
'கிரெடிட் கார்டில் இருந்து எதுக்கு பணம் எடுத்தாங்கன்னு தெரியலையே...' என்ற யோசனை நம்மில் பலருக்கும் திடீரெனத் தோன்றுவதுண்டு. அந்தக் குழப்பத்தைப் போதுமானவரை எளிமையாகத் தவிர்த்துவிடலாம்.
விகடனின் #DoubtOfCommonman பகுதியில், "கிரெடிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டுவிட்டால், எங்கு யாரிடம் புகார் அளிப்பது ?" என்ற கேள்வியை சிவஜோதி, துரைராஜ், சோனு சில்வர்ஸ்டர் ஆகிய வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது!

கிரெடிட் கார்டு பயன்படுத்திய பிறகு கொடுக்கப்படும் பில்லை, அப்படியே குப்பையில் போடாதீர்கள். அதில் உங்கள் கிரெடிட் கார்டு நம்பர் முழுமையாக இருக்கும். அதை வைத்து உங்களை ஏமாற்ற முடியும்.
இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் மேனேஜர் எம்.ராஜப்பனிடம் பேசினோம். "கிரெடிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு முதல் படி, அதைப் பத்திரமாக வைத்தி ருப்பது. நீங்கள் அதைப் பையிலோ அல்லது பர்ஸிலோ பிறருக்குத் தெரியாவண்ணம் வைத்திருப்பது அவசியம் . உங்களிடம் பல கிரெடிட் கார்டுகள் இருக்கும்பட்சத்தில், எதை உபயோகிக்கப் போகிறீர்களோ, அதை மட்டும் கையில் எடுத்துச்செல்லலாம். கிரெடிட் கார்டை உபயோகப்படுத்திய உடனே அதைப் பைக்குள் வைத்துவிடுங்கள். அந்த இடத்திலிருந்து வெளிவரும் முன் கிரெடிட் கார்டு உள்ளதா என்று ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.
கிரெடிட் கார்டு பயன்படுத்திய பிறகு கொடுக்கப்படும் பில்லை, அப்படியே குப்பையில் போடாதீர்கள். அதை வைத்து உங்களை ஏமாற்ற முடியும். அதனால் பில்லைக் கிழித்துப்போடுவது அவசியம். காலாவதியான ( expired) கிரெடிட் கார்டுகளுக்கும் இது பொருந்தும். பழசுதானே என அலட்சியம் வேண்டாம்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் கொடுக்கும் பில்லில் கையெழுத்திடும் முன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைச் சரிபாருங்கள். அதில் காலியிடங்கள் இருந்தால் அடித்துவிடுங்கள். இல்லையென்றால், கடைக்காரர்கள் ஏதாவது ஒரு தொகையை எழுதிவிட்டு வங்கிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது.
உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களைத் தொலைபேசியிலோ, நேரிலோ பிறருக்குப் பகிரக்கூடாது. உங்கள் கிரெடிட் கார்டு நம்பரைக் கேட்டு யார் தொடர்புகொண்டாலும் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டின் செலவுகளைச் சரிபாருங்கள். அதில், நீங்கள் செலவழிக்காத தொகை குறிப்பிடப்பட்டிருந்தால், உடனே வங்கியை அணுகித் தெளிவுபெறவும்.
ஆன்லைன் ஷாப்பிங் அல்லது பணப் பரிவர்த்தனைகளுக்கு நம்பகமான தளங்களை மட்டுமே பயன்படுத்தவும். அந்தத் தளங்களுக்கு நீங்கள் உபயோகிக்கும் பாஸ்வேர்டு, பிறரால் எளிதில் யூகிக்க முடியாதவாறு இருப்பது அவசியம். upper case, Lower case, எண்கள் ( Numbers) என்று கலந்து உருவாக்கிய 'பாஸ்வேர்டாக' இருக்க வேண்டும்" என்று கூறினார்.
கிரெடிட் கார்டு திருடுபோய்விட்டால் என்ன செய்ய வேண்டும்?
"கார்டு திருடு போய்விட்டால், உடனே வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் உடனே அந்த கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாமல் தடுக்க முடியும் . நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தும் முன், திருடப்படும் பணத்திற்கு வங்கிகளால் பொறுப்பேற்க இயலாது. தொலைக்கப்பட்ட கார்டுக்குப் பதிலாக புது கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் போனில் செய்தி வருவதால், நீங்கள் அலர்ட் ஆகலாம்.

'Magnetic stripe card'களைவிட, EMV chip card பாதுகாப்பானது. கிரெடிட் கார்டுகளுக்கு ரூபாய் 50,000 வரை இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. கார்டு தொலைந்தவுடன் வங்கிக் கிளையின் டோல் ஃப்ரீ எண்ணை அழைத்து, 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அல்லது வங்கியில் ஒவ்வொருவருக்கும் கிரெடிட் கார்டு வழங்கும்போது ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்ட் வழங்குவார்கள். அதை வைத்து, வங்கியின் இணையதளத்தில் போய் நீங்களே உங்கள் கார்டை 'பிளாக்' செய்யலாம்.
உங்கள் கார்டு தொலைந்த பிறகு, பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக உங்க மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (Message) வந்தால், வங்கிக் கிளையை அணுகி விவரத்தைத் தெரிவித்து, பணத்தைத் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வங்கியால் உதவ முடியவில்லை என்றால், சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம்" என்றார்.
கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால், யூசர் ஐடி, பாஸ்வேர்டை வைத்து வங்கியின் இணையதளத்தில் போய் நீங்களே உங்கள் கார்டை 'பிளாக்' செய்யலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!