Published:Updated:

`25 நாள்களுக்குப் பின் வங்கி திறப்பு; அதிக வட்டி வசூல்?!'- நகையை அடகு வைத்த அரியலூர் மக்கள் கண்ணீர்

கனரா வங்கி
கனரா வங்கி

வங்கிகள் மக்களை ஆட்டு மந்தைகளை நடத்துவதுபோல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா விவகாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூர் மாவட்டம் இருக்கும் சூழலில், பணம் மற்றும் நகைக் கடன்களை செலுத்துவதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கைக்குழந்தைகளுடன் வங்கியின் முன்பு முட்டிமோதிக்கொண்டு வரிசையில் நிற்கும் சம்பவம் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.

அரியலூர்
அரியலூர்

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 4882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் கடலூர், மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு, நான்காம் இடத்தில் அரியலூர் மாவட்டம் இருக்கிறது. இங்கு 12-ம் தேதி நிலவரப்படி 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், வங்கிகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நின்ற விவகாரம்தான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் 32 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட வங்கிகள் கடந்த 11-ம் தேதி திறக்கப்பட்டன. இந்த நிலையில், அரியலூரில் அனைத்து வங்கிகளும் கடந்த அக்டோபர் மாதத்துக்கு முன்பு விவசாயக் கடன் மற்றும் விவசாய நகைக்கடன் வாங்கிய விவசாயிகளுக்கு வங்கிகள் மூடப்பட்ட நாள்களில் தேதி முடிந்ததால் அவர்கள் 4 சதவிகிதம் வட்டிக்கு பதில் 7 சதவிகிதம் வட்டி கட்டி நகையை மீட்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கனரா வங்கி
கனரா வங்கி

இதனால் வங்கிகள் முன்பு கைக்குழந்தைகளுடன் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இடைவெளி இல்லாமல் நகைகளை மீட்க காத்திருந்தனர். மேலும், வங்கிகள் மூடப்பட்ட நாள்களில் காலாவதியான நகைக் கடனுக்கு அபராதத் தொகை வசூல் செய்யக் கூடாது என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் பேசினோம். ``அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இத்தனை நாள்களாக வங்கிகள் திறக்காமல் இன்றுதான் திறந்திருக்கிறார்கள்.

கனரா வங்கி
கனரா வங்கி

அத்தோடு விடுமுறை நாள்களில் பணம் கட்டவில்லை என்று கூடுதல் வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. அதுவும் ஒரு மணி வரையிலும்தான் பேங்க் இருக்கும் என்று சொன்னார்கள். அதனால்தான் நாங்கள் வந்தோம். இது யாருடைய தவறு. நாங்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்ததும் பாதிபேரை நாளைக்கு வரசொல்லியிருக்கலாம் வங்கி நிர்வாகம். ஆனால், வங்கிகள் மக்களை ஆட்டு மந்தைகளை நடத்துவதுபோல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று வேதனைப்பட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு