Published:Updated:

ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் வட்டி சேமிப்புப் பத்திரம் உங்களுக்கு ஏற்றதா?

கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

பிரீமியம் ஸ்டோரி

BOND

மத்திய, மாநில அரசுகள் தமது நிதித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள அவ்வப் போது சேமிப்புப் பத்திரங் களை வெளியிடுகின்றன. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கடந்த 01.07.2020 முதல் அமலாக்கம் செய்துள்ள, மத்திய அரசின் 7.15% மாறும் (ஃப்ளோட்டிங்) வட்டி தரும் சேமிப்புப் பத்திரம் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

இதில் குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளில் இந்தப் பத்திரங்கள் முதலீட்டுக்குக் கிடைக்கும். இந்தப் பத்திரத்தில் தனிநபர்கள், கணவன் மனைவி கூட்டாக, கூட்டுக் குடும்பத்தினர் அனைத்துத் தரப்பினரும் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வுக் காலம் 7 ஆண்டுகள். மாறுபடும் வட்டி 7.15% (இதற்குமுன் 7.75% வட்டி வழங்கப் பட்டது) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி மாறுபடும். ஜூன் மற்றும் டிசம்பர் என முடிவடைந்த ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஜனவரி, ஜூலை மாத முதல் தேதியில் வட்டி தரப்படும்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

மூத்த குடிமக்கள் சலுகை

80 வயது தாண்டிய மிகவும் மூத்த குடிமக்கள் நான்கு ஆண்டுக்குப் பிறகும், 70-80 வயது வரையுள்ள மூத்தக் குடிமக்கள் ஐந்து ஆண்டுக்குப் பிறகும் 60 முதல் 70 வயது வரையுள்ள வர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் முன்முதிர்வு (Premature) செய்து பணம் பெறலாம். அவ்வாறு பெறும் போது, கடைசி ஆறு மாத வட்டி, நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் பாதியாக இருக்கும். மற்ற எவரும் முதிர்வுக் காலத்துக்கு முன் முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது.

வட்டி விகிதம்

தேசிய சேமிப்புப் பத்திரத்தைவிட 0.35% அதிக வட்டி. இந்த வட்டி விகிதம் நிலையானதல்ல. தேசிய சேமிப்புப் பத்திரத்தின் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்பதால், இது கூடலாம், குறையலாம். வட்டிக்கு வட்டி அதாவது, கூட்டு வட்டி என்பது கிடையாது. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் வட்டியைவிட 0.05% வட்டி அதிகம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட வட்டியைவிட 0.25% குறைவு. ஐந்து ஆண்டு அஞ்சலக எஃப்.டி வட்டியைவிட 0.45% அதிகம். ஐந்து ஆண்டு மாதந்தர வருவாய்த் திட்ட வட்டியைவிட 0.55% அதிகம்.

சேமிப்பு
சேமிப்பு

சாதகமான அம்சங்கள்

மத்திய அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்தப் பத்திரம், மின்னனு (Elctronic Form) வடிவில் உள்ளது. முதலீடு செய்யும் வங்கியில் அதற்கான சான்று தரப்படுகிறது.

அஞ்சலக மாதாந்தர வருவாய்த் திட்டத்தில் அதிகபட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் மட்டுமே. இந்தப் பத்திரத்தில் பணவரம்பு பாராமல் முதலீடு செய்ய முடியும். மேலும், மாதாந்தர வருவாய்த் திட்ட வட்டி 6.6% மட்டுமே.

மூத்த குடிமக்கள் திட்ட வட்டி, இந்தப் பத்திரம் தரும் வட்டியைவிட 0.05% மட்டுமே அதிகம். ஆனால், அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்தான். இந்தப் பத்திரம் பண வரம்புக்கு உட்படாமல் முதலீடு செய்யத்தக்கதாக உள்ளது. இதில் ரிஸ்க் கிடையாது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அவசரமாகப் பணம் தேவைப் படும்பட்சத்தில் மூத்த குடிமக்கள் திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களில் முதிர்வுத் தேதிக்கு முன்பே பணம் பெற முடியும். இந்தப் பத்திரத்தில் ஏழு ஆண்டுகள் முடிவடையும் முன் பணம் பெற முடியாது. மூத்த குடிமக்களும்கூட வயதுக்கான சான்றை சமர்ப்பித்து தான் 4, 5 மற்றும் 6 வருட முதிர்வுக்குப் பிறகு பணம் பெற முடியும்

பிற சேமிப்புப் பத்திரங்களைப் போல் இந்தப் பத்திரத்தின் மீது கடன் பெறும் வசதியும் இல்லை. இதன் வட்டி விகிதம் தேசிய சேமிப்புப் பத்திர வட்டியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. தேசிய சேமிப்புப் பத்திர வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாறுபடும். இதன் வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வேறுபடும்.

யார் தேர்வு செய்யலாம்?

சற்றுக் கூடுதல் வருமானத்துடன், வரம்பின்றி முதலீடு செய்ய விரும்புகிற இந்தியக் குடியினரான முதலீட் டாளர்களுக்கு சரியான தேர்வாக இந்த சேமிப்புப் பத்திரம் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு