ஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைப்பது எப்படி?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் ராஜசேகரன் என்ற வாசகர்.

ஆதார் கார்டை அறிமுகம் செய்ததிலிருந்தே வங்கிக்கணக்கு எண், தொலைபேசி எண், பான் கார்டு என ஒவ்வொன்றோடும் ஆதார் எண்ணை இணைக்கவேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்திவந்தது. இதில் பான் கார்டுடன் இணைத்தால்தான் வருமான வரித்தாக்கல் செய்ய முடியுமென்ற நிலை உள்ளது. எனினும், இன்னும் பலர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கிறார்கள்.

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பதற்கு காலக்கெடு விதிப்பதும், பின்னர் அதை நீட்டிப்பதுமாக மத்திய அரசு தொடர்ந்துவருகிறது. இறுதியாக, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்கவேண்டுமென்று விதிக்கப்பட்ட கெடுவும் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு விதிக்கும்போதெல்லாம் அந்தக் கெடுவுக்குள் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செல்லாததாகிவிடும் என்று மத்திய அரசு எச்சரித்தது.

பான் கார்டு செல்லாது என்றால் என்ன அர்த்தம்? பான் கார்டை ஆதாருடன் இணைத்தபின் செல்லுபடியாகுமா அல்லது புதிய கார்டுதான் வாங்கவேண்டுமா என்பதற்கெல்லாம் மத்திய அரசின் சார்பாக விரிவான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், பான் கார்டின்மூலம் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது என்று மட்டும் கூறப்பட்டது. அப்படி என்றால் இனி பான் கார்டை வருமான வரித்தாக்கல் உட்பட எவ்வித நிதிப்பரிமாற்றத்துக்கும் பயன்படுத்த முடியாது என்று தெரியவருகிறது.
அப்படியானால் இதற்குமுன் அந்த பான் கார்டு மூலம் நடைபெற்ற வருமான வரித்தாக்கல் செல்லுபடியாகுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால், கடந்த பட்ஜெட் உரையின்போது, பான் கார்டின் முந்தைய பயன்பாடுகள் அனைத்தும் செல்லுமென்று உறுதியளிக்கப்பட்டது.
பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் முறை
உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் கார்டை இதுவரை இணைக்கவில்லையா? எளிய முறையில் ஆன்லைனிலேயே இதைச் செய்து முடிக்கலாம். ஆன்லைனில் இதற்கான வேலையைத் தொடங்குமுன் உங்களுடைய ஆதார் கார்டையும், பான் கார்டையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும். அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar' என்ற மெனுவைக் காணலாம். அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கும்.

அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். அதார் எண்ணையும் பான் கார்டையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்தாயிற்று.
அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்' செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar' பட்டனைக் கிளிக் செய்யவும். (பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கேப்சா கோடுக்குப் பதிலாக ஒன்டைம் பாஸ்வேர்ட் கேட்கும்படி ஒரு கிளிக் பட்டனை வைத்திருப்பார்கள்). கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் செய்தி வரும்.
உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் அதை உறுதிசெய்துகொள்ள 'Click here to view the status if you have already submitted link Aadhaar request.' என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில், 'Click here' பட்டனைக் கிளிக் செய்யவும். அடுத்து திறக்கும் பக்கத்தில், பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவுசெய்து `View link Aadhaar Status' பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுடைய பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுவிட்டது என்று செய்தி கிடைக்கும். உடனே இதைப் பின்பற்றி பான் கார்டை ஆதாருடன் இணையுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!