Published:Updated:

இ.எம்.ஐ குறையும், ஜி.டி.பி வளர்ச்சியும் குறையும்!- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செ.கார்த்திகேயன்

மந்தமான பொருளாதார வளர்ச்சியை, அதிகரிப்பதற்காக ஆர்.பி.ஐ, ரெப்போ விகிதத்தைக் குறைத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில், நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று நாள் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சில தீர்மானங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

அதில் நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று முறை 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில் இம்முறை 0.35 சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் 5.75 சதவிகிதமாக இருந்த ரெப்போ விகிதம் 5.40 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த 2014 ஜனவரி மாதத்தில் ரெப்போ விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

மேலும், 2019-20-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கு, 7 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது. உற்பத்தி, சுரங்கத் துறைகளின் வீழ்ச்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மின்துறை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மந்தமான பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஆர்.பி.ஐ, ரெப்போ விகிதத்தைக் குறைத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால், வங்கிகள், குறைந்த வட்டியில், வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள் வழங்கும். ஏற்கெனவே வழங்கியிருக்கும் வீடு மற்றும் வாகனக் கடன்கள் மீதான வட்டியையும் வங்கிகள் குறைக்கும். இதனால் இ.எம்.ஐ குறையும்!