Published:Updated:

பேச்சுவார்த்தை தோல்வி; நாளை முதல் வங்கிகள் ஸ்ட்ரைக்; எந்தெந்த வங்கி சேவைகள் பாதிக்கும்?

State Bank of India
News
State Bank of India ( Vikatan )

டிசம்பர் 16, 17 இரண்டு நாள்கள் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினால் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும். வங்கிக் கிளை சேவைகள், ஏ.டி.எம் சேவைகள் ஆகியவை பாதிக்கப்படும்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டிசம்பர் 16, 17 தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும் என கூறியுள்ளனர்.

தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வங்கி சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டம் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான சாதகங்களுடன் இருப்பதாக பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

Bank (Representational Image)
Bank (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்திருந்தார். வங்கி திருத்தம் சட்ட மசோதா அதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால், இந்த மசோதாவை ரத்து செய்யவும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

அரசு ஏற்கெனவே 14 பொதுத்துறை வங்கிகளை இணைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளது. மேலும், ஐ.டி.பி.ஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை எல்.ஐ.சி-க்கு விற்பனை செய்ததன் மூலம் தனியார் மயமாக்கியுள்ளது. தற்போது மேலும் இரண்டு வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில், ``தற்போது பொதுத்துறை வங்கிகளில்தான் மக்களின் 70% டெபாசிட்டுகள் உள்ளன. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும்போது சாமானிய மக்களின் முதலீட்டுக்கு ஆபத்து நேரலாம். பொது மக்களின் நிதியில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

ஏற்கெனவே வங்கித் துறையைச் சிக்கலுக்குள்ளாக்கியுள்ள வாராக்கடன்களுக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம். இச்சூழலில் வங்கித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. எனவே, இதைத் தடுக்க வேலை நிறுத்தம், போராட்டங்கள், தர்ணாக்கள் செய்யப்படுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் விளைவாக பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகள் பாதிக்கும் என்றும், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதை பாதிக்கும், கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Punjab National Bank
Punjab National Bank

இதுதொடர்பாக கடந்த 8-ம் தேதி அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் சமீபத்தில் டெல்லியில் கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஜோஷி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 16,17 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதுமுள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தெந்த வங்கி சேவைகள் பாதிக்கும்?

டிசம்பர் 16, 17 இரண்டு நாள்கள் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினால் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும். வங்கிக் கிளை சேவைகள், ஏ.டி.எம் சேவைகள் ஆகியவை பாதிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் இன்றே தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்துவிடுவது நல்லது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது பணம் அனுப்ப வேண்டும் என்றாலோ இன்றே எடுத்துவிடுவது நல்லது.

இந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று ஊழியர்கள் சங்கங்களுக்கு பெரும்பாலான முன்னணி வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. எஸ்.பி.ஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ``வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த முடிவை பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே கொரோனா நெருக்கடி காலத்தில் இருக்கும் சூழலில் வங்கி வேலை நிறுத்தங்கள் பாதிப்பை மேலும் அதிகமாக்கிவிடும்" என்று பதிவிட்டுள்ளது. இதுபோலவே பி.என்.பி வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் வங்கி, யூகோ வங்கியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளன.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தினால் மேற்குறிப்பிட்டுள்ள வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுக்கவோ, பரிமாற்றம் செய்யவோ முடியாமல் போகலாம். செக் கிளியரன்ஸ் போன்றவை தாமதமாகும்.

எனவே, அதற்கேற்ப திட்டமிட்டு முன்கூட்டியோ அல்லது இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகோ பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.