Published:Updated:

அன்று HDFC பெயரைப் பயன்படுத்த தயக்கம்; இன்று அதே வங்கியுடன் இணைப்பு; இது HDFC வங்கி வெற்றிக்கதை! - 6

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

1994-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி-யின் அடுத்தகட்டமாகத் தொடங்கப்பட்டதுதான் ஹெச்.டி.எஃப்.சி வங்கி. மகன் வளர்ந்த பிறகு அப்பாவின் தொழிலை எடுத்துக்கொள்வதுபோல்தான், ஹெச்.டி.எஃப்.டி நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைவதைப் பார்க்க வேண்டும் என தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார்.

அன்று HDFC பெயரைப் பயன்படுத்த தயக்கம்; இன்று அதே வங்கியுடன் இணைப்பு; இது HDFC வங்கி வெற்றிக்கதை! - 6

1994-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி-யின் அடுத்தகட்டமாகத் தொடங்கப்பட்டதுதான் ஹெச்.டி.எஃப்.சி வங்கி. மகன் வளர்ந்த பிறகு அப்பாவின் தொழிலை எடுத்துக்கொள்வதுபோல்தான், ஹெச்.டி.எஃப்.டி நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைவதைப் பார்க்க வேண்டும் என தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஹெச்.டி.எஃப்.சி வங்கி

கடந்த சில நாள்களாகப் பங்குச் சந்தை மட்டுமல்லாமல், தொழில் உலகிலும் விவாதிக்கப்படும் மிக முக்கியமான விஷயம் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைப்புதான். 1977-ம் ஆண்டு வீட்டுக்கடன் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி. 1994-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி-யின் அடுத்தகட்டமாகத் தொடங்கப்பட்டதுதான் ஹெச்.டி.எஃப்.சி வங்கி. மகன் வளர்ந்த பிறகு அப்பாவின் தொழிலை எடுத்துக் கொள்வதுபோல்தான், ஹெச்.டி.எஃப்.டி நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைவதைப் பார்க்க வேண்டும் என தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாகத் தனித்தனியாக இயங்கிவந்த இந்த இரு நிறுவனங்களின் கடந்த வரலாற்றிலும் பல திருப்புமுனைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அந்தச் சம்பவங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஹெச்.டி.எஃப்.சி.யின் வரலாறு...

குஜராத்தைச் சேர்ந்தவர் ஹெச்.டி பரேக். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் படித்தவர். இவரின் அப்பா சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் பணியாளர். (இவரின் சகோதரர் சாந்திலால் பரேக்தான் தீபக் பரேக்கின் அப்பா!)

ஹெச்.டி.பரேக்கின் குடும்பம் வங்கித் தொழில் இருந்தது. தவிர, பொருளாதாரம் படித்திருந்ததால், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார். ஆனால், அந்த ஐடியா நிறைவேறவில்லை. பங்குச் சந்தை புரோக்கராக மாறினார். அதைத் தொடர்ந்து செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1956-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ–யில் (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் அல்ல) இணைந்தார் ஹெச்.டி பரேக். துணைப் பொது மேலாளராக இணைந்த அவர் படிப்படியாக உயர்ந்து, 1972-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ-யின் தலைவராக உயர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Bank (Representational Image)
Bank (Representational Image)

1973-ம் ஆண்டு வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கலாம் என நிதி அமைச்சகத்துக்கு அனுமதி கேட்டார். அப்போதும் அனுமதி வழங்கப்படவில்லை. 1975-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ தலைவர் பதிவில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 65 வயதுக்குமேல் மீண்டும் அந்த ஐடியாவை தூசி தட்டினார்.

அப்போதைய நிதி அமைச்சர் ஹெச்.எம்.படேலைச் சந்தித்து, ``நிதி உதவி வேண்டாம், கொள்கை அளவிலான அனுமதி கிடைத்தால் போதும்’’ என்று கேட்க, ஒப்புதல் வழங்கி தொடங்கப்பட்டதுதான் ஹெச்.டி.எஃப்.சி (Housing Development Finance corporation).

இந்தியர்களுக்கு வீடு இல்லை. வீட்டுக்கடன் கிடைப்பதில்லை. கட்டுமான நிறுவனங்களுக்கும் கடன் வழங்குவதில்லை. ஆயுள் முழுக்க உழைத்து அதன்பிறகு மொத்த சேமிப்பை முதலீடு செய்தால்தான் வீடு கிடைக்கும் என்பதே யதார்த்தம்.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் இல்லை. வங்கிகள் இருந்தாலும் வீட்டுக்கடன் என்னும் பிரிவு இல்லை. அப்போது ரீடெய்ல் கடன் என்பதே ரிஸ்க் என்பதுதான் சூழலாக இருந்தது. நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் கொடுத்துவந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக ஹெச்.டி.பரேக் உருவாக்கியதுதான் ஹெச்.டி.எஃப்.சி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீபக் பரேக் வருகை

ஹெச்.டி.பரேக்கின் சகோதரர் மகன் தீபக் பரேக். இவர் சேஸ் மன்ஹாட்டன் நிறுவனத்தில் பணியாற்றினார். 30 வயதுகளின் தொடக்கத்தில் இருந்த இவர், ஹெச்.டி.பரேக்கின் கோரிக்கையை ஏற்று 50% சம்பளக் குறைப்புடன் ஹெச்.டி.எஃப்.சி-யில் இணைகிறார்.

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ ஆரம்பத்தில் 5% அளவுக்கு முதலீடு செய்தது. இது போல, பெரும் நிறுவனங்களிடம் கடன் வாங்கி சிறு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதுதான் பிசினஸ்.

தீபக் பரேக்
தீபக் பரேக்

முதல் பத்தாண்டுகளில் பிசினஸ் சிறப்பாக இருந்தாலும் இந்தப் பிரிவில் இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியாத சூழல் உருவானது. 1990-களில் குவைத் போர், இந்தியாவின் அந்நியச் செலாவணி சிக்கல் ஆகிய காரணங்களால் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் சூழல் உருவானது. 18.5% வட்டியில் பணத்தைப் பெற்று சிறிய தொகைக்கு வீட்டுக்கடன் கொடுத்தால் வெற்றி அடையும் சூழல் இல்லை. மேலும், அந்தச் சமயத்தில் வீட்டுகடன் வாங்குவதற்கு மக்கள் முன்வந்தனர். ஆனால், டெபாசிட் செய்வதில் தயக்கம் காண்பித்தனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

அந்தச் சமயத்தில், தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கித் திட்டமிட்டு வந்தது. வங்கி தொடங்குவதற்கு ஹெச்.டி.எஃப்.சி விண்ணப்பித்தது. அப்போது சிட்டி வங்கியின் மலேசியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரியாக ஆதித்ய பூரி செயல்பட்டு வந்தார். இதற்காக மலேசியா சென்ற தீபக் பரேக் ஆதித்யா பூரியைச் சம்மதிக்க வைத்தார் தீபக் பரேக். ஆதித்ய பூரியும் குறைந்த சம்பளம் மற்றும் சலுகைகளுடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹெச்.டி.எஃப்.சி வங்கி செயல்படத் தொடங்கியது. (இதே ஆண்டு நவம்பரில் ஹெச்.டி பரேக் மறைந்தார்)

ஆதித்ய பூரி
ஆதித்ய பூரி

தனக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்னும் கோரிக்கையுடன் இந்தியா வந்தார் ஆதித்யா. என்ன பெயர் வைக்கலாம் என்பதில் இருந்து சிக்கல் தொடங்கி. பேங்க் ஆஃப் பாம்பே என்பது தீபக்கின் விருப்பமாக இருந்தது. அல்லது எப்படியாவது பாம்பே என்னும் பெயர் ஏதாவது ஒரு வடிவத்தில் வங்கியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம். கிரேட்டர் பேங்க் ஆஃப் பாம்பே, பாம்பே இன்டர்நேஷனல் பேங்க் எனச் சில பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், ஹெச்.டி.எஃப்.சி வங்கி என்பதுதான் பலரின் விருப்பமாக இருந்தது.

ஆனால் ஹெச்.டி.எஃப்.சி என்னும் பெயரைப் புதிய வங்கியுடன் பயன்படுத்த ஹெச்.டி.எஃப்.சி இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கவில்லை. ஹெச்.டி.எஃப்.சி-க்கு என ஒரு கலாசாரம் இருக்கிறது. புதிய வங்கியால் அதைக் கடைப்பிடிக்க முடியுமா என்பது ஹெச்.டி.எஃப்.சி இயக்குநர் குழுவின் வாதம். ஆனால், ஆதித்யா பூரி, ``ஹெச்.டி.எஃப்.சி என்னும் பெயர் இருந்தால் இங்கு இருக்கிறேன். இல்லையெனில் கோலாலம்பூர் செல்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என அறிவித்ததால், ஹெச்.டி.எஃப்.சி வங்கி என்னும் பெயருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வெற்றி

ஆதித்ய பூரியின்கீழ் வங்கி அடுத்தடுத்து பல உயரங்களைத் தொட்டது ஹெச்.டி.எஃப்.சி வங்கி. மற்ற வங்கிகளின் தலைவர்கள் வியக்கும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு லட்சம் கோடி ரூபாய் என்னும் சந்தை மதிப்பைத் தொட்ட முதல் வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியாக இருக்கலாம்.

ஹெச்.டி.எஃப்.சி
ஹெச்.டி.எஃப்.சி

ஆனால், அதனைக் கடந்து தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதைவிட முக்கியம், தாய் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சியைவிட இரு மடங்கு அளவுக்கு பெரிய நிறுவனமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி வளர்ந்திருக்கிறது.

பெரும்பாலான வங்கிகள் விமானப் போக்குவரத்து துறைக்கு கடன் கொடுத்தன. ஆனால், ஆதித்ய பூரியின் நண்பராக இருந்தாலும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஹெச்.டி.எஃப்.சி கடன் கொடுக்கவில்லை.

ஏன் இணைப்பு?

வீட்டுக்கடன் என்னும் பிரிவு இல்லாத சூழலில் தொடங்கப்பட்ட ஹெச்.டி.எஃப்.சி, பெரிய வெற்றி பெற்றது. இதுவரை 90 லட்சம் வீட்டுக்கடன்களை ஹெச்.டி.எஃப்.சி கொடுத்திருக்கிறது. ஆனால், தற்போது வீட்டுக்கடன் பிரிவு என்பது போட்டி நிறைந்ததாக மாறி இருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணையும்போது பெரிய வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கிடைக்கும். தவிர, வங்கியின் ஒரு பிரிவாக மாறும்போது குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்கும் (Cost of funding).

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லது மொத்தமாக பெரிய நிறுவனங்களிடன் கடன் வாங்க வேண்டி இருக்கும். அதனால் அந்த நிதிக்கு செலுத்த வேண்டிய வட்டி அதிகம். ஆனால், வங்கியைப் பொறுத்தவரை, குறைந்த வட்டியில் டெபாசிட் திரட்ட முடியும் என்பதுதான் இந்த இணைப்புக்கான காரணம்.

தவிர, பெரிய வளர்ச்சி பெற்ற ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்துக்கு அடுத்தகட்ட வளர்ச்சி என்பது மெதுவாக இருக்கும். அதனால் வங்கியுடன் இணைத்தால் வளர்ச்சியும் பெரிதாக இருக்கும், குறைந்த வட்டியில் பணமும் கிடைக்கும்.

இணைப்பு
இணைப்பு

இதுவரை ஹெச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக்கடன் கொடுப்பதில்லை. ஆனால், ஹெச்.டி.எஃப்.சியின் டிஸ்ரிபியூட்டராக வங்கி செயல்பட்டது. இனி ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூலமே வீட்டுக்கடன் பெற முடியும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைவது என்பது இயல்பான ஒன்று. நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த இணைப்பு தற்போது சாத்தியமாகி இருக்கிறது என்பதே வங்கியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

வங்கி தொடங்கும்போது ஹெச்.டி.எஃப்.சி என்னும் பெயரைப் பயன்படுத்த அப்போதைய இயக்குநர் குழு விரும்பவில்லை. ஆனால், தற்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடனே ஹெச்.டி.எஃப்.சி இணைந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism