ஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது? #DoubtOfCommonMan

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பவர்களைவிட ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். என்றாலும், ஏ.டி.எம்-களிலிருந்து பணம் எடுப்பவர்கள் சில சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "ஏடிஎம்-களிலிருந்து பணம் எடுக்கும்போது, கசங்கிய, கிழிந்த, இங்க் கறை படிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? இங்க் கறை படிந்த நோட்டுகளை ஏடிஎம்-களில் டெபாசிட் செய்யும்போது ஏற்கப்படுவதில்லை... அது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் கே.ஆர். உபேந்திரன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளைக் கடைகளில் கொடுக்கும்போது, சில நேரங்களில் அவற்றை வாங்க மறுப்பார்கள். காரணம் என்னவாக இருக்குமென்றால், நாமே கவனிக்காத விதமாக சிறு கிழிசலோ, கறையோ அந்த நோட்டுகளில் இருக்கும். மக்களின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ரூபாய் நோட்டுகள் சேதமடைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில், ஏடிஎம் மெஷின்களிலேயே கிழிந்த, கறை படிந்த ரூபாய் நோட்டுகள் வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறது. எவ்வளவு பணம் அச்சிடுகிறதோ அதற்கு நிகரான தங்கம் அல்லது அரசு ஆவணங்களை இருப்பாக (Reserve) வங்கியில் வைக்கிறது. இவ்வாறு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள், வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்களின் கைகளுக்கு வருகின்றன.

1967-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஏடிஎம், 1987-ம் ஆண்டு ஹெச்.எஸ்.பி.சி (HSBC) எனும் வங்கியால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், இந்தியாவில் உள்ள இதர வங்கிகளும் ஏடிஎம்-மை பிரதானமாக்கின. தற்போது, வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பவர்களைவிட ஏடிஎம்-களில் பணம் எடுப்பவர்கள் அதிகமாகிவிட்டனர்.
பணத்தை எடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஏடிஎம் -களில் தற்போது வங்கிக்குச் செல்லாமல் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் (டெபாசிட்) வசதியும் வந்துவிட்டது. என்றாலும், ஏடிஎம்-களிலிருந்து பணம் எடுப்பவர்கள் சில சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலைதான் கேள்வி கேட்ட வாசகருக்கும் நேர்ந்திருக்கலாம். எனவே, வாசகரின் கேள்வியை பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாளர் கணேசனிடம் முன்வைத்தோம்.

"இங்க் கறை, கிழிந்த நோட்டுகள் ஏடிஎம்-களில் வருவது மிகக் குறைவு. ஒருவேளை ஏடிஎம்-களிலிருந்து பணம் எடுக்கும்போது இம்மாதிரியான இங்க் கறை படிந்த நோட்டுகள், கசங்கிய, கிழிந்த நோட்டுகள் வருமாயின், அவற்றை வங்கிகளில் உள்ள பணம் செலுத்துமிடத்தில் (Cash Counter) கசங்கிய, இங்க் கறை படிந்த நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். ஏடிஎம்-களில் புதிய ரூபாய் நோட்டுகள்தான் வைக்கப்படுகின்றன. சில நேரங்களில் பழைய நோட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எடுத்தவுடன், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் அந்த நோட்டுகள் பதிவாகுமாறு காட்ட வேண்டும். மேலும், உங்கள் முகத்தையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்துவிட்டு, வங்கிகளில் அவற்றைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
ஏடிஎம்-களில் கசங்கிய, இங்க் கறை படிந்த பணத்தை டெபாசிட் செய்யும்போது, ஏடிஎம்-களில் உள்ள சென்சார், இந்த நோட்டுகளைக் கண்டறிந்து அவற்றை நிராகரிக்கிறது. இதற்குக் காரணம், அங்கிருக்கும் சென்சார்தானே தவிர மற்றபடி எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் இந்தப் பணத்தை டெபாசிட் செய்ய வங்கிகளை அணுகலாம் அல்லது மேற்கூறியவாறு இந்தப் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!