Published:Updated:

தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.டி.எஃப்.சி வங்கி

கார்ப்பரேட் சேவைகளை வழங்கிவந்த இந்த வங்கி, நாளடைவில் ரீடெயில் சேவைகளையும் வழங்கி மாற்றத்தை ஏற்படுத்தியது!

ந்தியாவில் கடந்த 25 ஆண்டுக்காலமாக ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரத்தில் எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளர்ந்துவரும் வங்கி; ஆண்டு கூட்டு வளர்ச்சி சராசரியாக 25% ஈட்டும் வங்கி; வங்கி சார்ந்த தொழிலில் 2005-ம் ஆண்டிலிருந்து கடன் வளர்ச்சியில் 29.5 சதவிகிதமும், நிகர லாப வளர்ச்சியில் 28 சதவிகிதமும், நிகர வட்டி வருமானத்தில் 27 சதவிகிதமும் தொடர்ந்து ஈட்டிவரும் வங்கி; இன்றைக்கு பூதாகரமாக உருவெடுத்துவரும் வங்கிகளின் செயல்படாத சொத்துகள் (என்.பி.ஏ) வெறும் 1.26% மட்டுமே கொண்ட வங்கி... எனப் பல பெருமைகள்கொண்ட வங்கி எது தெரியுமா? அது, 1994-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவரும் ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி!
தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

கால் நூற்றாண்டைக் கடந்த வங்கி..!

இந்த வங்கியைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பு, உலக அளவில் ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுக்காலம் இருக்கும் பெருமைக்குரியவர் இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரி. தனது 70-ம் ஆண்டில் நுழையவிருக்கும் இவர் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். இவருக்குப் பிறகு இந்த வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு யார் வருவார் என்பது வங்கித் துறையினரிடையே ஒரு பேசு பொருளாக இருந்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

இந்த வங்கியின் 25-ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகத்தின் பெயர் `ஹெச்.டி.எஃப்.சி 2.0 ஃப்ரம் டான் டு டிஜிட்டல்’ (HDFC 2.0 From Dawn To Digitial). இதை எழுதியிருப்பவர் பிரபல பத்திரிகையாளர் தமால் பந்தோபாத்யாய் (Tamal Bandyopadhyay).

இந்தப் புத்தகம் மூன்று பிரிவுகளாக 17 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி இதன் டிஜிட்டல் பயணத்தையும், இரண்டாம் பகுதி, இதுவரை இந்த வங்கி கடந்துவந்த பாதை பற்றியும், மூன்றாம் பகுதி, வங்கியின் தலைவரான ஆதித்யா பூரியின் தலைமைத்துவம் (Leadership) குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெற்றி உத்திகள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி டிஜிட்டல் யுகத்தில் முன்னணியில் இருந்தாலும், ஹெச்.டி.எஃப்.சி அதிரடியாக சில விஷயங்களைச் செய்தது; இன்றும் செய்துவருகிறது. அவற்றில் சில...

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி

2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய `மிஸ்டு கால் பேங்க்கிங் (Missed Call Banking). அந்த நேரத்தில், ஹெச்.டி.எஃப்.சி-யின் கவனம் கிராமப்புற வாடிக்கையாளர்கள்மேல் இருந்தது. இணைய வசதி, மொபைல் பேங்க்கிங் அல்லது செயலிகள் போன்றவற்றின் உபயோகம் அதிகமில்லாத நேரத்தில் வங்கியில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியோடு பல வசதிகள் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, `பத்து விநாடிகளில் கடன்’ என்ற ஒரு வசதி. அதாவது, வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கு, `அவர் ஆன்லைனில் விண்ணப்பித்த 10 விநாடிகளில் கடன் வழங்கப்படும்’ என்று வங்கி வாக்குறுதி கொடுத்தது. வாடிக்கையாளரின் பரிவர்த்தனை நடவடிக்கைகள், கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்திய விவரம் கொண்ட தரவுகள் என அனைத்துத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்து தகுதியுடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் முதல் கடன் 2015-ம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டது. பொதுவாக, இந்தக் கடன் ரூ.3-4 லட்சம் என்ற அளவிலும், அதிகபட்சம் ரூ.15 லட்சம் என்ற அளவிலும் இருந்தது.

தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னெடுப்புகளை இந்த வங்கி இன்றும் செய்துவருகிறது. ‘‘கூடிய விரைவில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்தியாவின் `அலிபாபா’ ஆனாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை’’ என்று ஆதித்யா கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நட்பு வேறு, வங்கி வேறு..!

ஆரம்பத்தில் கார்ப்பரேட் சேவைகளை மட்டும் வழங்கிவந்த இந்த வங்கி, நாளடைவில் ரீடெயில் சேவைகளையும் வழங்க ஆரம்பித்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்க ஆரம்பித்தது. எந்தவொரு கட்டத்திலும் விதிகளையும் நிபந்தனைகளையும் இந்த வங்கி மீறியதில்லை.

ஆதித்யா பூரி
ஆதித்யா பூரி

ஒருமுறை ஆதித்யாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் `அரசராக’ இருந்தவர், கடனுக்காக இந்த வங்கியை அணுக, குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பது சிரமம் எனத் தெரிவிக்க, `அரசர்’ அதை விரும்பவில்லை. உடனே ஆதித்யாவைப் பார்த்து, ‘`ஆதித்யா, நீங்கள் ஒரு நல்ல வங்கியாளர் என்று நான் நினைத்தேன். ஆனால், நீங்கள் இன்னும் அது குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும்போல் தெரிகிறது’’ எனக் கூறியிருக்கிறார். அதற்கு ஆதித்யா, ‘`யாருக்கு வங்கிகளின் செயல்பாடு தெரியும், யாருக்குத் தெரியாது என்பதைக் காலம் பதில் சொல்லும்” என்று அமைதியாகக் கூறி, கடன் கொடுக்க மறுத்துவிட்டார்.

இன்னொரு சம்பவம், பிரபல வைர வியாபாரி, மிகவும் நயமாகப் பேசக்கூடியவர்; 2018-ம் ஆண்டு நாட்டை விட்டு ஓடிச் சென்றவர். அவர் 2017-ம் ஆண்டு ஆதித்யாவை அணுகி, வங்கியுடன் இணைந்து வைர வியாபாரம் செய்யக் கூட்டாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாம் என யோசனை சொல்ல, அதற்கு ஆதித்யா, ‘‘எங்களுக்கு வங்கி நடத்தத் தெரியும். ஆனால், `வைர’ வியாபாரம் தெரியாது’’ என்று `கழற்றி’ விட்டதால் இன்றைக்கு இந்த வங்கி பெரும் மோசடியிலிருந்தும் தப்பித்தது. இப்படிப் பரவலாக அதிகம் பேசப்படாத சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆதித்யாவைப் பொறுத்தவரை, ‘தனிப்பட்ட நட்பு என்பது வேறு... வணிக உறவு என்பது வேறு.’ இதில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் தெளிவாக இருந்துவருகிறார்.

ஆதித்யா பூரி எப்படிப்பட்டவர்?

இந்தப் புத்தகத்தின் மூன்றாவது பகுதியாக ஆதித்யாவின் குணாதிசயங்கள் பற்றியும், தலைமைத்துவம் பற்றியும் எழுதப்பட்டிருப்பதுடன், வங்கியின் `தாய் வீடான’ ஹெச்.டி.எஃப்.சி என்ற பிராண்ட் பெரியதா அல்லது ஹெச்.டி.எஃப்.சி வங்கி என்ற பிராண்ட் பெரியதா... ஹெச்.டி.எஃப்.சி-யின் (வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனம்) தீபக் பரேக் பெரியவரா அல்லது வங்கியின் ஆதித்யா பூரி பெரியவரா என்பது குறித்து இருவருடைய நண்பர்கள், சக அதிகாரிகள், வணிகரீதியில் உறவு வைத்திருப்போர் எனப் பலரிடமும் கேட்டுப் பெற்ற தகவல்களும் இதில் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த வங்கி சில முறை தடுக்கி விழுந்தாலும் வீரியத்துடன் திரும்ப எழுந்து வெற்றிகரமாக நடைபோட்டு வரக் காரணம் இந்த வங்கியின் தலைமைத்துவமும், ஆதித்யாமீது அதன் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான்!

உத்திகளை உருவாக்குவதிலும், உறவை உருவாக்கி வளர்ப்பதிலும் `கில்லாடி’ என அவரோடு நெருக்கமாகப் பழகிய பலரும் கூறியிருக்கிறார்கள். சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தக் கூடியவர். வேலை செய்வதிலும், வேலை வாங்குவதிலும் கறார் பேர்வழி.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் வங்கியின் அனைத்துக் கிளைகள் குறித்த அறிக்கையைப் படிக்கத் தவற மாட்டார். அதிக நிகர மதிப்பு கொண்ட ஒரு வாடிக்கையாளரின் இருப்புநிலை குறைந்திருந்தால், `அவர் இன்னொரு வங்கியிலும் பரிவர்த்தனையில் இருக்கிறார், கொஞ்சம் விசாரியுங்கள்’ என சம்பந்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் சொல்லக்கூடிய அளவுக்கு நுணுக்கமாகப் படிக்கும் பழக்கம் உண்டு.

டை, கோட் அணிந்திருப்பதால் நட்சத்திர ஹோட்டல் அல்லது பிரபலமான ரெஸ்டாரன்டுகளில்தான் சாப்பிட வேண்டும் என நினைக்காதவர். சாதாரண பஞ்சாபி தாபாவில்கூட மர பெஞ்ச்சில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு உணவு சுவைஞர்.

இன்றுவரை அவர் மொபைல்போன் வைத்துக்கொண்டதில்லை. அவருடைய மேசையில் கணினி இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு சுமார் 500 மின்னஞ்சல்களை `பிரின்ட்அவுட்’ எடுத்து காரியதரிசி மூலம் பதிலளித்துவருபவர். அவருடைய மேசையில் எப்போதும் இருப்பது கூராக சீவப்பட்ட ஒரு டஜன் பென்சில்கள்!

தொழில்நுட்பத்தைப் பற்றி நுணுக்கமாகத் தெரியாவிட்டாலும், அதன் மூலம் என்ன பயன் என்பதை நன்கு அறிந்தவர்.

வங்கியில் இரு துறையினருக்கு இடையே பேச்சுவார்த்தை சரியாக இல்லாதபோது பூனாவுக்கு அருகில் லோனாவாலாவில் இருக்கும் தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களை அவர் செல்லமாக வளர்க்கும் நாய்களுடன் `வாக்கிங்’ செல்லும்படி அனுப்பி, அவர்களிடையே `கலகலப்பை’ ஏற்படுத்தியவர். இந்தச் சம்பவம் வங்கிக்குள் மிகவும் பிரசித்தம்!

சிறப்பாக இயங்கிவரும் இந்த வங்கி பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆதித்யாவுக்கு அடுத்து இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறவர் யார் என்பதுதான் இப்போதைக்கு எல்லோரும் விடை தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி!