Published:Updated:

வங்கி சேமிப்புக் கணக்கு இன்ஷூரன்ஸ்: கொரோனா இறப்புக்கும் இழப்பீடு க்ளெய்ம் செய்ய முடியுமா?

 Insurance
Insurance

ஒருவர் எத்தனை சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம்தான் இந்தத் திட்டங்களில் சேர வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு `பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா’ (PMSBY) என்கிற தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி மற்றும் `பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகிய இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் இது ஒர் இயக்கமாகவே செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டங்களில் வங்கி சேமிப்பு வைத்திருப்பவர்கள் சேர வைக்கப்பட்டார்கள்.

காப்பீட்டு பாலிசி
காப்பீட்டு பாலிசி

தற்போதும் இந்தத் திட்டம் தொடர்கிறது. ஆதார் விவரங்கள் மூலம் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (கே.ஒய்.சி) விவரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்களில் சேருவதற்கு என வங்கிகளில் பிரத்யேக படிவங்கள் இருக்கின்றன. அதனை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த இரு காப்பீட்டின் வருட பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து தானாக கழிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம்தான் இந்தத் திட்டங்களில் சேர வேண்டும்.

விபத்துக் காப்பீட்டு பாலிசி

விபத்துக் காப்பீட்டு பாலிசியில் ரூ.12 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் கவரேஜ் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 70 வயதுள்ளவர்கள் சேர முடியும். விபத்தின் மூலம் இறப்பு ஏற்பட்டால், இந்த பாலிசி மூலம் ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

விபத்து காப்பீட்டில் விபத்து மூலமாக மரணம் ஏற்பட்டால் அல்லது முழுமையாக செயல்பட முடியாமல் போனால் ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். இதுவே பகுதி செயல்பட முடியாமல் போனால் ரூ. 1 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

Insurance
Insurance

ஆயுள் காப்பீட்டு பாலிசி

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் ரூ.330 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் கவரேஜ் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மூலம் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் மட்டுமே சேர முடியும். ஆயுள் காப்பீட்டு கவரேஜ் 55 வயது வரை தொடரும்.

இழப்பீடு

மரணம் அடைந்தால் எந்தக் காரணமாக இருந்தாலும் ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கிடைக்கும். நோய் பாதிப்பு அல்லது கோவிட் -19 காரணமாக இருந்தாலும் இழப்பீடு கிடைக்கும். 55 வயதுக்குள் இருந்து வங்கி சேமிப்புக் கணக்கில் பிரீமியம் பிடிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த ரூ. 2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். பிரீமியம் பிடிக்கும் காலத்தில் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருந்தாலோ அல்லது வங்கிக் கணக்கை ஏதாவது ஒரு காரணத்தில் ரத்து செய்திருந்தாலோ இழப்பீடு கோர முடியாது.

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோர இறப்பு சான்றிதழ் தொடர்புடைய வங்கிக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். வங்கியில் கொடுக்கும் இரண்டு படிவங்களை நிரப்பி, இறப்பு சான்றிதழ் உடன் வங்கியில் கொடுக்க வேண்டும்.

Insurance
Insurance

விபத்து காப்பீடு என்றால் போலீஸ் நிலைய எஃப்.ஐ.ஆர், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வங்கியில் கொடுக்க வேண்டும்.

இறப்பு நடந்து 90 நாள்களுக்குள் இந்த பாலிசிகளில் இழப்பீடு கோர வேண்டும். இரு வார காலத்துக்குள் இழப்பீடு தொகை, நாமினியின் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.

அடுத்த கட்டுரைக்கு