பது குறித்து எழுதியிருந்தோம். அதுகுறித்தும் பல விவசாயிகள் பேசினர். ‘நிறைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நீதிமன்ற உத்தரவைக் காட்டி தகவல் தர மறுக்கிறார்கள். பசுமை விகடன் மூலம்தான் கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளரின் ஆணைப்படி தகவல் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டோம்’ எனப் பல விவசாயிகள் சொன்னார்கள். அதேபோல, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பயிர்க் காப்பீட்டு முறைகேடுகள் குறித்து எழுதிய கட்டுரையில், ஒரு மாதிரிக் கடிதம் வெளியிட்டிருந்தோம். அதில் திருவாரூர் மாவட்டம், மாங்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி எனக் குறிப்பிட்டிருந்தோம். அந்த வங்கியிலிருந்து எங்களைத் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எழுதியுள்ள மாதிரிக் கடிதத்தில் எங்களது வங்கியில் முறைகேடு நடந்துள்ளதுபோல் எழுதியுள்ளீர்கள். எங்களுடைய மேலதிகாரிகள் எங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டு உள்ளார்கள். எனவே தயவு செய்து இது வாசகர்களுக்கான மாதிரிக் கடிதம்தான் என்று எங்களுக்கு ஒரு கடிதம் கொடுக்க முடியுமா’ என்று கேட்டனர். அந்த அளவுக்கு அந்தக் கடிதம் அவர்களைப் பாதித்துள்ளது என்பதை அறிய முடிந்தது. அந்தக் கட்டுரைக்குத் தமிழகம் முழுவதும் இருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன.

வாசகர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து வெவ்வேறு கோணங்களில் கேள்விகளை எதிர்கொண்டது எங்களுக்குப் புதிய அனுபவம். இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி முடிந்த அளவுக்குப் பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கும் வாசகர்களுக்கும் கொடுக்க முயற்சி செய்கிறோம்.

-வழிகாட்டல் தொடரும்