Published:Updated:

தனிநபர், நிறுவனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை 10-15 சதவிகிதம் அதிகரிக்கிறதா?

ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட அளவு க்ளெய்ம்களுக்கு மட்டுமே பணத்தைத் தர முடியும்.

 இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

வரும் ஜனவரி மாதம் முதல் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை 10-15 சதவிகிதம் அதிகரிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, தனிநபர்களைப் பாதிக்குமா, இதற்காக ஏதேனும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமா என்று விகடன் வாசகர்‌ கேட்ட கேள்வியை நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் முன்வைத்தோம்.

``இன்ஷூரன்ஸில் பணம் செலுத்துபவர்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதை க்ளெய்ம் செய்வார்கள். பொதுவாக, க்ளெய்ம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பிரீமியம் தொகை உயரக்கூடும்.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

சமீபகாலங்களில், புதுப்புது நோய்கள், காற்று மாசுபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் செய்கிறார்கள். இதனால், முன்பை விட க்ளெய்ம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட அளவு க்ளெய்ம்களுக்கு மட்டுமே பணத்தைத் தர முடியும். வாடிக்கையாளர்களின் க்ளெய்ம் எண்ணிக்கை அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கணக்கீட்டைவிட அதிகமாகும்பட்சத்தில், ரீ-இன்ஷூரன்ஸ் மூலம் இது சரிசெய்யப்படுகிறது.

உதாரணமாக, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.10,000 உள்ளது என்பதாக வைத்துக்கொள்வோம். 10 பேர், ரூ.20,000 வேண்டுமென்று க்ளெய்ம் செய்தார்கள் என்றால், அந்த நிறுவனத்தால் தர இயலாது. எனவே, அந்த நிறுவனம் மற்றொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் லோன் வாங்கி க்ளெய்ம்களைச் சரிசெய்யும். கடன் வாங்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் அதைத் திருப்பிச் செலுத்தவேண்டும். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவது போல பிரீமியம் செலுத்தும். இதற்கு ரீ-இன்ஷூரன்ஸ் என்று பெயர்.

 நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்
நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்

இதனால் தனிநபரின் ப்ரீமியம் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம். தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கியோ அல்லது ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கில் ரெக்கரிங் டெபாசிட் முறையிலோ பணத்தைச் சேமிக்கலாம். தேவைக்கான தொகையை மட்டும் இவ்வாறு டெபாசிட் செய்தால் போதுமானது. இவ்வாறு செய்வதன் மூலம் ஓரளவிற்கு பிரீமியம் தொகை உயர்வைக் கட்டுப்படுத்தலாம். ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியைவிட ரெக்கரிங் டெபாசிட் மூலம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் ஃபிக்ஸிட் டெபாசிட்டைக் காட்டிலும் ரெக்கரிங் டெபாசிட் சிறந்தது" என்று கூறினார்.