Election bannerElection banner
Published:Updated:

`ஏ.டி.எம்.பணத்தால் 10 நாள்களாக தூக்கம் வரல'- வங்கியால் அலைக்கழிக்கப்பட்ட முதியவர் வேதனை

 முதியவர் ராமசந்திரன்
முதியவர் ராமசந்திரன்

சென்னையில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்.மில் 10,000 ரூபாயைக் கண்டெடுத்த முதியவர், அதை வங்கியில் ஒப்படைக்க 10 நாள்களாகப் போராடிவருகிறார்.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி பென்சன் பணத்தை எடுக்க இரவு 7 மணியளவில் திருவேற்காடு சாலையில் உள்ள ஹெச்.டி.எப்.சி என்ற தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றார். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதைப்பார்த்த ராமச்சந்திரன், யாரோ பணத்தை எடுக்காமல் மறந்து சென்றுவிட்டனர் என்று கருதினார். பின்னர் அவர், அந்தப் பணத்தைக் கையில் எடுத்தார். பிறகு, அவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களிடம் பணம் குறித்து விசாரித்தார். அப்போது அவர்கள் அந்தப் பணம் தங்களுடையது இல்லை என்று கூறினர்.

பணத்துடன் ராமசந்திரன்
பணத்துடன் ராமசந்திரன்

இதையடுத்து அந்தப் பணத்தை ராமச்சந்திரன் எண்ணியபோது 2,000 ரூபாய் நோட்டுகள் நான்கும் 500 ரூபாய் நோட்டுகள் மூன்றும் 200 ரூபாய் நோட்டுகள் இரண்டும் 100 ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்தன. ஏ.டி.எம் மையத்தில் தவறவிட்ட ரூபாயின் மதிப்பு 10 ஆயிரமாகும். அந்தப் பணத்துக்கு ஏ.டி.எம். மையத்தில் யாரும் உரிமைக் கோராததால் அதை வீட்டுக்குக் கொண்டு சென்றார் ராமச்சந்திரன். வீட்டில் உள்ளவர்களிடம் பணம் குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.

நேர்மையான அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அடுத்தவர் பணம் நமக்கு தேவையில்லை என்று கூறியதோடு அதை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து மறுநாள் காலையில் (ஜூலை 2-ம் தேதி) சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் வங்கிக் கிளை குறித்து விசாரித்தார். அப்போது முகப்பேர் கிழக்கில் அந்த வங்கியின் கிளை இருக்கும் தகவல் கிடைத்ததும் அயப்பாக்கத்திலிருந்து முதுமையையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்றார்.

ஏ.டி.எம்
ஏ.டி.எம்

வங்கியின் மேலாளரான வாணியைச் சந்தித்த ராமச்சந்திரன் விவரத்தைக் கூறினார். அதைக் கேட்ட அந்த அதிகாரி, தலைமை அலுவலகத்தில் விவரம் கேட்டுவிட்டு உங்களுக்கு பதிலளிக்கிறேன். அதுவரை இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதையடுத்து 4 நாள்களுக்குப் பிறகு வங்கியின் மேலாளரிடமிருந்து ராமச்சந்திரனுக்கு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய மேலாளர், பணத்தைக் கொண்டு வந்து வங்கியில் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் 10,000 ரூபாயை எடுத்துக்கொண்டு ராமச்சந்திரன் வங்கிக்குச் சென்றார். அங்கு, அவர் பணத்தைக் கொடுத்துவிட்டு அதற்கான ஒப்புகைச் சீட்டு கேட்டார். ஆனால், அதைக் கொடுக்க முடியாது என்று வங்கித் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனால், ராமச்சந்திரன், அப்படியென்றால் நானும் உங்களிடம் பணத்தைக் கொடுக்க முடியாது என்று கூறினார்.

இதையடுத்து ராமச்சந்திரன், அந்தப் பணத்தை என்ன செய்யலாம் என்று சிலரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று ஆலோசனை கூறப்பட்டது. இதனால் பணத்துடன் சென்ற ராமச்சந்திரன் ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தரிடம் நடந்த விவரங்களைக் கூறினார். உடனே இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் போனில் பேசினார். அரைமணி நேரத்துக்கு மேலாக அவர் பேசியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட மனு ஏற்புச் சான்றிதழ்
ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட மனு ஏற்புச் சான்றிதழ்

இதனால், ராமச்சந்திரனைப் பார்த்த இன்ஸ்பெக்டர், நேர்மையாக இருக்கும் உங்களுக்கு இது ஒரு சத்தியசோதனை. வங்கித் தரப்பில் என்னால் முடிந்தளவுக்குப் பேசிவிட்டேன். ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே, இந்தப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஏ.டி.எம். மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் பணத்தை தவற விட்டவர்களின் விவரங்களை வங்கி மூலம் சேகரிக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் சுரேந்தர் கூறியுள்ளார். அதன்பிறகு, ராமச்சந்திரன் 10,000 ரூபாயோடு வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து ராமசந்திரனிடம் பேசினோம். ``நான், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று பென்சன் பணத்தில் வாழ்ந்துவருகிறேன். இந்தப் பணத்தின் அருமை என்னை போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்ன தேவைக்காக அந்த நபர் பணத்தை ஏ.டி.எம்மில் எடுத்தார் என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் பணத்தைத் தவற விட்டவரை வங்கி நிர்வாகம் எளிதில் கண்டறியலாம். ஆனால், ஏனோ அவர்கள் அதைச் செய்யவில்லை.

இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 10 நாள்களாக என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பணத்தை வங்கி அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் வங்கியில் என்னை அலைக்கழித்தனர். என்னிடம் உள்ள பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒப்புகைச் சீட்டை மட்டும்தான் வங்கியிடம் கேட்டேன். ஆனால், அதற்கு வங்கியின் மேலாளர் சம்மதிக்கவில்லை. இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிறகுதான் என்னால் நிம்மதியாக தூங்க முடியும்"என்றார்.

ராமசந்திரன்
ராமசந்திரன்

இன்ஸ்பெக்டர் சுரேந்தரிடம் பேசினோம். ``சீனியர் சிட்டிசனான ராமச்சந்திரன், வங்கி மேலாளர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மனு ஏற்புச் சான்றிதழ் கொடுத்துள்ளோம். மேலும், பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் வரை ராமச்சந்திரனிடமே அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம். சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று கடிதம் எழுதி ஏ.டி.எம். மையத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குரிய சிசிடிவி பதிவுகளை கேட்கவுள்ளோம். அதுபோல பணத்தை எடுத்தவர்களின் வங்கி விவரங்களைச் சேகரித்து விரைவில் சம்பந்தப்பட்டவரிடம் 10,000 ரூபாயை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மாதத்தில் முகப்பேர் பச்சையப்பன் சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் கொட்டியது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். உடனடியாக வங்கி மேலாளருக்கும் தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு வங்கி மேலாளரிடம் கூடுதல் பணத்தை ஒப்படைத்தோம். ராமச்சந்திரனிடமும் 10,000 ரூபாயை சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் வாங்கியிருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது"என்றார்.

தனியார் வங்கி
தனியார் வங்கி

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``ஏ.டி.எம். மையத்தில் இதுபோன்று பணம் கிடைத்தால் அதை அருகில் உள்ள சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தின் வங்கிக் கிளையில் ஒப்படைக்கலாம். ஆனால் அதற்கான விதிமுறை எதுவும் இல்லை. ஏ.டி.எம். மையத்தில் கூடுதல் பணம் அல்லது தவறவிட்ட பணத்தை ஒப்படைப்பது அரிது. ராமசந்திரனைப் போல சிலர்தான் முயற்சி எடுக்கின்றனர். ஆனால், அவர்களையும் வங்கித் தரப்பில் இப்படி அலைக்கழிக்கப்படுவது வேதனைக்குரியது'' என்றனர்.

வங்கி மேலாளரால் அலைக்கழிக்கப்பட்ட முதியவர் ராமச்சந்திரன், 10,000 ரூபாயை வங்கியில் கொடுக்க தலைமை அலுவலகத்தில் உள்ள ஓர் அதிகாரியைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதன்பிறகே ராமச்சந்திரன் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், வங்கி மேலாளரைச் சந்திக்க இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களை அனுப்பியுள்ளார். அதன்பிறகும் வங்கி மேலாளர், பணத்தை வாங்கவில்லை என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

கடந்த மாதத்தில் முகப்பேர் பச்சையப்பன் சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் கொட்டியது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். உடனடியாக வங்கி மேலாளருக்கும் தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு வங்கி மேலாளரிடம் கூடுதல் பணத்தை ஒப்படைத்தோம்
இன்ஸ்பெக்டர் சுரேந்தர்

சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் வாணியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் இதற்கு நான் பதிலளிக்க கூடாது. வங்கியின் லீகல் டீம் பேசுவார்கள் என்பதோடு முடித்துக்கொண்டார். புகார் கொடுத்த ராமச்சந்திரன், வங்கியின் மேலாளர் வாணிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு