Published:Updated:

கடனிலிருந்து விடுபடும் வழிமுறைகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி
டன் வாங்கும்போது, `அடுத்த சில மாதங்களில் எப்படியாவது செலுத்திவிடலாம்’ என்று நினைத்துத்தான் வாங்குகிறோம். பிறகு, அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்குச் சிக்கலில் சிக்கி விடுகிறோம்.

தனியார் ஐ.டி நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜராகப் பணிபுரிபவர் ரமேஷ். கைநிறைய சம்பளம். ஆனாலும் அவரின் வாழ்க்கை கடனில்தான் போய்க்கொண்டிருக்கிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என அனைத்துக் கடன்களையும் மனிதர் எடுத்துவைத்திருக்கிறார்.

கடனிலிருந்து விடுபடும் வழிமுறைகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

வீட்டுக் கடன் வாங்குவதற்கான டௌன் பேமென்ட் கட்டுவதற்குக்கூட தனிநபர் கடன் வாங்கியிருக்கிறார். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்படி அவருடைய கடன் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இவரைப்போலத்தான் நம்மில் பலர் கொஞ்சம்கூட யோசிக்காமல், கடன் வாங்கிச் சிக்கலில் சிக்கிக்கொள்கிறோம். கொரோனா காலத்தில் சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு ஆகியவற்றால் கடனைச் செலுத்த முடியாமல் பலரும் தவியாய்த் தவித்துவருகிறார்கள். இனிவரும் காலங்களில் கடன் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கத் திட்டமிடுவது எப்படி, ஏற்கெனவே இருக்கும் கடன் பிரச்னைகளிலிருந்து மீள்வது எப்படி என நிதி ஆலோசகர் சா.ராஜசேகரனிடம் கேட்டோம்.

“அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதால்தான் கடன் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதுவரை எப்படியோ சமாளித்துவிடலாம் என்றிருந்தோம். கொரோனாவின் பிடியில் நம் ஒவ்வொருவரின் வீட்டுப் பொருளாதாரமும் சிக்கியிருக்கிறது. இனிவரும் காலங்களில் அதிக கடனின்றி வாழ்ந்தால்தான், சரியான பாதையில் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்பதை மனதில் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ளுங்கள்” என்றவர், கடனிலிருந்து மீள்வதற்கான டிப்ஸ்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

Debt
Debt

பகுதி நேரச் சம்பாத்தியம்

‘‘செலவைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவது கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு முக்கியமான வழி என்றால், பகுதி நேர வேலைகளைப் பார்த்து, நமது வருமானத்தை இன்னும் அதிகப்படுத்துவது இன்னொரு முக்கியமான விஷயம்.

‘கொரோனா கோர தாண்டவம் ஆடும் நிலையில், நன்றாக வேலை செய்பவர்களே வேலையிலிருந்து நீக்கப்படும்போது பகுதி நேர வேலை எப்படிக் கிடைக்கும்’ என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், கொரோனா சில நல்ல பிசினஸ் வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், கொரோனாவுக்குப் பிறகு பிசினஸ் வாய்ப்புகள் மெள்ள மெள்ளப் பெருகும் எனவும் அத்துறை சார்ந்தவர்கள் சொல்லிவருகிறார்கள். அதனால் சின்னச் சின்ன பிசினஸ்களைச் செய்தும் பகுதி நேரமாகச் சம்பாதிக்க முடியும். அதைக் கொண்டு, இருக்கும் கடனை முதலில் அடைக்கலாம்.

மேலும், இதுவரை குடும்பத் தலைவர் மட்டுமே வேலைக்குச் செல்பவராகவும், அந்த வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் தேவைகளுக்கு போதுமானதாகவும் இருந்திருக்கலாம். சம்பளம் குறைவு, வேலை இழப்பு பிரச்னைகள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களும், குறைவான சம்பளம் என்றாலும்கூட, ஆளுக்கு ஒரு வேலையைப் பார்த்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சீக்கிரமாகக் கடனைச் செலுத்தி முடிக்கலாம்’’ என்றார் ராஜசேகரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இ.எம்.ஐ-யைத் தொடர்ந்து கட்டுங்கள்!

` `ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை’ என ஆர்.பி.ஐ சொல்லியிருக்கிறது. அதனால் அந்த இ.எம்.ஐ தொகையை மிச்சம் பிடித்து, இதர கடன்களைச் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம்.

 சா.ராஜசேகரன், யூ.என்.சுபாஷ், பி.பத்மநாபன்
சா.ராஜசேகரன், யூ.என்.சுபாஷ், பி.பத்மநாபன்

“இன்றைய நிலையில், ஆர்.பி.ஐ வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக் காலத்துக்கு வட்டி போடப்படுகிறது. இதனால், பல தவணைகள் கூடுதலாக இ.எம்.ஐ செலுத்த வேண்டிவரும். எனவே, வங்கி இ.எம்.ஐ-யைச் செலுத்த முடியும் என்பவர்கள், இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகச் செலுத்துவதே சிறந்தது. சம்பளக் குறைவு, வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மட்டும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்குச் செலுத்த வேண்டிய கூடுதல் தொகையை எப்படிச் சேர்ப்பது என்பது குறித்து அதற்கான திட்டமிடலையும் முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நம்மில் பலர், வசிப்பதற்குச் சொந்த வீடு இருந்தாலும், வருமான வரிச் சலுகை பெறுவதற்காக வீட்டுக் கடன் வாங்கி இரண்டாவது, மூன்றாவது என வீடுகளை வாங்குவார்கள். `கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காகப் பெருகி வளரும்’ என்ற எண்ணத்தில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி வருகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது நிச்சயம் தவறு’’ என்றார்.

வேண்டாம் கிரெடிட் கார்டு கடன்!

இன்றைய தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். ரூ.25,000-க்குமேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு கிரெடிட் கார்டைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இதைப் பயன்படுத்திக் கடன் வாங்கிவிடுகின்றனர். கொரோனா நாள்களுக்குப் பிறகு, கிரெடிட் கார்டு செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். இன்றைய நிலையில், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம்.

தனிநபர் கடனும் பொருள்களுக்கான கடனும்!

இன்றைக்கு மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தனிநபர் கடனையும், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கும் கடனையும் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். இந்தக் கடனிலிருந்து விடுபடுவது எப்படி என்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

கடனிலிருந்து விடுபடும் வழிமுறைகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

ஏதோ ஒரு வேலையில் இருந்து, மாதந்தோறும் சம்பளம் கொஞ்சம் குறைவாக வந்தாலும், இந்த இரு கடன்களுக்கான தவணைத் தொகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்திவிடுவது நல்லது. காரணம், தவணைத் தொகையைக் கட்டத் தவறினால், வட்டிக்குமேல் வட்டி போடுவார்கள். இந்தக் கடன்களுக்கு 14-18% வட்டி விதிக்கப்படும் என்பதால், மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம்.

இந்த இரு கடன்களும் கணிசமாக உள்ள நிலையில், சம்பளம் குறைந்துவிட்டது அல்லது வேலை போய்விட்டது என்ற கட்டாயத்தில் இருந்தால், உங்கள் வீட்டிலுள்ள தங்க நகைகளை வங்கிகளில் அடமானம்வைத்தோ அல்லது விற்றோ, இந்த இரு கடன்களை அடைப்பதே ஒரே வழி. தற்போது தங்க நகைக் கடன்களை வங்கிகளில் அடமானம்வைத்துக் கடன் வாங்கினால், 8 - 9% அளவுக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். தங்க நகையை வங்கியில் அடமானம்வைத்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்த இரு கடன்களையும் அடைத்துவிட்டால், அதிகம் வட்டி செலுத்த வேண்டிய கடனை ஒழித்துக் கட்டியமாதிரி இருக்கும். இதனால் சுமார் 10% அளவுக்கு வட்டிக்குச் செல்லும் பணம் மிச்சமாகும்.

முதலில் அடைக்க வேண்டிய கடன்கள்!

`இன்றைய சூழலில், எந்தெந்தக் கடன்களை முன்னுரிமை தந்து முதலில் செலுத்த வேண்டும்...’ என நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம்.

கடனிலிருந்து விடுபடும் வழிமுறைகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

“இருப்பதிலேயே வட்டி அதிகமுள்ள கடன் என்றால் அது கிரெடிட் கார்டு கடன்தான். அடுத்தது தனிநபர் கடன். இவ்விரு கடன்களை வைத்திருப்பவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிடுவது நல்லது. ஏனெனில் கிரெடிட் கார்டு கடனில் சாதாரண வட்டி விகிதத்தைத் தாண்டி, மறைமுக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதிலிருக்கும் சூட்சுமத்தைத் தனிநபர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இதுமாதிரியான கடன்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி, நம்மிடமிருக்கும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரங்களை அடமானம்வைத்து கடன் தொகையைச் செலுத்தி முடிப்பது. குறிப்பாக, தங்க நகையை அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு இந்தக் கடன்களைச் செலுத்தி முடியுங்கள். மேலும், உங்கள் நிதி சார்ந்த முதலீடுகளான பங்குகள் மற்றும் ஃபண்ட் யூனிட்டுகளை அடமானம் வைப்பது அல்லது விற்பது, ஆயுள் காப்பீட்டு பாலிசியை அடமானம் வைத்துக் கடன் பெறுவது அல்லது முதிர்வுக்கு முன்பே சரண்டர் செய்வது ஆகிய நடவடிகைகள் மூலம் அதிக வட்டியிலான உங்கள் கடன்களைச் செலுத்தி முடிக்கலாம்.

மேற்படி வாய்ப்புகள் எதுவும் இல்லையெனில் உங்கள் வங்கியை அணுகி, உங்கள் முந்தைய நிதிப் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள். இதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகுவது நல்லது. கேட்டவுடனேயே கடன் கிடைத்துவிடாது என்றாலும், சற்று பொறுமையுடன் நடப்பது அவசியம்.

மேலும், வியாபாரத்தில் ஈடுபடும் பலருக்கு கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. காலையில் கடனாக 1,000 ரூபாய் வாங்கினால், மாலையில் 1,100 ரூபாயாகத் திருப்பித் தர வேண்டும். தர முடியாமல் போனால், வட்டி குட்டி போட்டு, குட்டி வட்டி போட்டு அதிகமான தொகையைத் திருப்பித் தர வேண்டியிருக்கும். இந்தக் கடன் சிக்கலில் சிக்கியிருப்பவர்கள், நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கெஞ்சிக் கூத்தாடியாவது பணம் வாங்கி, உடனே அடைத்துவிடுவது நல்லது” என்றவர், இன்னொரு ஐடியாவையும் சொன்னார்.

தேவையில்லாத பொருள்களை விற்றுவிடுங்கள்!

“ஒரு சிலர் மதிப்புமிக்க பொருளை பரணில் போட்டு வைத்திருப்பார்கள். தற்போது எந்த வகையிலும் பயன்படுத்தாமல் இருக்கும் அந்தப் பொருளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு கடனை அடைக்கலாம்’’ என்றார்.

ஆக, தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும். அதனால் இருக்கும் கடன்களை சீக்கிரமாகவே செலுத்தி முடித்துவிட்டு, தேவையெனில் திட்டமிட்டு புதிய கடன்களை வாங்குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு