Published:Updated:

`முத்ரா வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்க என்ன காரணம்?' - தொழில் ஆலோசகர் விளக்கம்

முத்ரா வங்கிக்கடன்
முத்ரா வங்கிக்கடன்

`தொழில்நுட்பக்கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் பலரும் சிறந்த தொழில்நுட்பத்தோடு அறிவோடு, தொழில்முனைவோர்களாக உருவெடுக்கும் ஆர்வத்தோடு முத்ரா வங்கிக்கடன் பெற வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால், அவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை.’

நடுத்தர மற்றும் சிறுதொழில்முனைவோர்களுக்கு உதவும்பொருட்டு 2015, ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எனப்படும் முத்ரா வங்கிக்கடன் திட்டம். கடந்த நான்காண்டுகளில் இத்திட்டத்தில் மொத்தம் 19.2 கோடி பயனாளர்களுக்கு ரூ.9.45 லட்சம் கோடி வங்கிக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட கடன்களில் 3% அளவுக்கு ரூ.17,250.73 கோடி வாராக்கடனாக வளர்ந்திருப்பது வங்கித்துறையில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

முத்ரா வங்கிக்கடன் திட்டத்தின்படி அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய்வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிக்கடனுக்கு அடமானம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்பதால் இத்திட்டத்தின்படி கடன் வழங்குவதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், முத்ரா கடனால் பொதுத்துறை வங்கிகளின்மேல் விழக்கூடிய வாராக்கடன் சுமை குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் மட்டுமின்றி, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலும்கூட, ``குறிப்பிட்ட சில துறைகளின் வளர்ச்சிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுத்துறை வங்கிகளைக் கடன்கொடுக்கும்படி நிர்பந்திப்பது, வருங்காலத்தில் வங்கிகளுக்கு மிகப்பெரிய வாராக்கடன் சுமையாகக்கூடும்" என்று கூறியிருந்தார்.

முத்ரா வங்கிக்கடன் என்பது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் தொழில் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது என்பது உண்மையென்றாலும், கடன் தொகையை வசூலிப்பதில் வங்கிகள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. முத்ரா வங்கிக்கடனை அரசியல் தலையீட்டின் காரணமாக வழங்கவேண்டிய அழுத்தம் வங்கி மேலாளர்களுக்கு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டும் இருக்கிறது. இதன்காரணமாகக் கடனாளர்களைத் தேர்வுசெய்வதில் அதிகமாகக் கவனம் செலுத்தமுடியாத நிலை.

தொழில்முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமார்
தொழில்முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமார்

முத்ரா கடன் வழங்குவதில் வாராக்கடன் அதிகரிப்பதற்கு காரணம் என்னவாக இருக்குமென்று தொழில்முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம்.

``குறுகிய காலத்தில் வாராக்கடன் அதிகரித்திருப்பது ஆரோக்கியமற்ற சூழல். மிகக்குறுகிய காலத்திலேயே வாராக்கடனாக மாறுவது, அத்தகைய ஆய்வுகள் நன்முறையில் செய்யப்படவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தக் கடன் வழங்குவதற்கு உகந்ததா என்று ஆய்வு செய்தபின்னரே வழங்கப்பட வேண்டும். முன்னர் கொண்டுவரப்பட்ட 20 அம்சத்திட்டம் தோல்வியடைந்ததை நினைவுபடுத்துவதுபோல் தற்போது உள்ளது. வங்கிக்கடன் குறித்து ஆய்வுசெய்வதற்கான முறையான கட்டமைப்புகள் வங்கிகளில் இல்லையென்பதையே இது காட்டுகிறது. உண்மையிலேயே வங்கிக்கடன் தேவைப்படும் நபர்கள் ஒருபுறம் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி வங்கிகள் கண்டுகொள்வதேயில்லை.

தொழில்நுட்பக்கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் பலரும் சிறந்த தொழில்நுட்பத்தோடு அறிவோடு, தொழில்முனைவோர்களாக உருவெடுக்கும் ஆர்வத்தோடு வங்கிக்கடன் பெற வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால், அவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. அவர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களது புத்தாக்கச் சிந்தனையைப் புறந்தள்ளுகிறார்கள். வழங்கப்படும் கடன்களைத் தெளிவாக ஆய்வுசெய்து வழங்குவதற்குப்பதிலாக, வழக்கமான சிறுசிறு வியாபாரங்களுக்கு கடன்களை அளித்து வங்கிக்கடன் வழங்கிய எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டுமே ஆர்வம்காட்டுகிறார்கள். இப்படிச் செய்வதால் ஒருபுறம் வாராக்கடன் அதிகரிப்பதோடு, இன்னொருபக்கம், தேவைப்படுவோருக்கு கடனுதவி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே, முத்ரா கடன்களில் ஏற்பட்டுள்ள வாராக்கடன் பிரச்னைக்கான காரணங்களை விரிவாக ஆய்வுசெய்து அதை முறைப்படுத்தும் பணியை ரிசர்வ் வங்கி முன்னெடுக்க வேண்டும்" என்றார்.

முத்ரா வங்கிக்கடன்
முத்ரா வங்கிக்கடன்

கடந்த 2016 மார்ச் மாதத்தில் ரூ.596.72 கோடி, 2017 மார்ச் மாதத்தில் ரூ.3,790.35 கோடி, 2018 மார்ச் மாதத்தில் ரூ.7277.32 கோடி, தற்போது ரூ.17,250.73 கோடியாக உயர்ந்துள்ளது முத்ரா வங்கி வாராக்கடன். இந்தக் கடனை உண்மையிலேயே தேவைப்படும் தொழில்முனைவோருக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும். இனியாவது அரசாங்கம் விழித்துக்கொண்டு, வாராக்கடன் அதிகரிக்காதபடி கவனத்தோடு கையாள வேண்டும். இல்லையென்றால் இன்னும் சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை முடக்குமளவுக்குப் பெரிய சிக்கலாக உருவெடுக்கக்கூடும்.

`இனி 24 மணி நேர சேவை; பொதுமக்களின் ஆர்வம்!'- நெஃப்ட் குறித்து ரிசர்வ் வங்கி
அடுத்த கட்டுரைக்கு