சமீபத்தில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், தனியார் வங்கியொன்றில் வாங்கியிருந்த வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு தீக்குளித்து உயிரிழந்துள்ளார். வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட முடியாத இதுபோன்ற சங்கடங்களை நம்மில் பலரும் எதிர்கொண்டிருப்போம். இனிவரும் காலங்களில் கடன் சிக்கல் உருவானால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு 8 டிப்ஸ் இதோ...

1. நாம் ஒவ்வொருவரும் பல தேவைகளுக்காகக் கடன் வாங்குகிறோம். சிலர் திருமணம், டூர் மற்றும் இதர செலவுகளுக்காக பர்சனல் லோன் வாங்குகின்றனர். பலர் வாகனங்கள் வாங்கு வதற்காகவும், வீடு வாங்குவதற்காகவும் வங்கிகள், ஃபைனான்ஸ் நிறுவனங்களிலிருந்து கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும்போது நமது இன்றைய நிதி நிலைமை எவ்வாறு உள்ளது, எதிர்கால நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என அலசி ஆராய்ந்து கடன் வாங்குவது அவசியம். சுயமாக ஆராய முடியாதபோது, நிதி அறிவு உள்ள நண்பர்களிடம் அல்லது ஆலோசகரிடம் கலந்து முடிவெடுக்க வேண்டும்.
2. உள்நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு பார்க்கும் வேலை போய்விட்டால், இன்னொரு வேலை அந்தச் சம்பளத்தையொட்டி சற்று கூடவோ, குறையவோ கிடைத்துவிடும். ஆனால், வெளி நாடுகளில் வேலை செய்யும் பலர் வேலையை இழந்துவிட்டு இந்தியாவில் வந்து வேலை செய்யும்போது, சம்பளம் கணிசமாகக் குறைந்துவிடும். பல நாட்டு பொருளாதார நிலைகளில் அடிக்கடி பிரச்னைகள் வந்து கொண்டிருப்பதால், வேலைக்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே, வெளிநாட்டுச் சம்பளத்தை நம்பி நீண்டகால கடன்களை இந்தியாவில் வாங்காமல் இருப்பது நன்று.
3. தகுதிக்கு மீறிய கடனை வாங்காமல் இருப்பது நன்று. இந்தியாவில் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால், சொந்த வீட்டுடன் ஒப்பிடும்போது வீட்டு வாடகை மிகக் குறைவு. அதுபோல் பொது வாகன வசதிகளும் நன்றாகவே உள்ளன. ஆகவே பணம் அதிக உபரி இல்லாதவர்கள், கடன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுபோல வாகனமும் கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. எனவே, வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் வாங்குவதற்கு முன், 50 சதவிகிதத்துக்கும் மேலான தொகையைக் கையில் சேர்த்துக்கொண்டு வாங்குவது நல்லது. அவ்வாறு செய்வது கடன் சுமையைக் குறைக்கும். கடன் காலத்தையும் குறைக்கும். வீடும் சீக்கிரத்திலேயே சொந்தமாகிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS4. குறைந்தபட்சம் ஆறு மாத கால செலவையாவது எமர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ள இதுவரை அறிவுறுத்தி வந்தோம். கொரோனாவுக்குப் பிறகு, இந்த எமர்ஜென்சி ஃபண்டை 12 மாத செலவை ஈடு செய்யுமாறு வைத்துக்கொள்வது சிறந்தது. இப்படிச் செய்யும்போது, பலவிதமான இக்கட்டுகளை நாம் தவிர்க்கலாம்.

5. நமது மத்திய ரிசர்வ் வங்கி, வாங்கிய கடன்களுக்கு தவணை கட்ட முடியாதவர் களுக்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் 2020 வரை சலுகை அறிவித்தது. தற்போது கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் வங்கிகளுக்கு வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த மாதத் திலிருந்து வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங் களும் கடன்களை மறுசீரமைப்பு செய்து தர முன்வரும். ஆகவே, இந்த வசதியைப் பயன்படுத்தி, கடன் வாங்கியுள்ளவர்கள் தங்களது தவணைத் தொகையை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.
6. பெரிய கடன்களை வாங்குபோது, டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். பல வங்கிகள் கடனோடு சேர்த்து இந்த இன்ஷூரன்ஸையும் இணைத்து விற்கின்றன. மலிவான விலையில் பாலிசி எடுக்க நினைப்பவர்கள், தனியாக எடுத்துக் கொள்வது சிறந்தது. கடன் எடுத்துள்ள நபருக்கு உயிர் இழப்பு நிகழும்போது, இந்த பாலிசிகள் கைகொடுக்கும். கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை குடும்பம் இழக்க வேண்டி யிருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
7. அனைத்தையும் தாண்டி ஒருவர் வாங்கிய கடனைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும்போது, வங்கியை அணுகி பிரச்னையை விவரித்துக் கூறி, என்னென்ன ஆப்ஷன்கள் உள்ளன என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படலாம்.நாம் செய்த அனைத்து முன்னேற்பாடு களையும் தாண்டி ஒருவரால் தவணைத் தொகையைத் தொடர்ந்து 6-9 மாதங்களுக்குச் செலுத்த முடியாத பட்சத்தில் வங்கிகள், சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வருகின்றன. தங்களால் கடனைச் செலுத்த முடியாது எனத் தெரிந்துவிட்டால், வங்கிகள் ஏலத்துக்கு சொத்தைக் கொண்டு வரும் முன்பே வீட்டை நாமே விற்க முன்வந்தால் லாபகரமாக அமையும். ஏனென்றால், வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வரும்போது வங்கிகள் பாக்கியிருக்கும் கடன் தொகை வந்தால் போதுமெனத்தான் நினைக்கும். ஆகவே, சொத்தை குறைவான விலைக்கு விற்றுவிட வாய்ப்புள்ளது. நாமே முன் வந்து விற்றுவிட்டால் நல்ல தொகைக்கு விற்று, வங்கிக்கு உண்டான தொகையைச் செலுத்திவிட்டு வீட்டுக்கும் பணத்தை எடுத்துச் செல்லலாம்.

8. முடிந்தவரை சமாளித்தும் வீடு நம்மை விட்டு போய்விட்டது என எடுத்துக்கொள்வோம். அதை ஒரு பெரிய இழப்பாக அவமானமாக கருதத் தேவையில்லை. உயிருடன் இருந்தால் இன்னும் எத்தனையோ வீடுகளை நாம் வாங்க முடியும். வீடு ஏலத்துக்கு வருவதை ஒரு சென்டிமென்டலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் வீடுகள் வங்கிகளால் ஏலத்துக்கு விடப்படுகின்றன. அவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதில்லை. வெற்றி/ தோல்வி, இழப்பு/ சேர்ப்பு போன்றவை எல்லாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
ஆகவே, கடன் வாங்கும்முன் இந்தக் கடன் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா என்று யோசியுங்கள்; நம்மால் திரும்பச் செலுத்த முடியுமா என்று யோசியுங்கள்; எதிர்காலத்தில் கட்ட முடியாமல்போனால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள். மிக மோசமான விளைவுகளை நினைத்துப் பார்த்துவிட்டால், எதிர்காலத்தில் கடன் பிரச்னைகள் ஏற்படும்போது எளிதாக சமாளிக்கலாம்.