Published:Updated:

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி கொடுப்பது சரியா?

ஆர்.பி.ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.பி.ஐ

ஆர்.பி.ஐ.யின் திடீர் சீர்திருத்தம்!

புதிய வங்கிகளுக்கான உரிமம் மற்றும் நடைமுறைகளை ஆராய்வதற்காக டாக்டர் பி.கே.மொகந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த செயற்குழு சமீபத்தில் தனது அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் தாக்கல் செய்தது. பெரும் குழுமங்களும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வங்கித் துறையில் நுழைவதற்கான வழிசெய்யும் இந்தச் செயற்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அவற்றின் சாதக, பாதகங்கள் என்ன என்று பார்ப்போம்.

புதிய உரிமங்களுக்கான தகுதி..!

வங்கிசாரா நிறுவனங்கள் புதிய வங்கிகளைத் தொடங்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ள மொகந்தி செயற்குழு, வங்கி நடைமுறைச் சட்டத்தில் (1949) உரிய திருத்தங்கள் மேற்கொண்டபின், பெரு நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், புதிய வங்கிகளின் மேற்பார்வைக்குத் தேவையான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு்ள்ளது. பத்து ஆண்டுகளுக்குமேலாகச் சிறப்பான செயல்பாட்டில் உள்ள ரூ.50,000 கோடிக்கும் மேலாகச் சொத்து மதிப்புள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களை வங்கிகளாக மாற்ற உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் எனவும் மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் உள்ள பேமென்ட் வங்கிகள் சிறு வங்கிகளாக மாற்றம் பெற அனுமதிக்கலாம் எனவும் மொகந்தி குழு பரிந்துரைத்துள்ளது.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரம்ப முதலீடு எவ்வளவு..?

வங்கிகளைத் தொடங்கத் தேவையான குறைந்தபட்ச மூலதனம் குறித்தும் மொகந்தி குழு வரையறை வகுத்துள்ளது. அனைத்து வகையான சேவைகளையும் வழங்கக்கூடிய வங்கிகளுக்கான உரிமம் பெற ரூ.1,000 கோடி முதலீடு செய்ய வேண்டும். சிறு வங்கிகளுக்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய வேண்டும்.

சிறப்பு நிதி நிறுவனத்தின் வாயிலாகத்தான் புதிய வங்கிகளுக்கான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள இந்தக் குழு, புதிய வங்கிகளைத் தொடங்க விரும்புபவர்களுக்கு வேறு துறையில் முதலீடுகள் இருந்தால் மட்டுமே மேற்சொன்ன கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய வங்கிகளுக்கு மட்டுமல்லாமல், சிறப்பு நிதி நிறுவனங்கள் மூலமாக ஏற்கெனவே முதலீடு செய்து வங்கிகளைத் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் வணிக நிறுவனங் களுக்கும் மேற்சொன்ன தளர்வு பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வணிக நிறுவனத்துக்கு வேறு குழும நிறுவனங் கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே இந்தத் தளர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வலுப்படும் விமர்சனங்கள்...

மொகந்தி குழுவின் பரிந்துரைகள் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசினால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தற்போதைக்கு அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இந்த நிலையில், ‘இந்தியாவின் வங்கிக் கட்டமைப் பையே புரட்டிப் போடவல்ல சிறந்த சீர்திருத்தங்கள் இவை’ என்ற ரீதியில் சஞ்சீவ் பஜாஜ் போன்ற பெரும் தொழிலதிபர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும், நிபுணர்களின் கருத்து வேறு விதமாக உள்ளது.

வங்கி உரிமம் குறித்த புதிய பரிந்துரைகளை வகுப்பதற்காகக் கணக்கியல், சட்டம், வங்கியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் மொகந்தி செயற்குழு கருத்து கேட்டபோது, ஒருவரைத் தவிர மீதமுள்ள அனைத்து நிபுணர்களும் பெரு நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் தரக் கூடாது என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் சொன்ன முக்கியமான காரணம், தற்போது நடைமுறையில் உள்ள பெரு நிறுவன நிர்வாக முறைகேடுகள்தான் என்று சொன்ன தாக மொகந்தி குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரு நிறுவனங்களின் வங்கிசாரா நடவடிக்கைகளை கண்காணிப்பது கடினம் என்றும் அந்த நிபுணர்கள் மொகந்தி குழு சொல்லி இருக்கிறார்கள்.

ரகுராம் ராஜனும் விரால் ஆச்சாரியாவும்..!

ஏறக்குறைய இதே கருத்துகளையே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சாரியாவும் சொல்லி இருக்கின்றனர். வணிகமும் வங்கியியலும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்ற உலகளாவிய கோட்பாட்டை சுட்டிக் காட்டும் ரகுராம் ராஜன், பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது, பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரக் குவிப்புக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்திருக் கிறார். ஜப்பானின் ஜைபாட்சு குழுமம் தனக்கு சொந்தமான வங்கியின் உதவியுடன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், இரண்டாம் உலகப் போருக்கும் வித்திட்டதையும், ஜப்பானுடனான போரில் வெற்றிப் பெற்ற அமெரிக்கா, ஜைபாட்சு குழுமத்தைத் துண்டு துண்டாகச் சிதறடித்ததையும் உதாரணமாக சுட்டிக் காட்டிய ரகுராம் ராஜன், ‘பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் தர தற்போது என்ன அவசரம் வந்தது’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தரச் சான்று நிறுவனங்களும் எதிர்ப்பு..!

இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்களின் வாராக் கடன் சிக்கல்களை சுட்டிக் காட்டியுள்ள உலகத் தரச் சான்று நிறுவனமான எஸ் அண்ட் பி, ‘பெரு நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்குவது ஆபத்தானது’ என்று எச்சரித்துள்ளது. இந்திய பெரு நிறுவனங்களின் நிர்வாக நெறிமுறைகளில் உள்ள பலவீனங் களைச் சுட்டிக்காட்டிய அந்த நிறுவனம், ‘பெரு நிறுவனங்களால் உருவாக்கப்படும் வங்கிகளைக் கண்காணிப்பது ரிசர்வ் வங்கிக்குப் பெரும் சவாலாக உருவெடுக்கும்’ என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி கொடுப்பது சரியா?

வங்கிகளே மக்கள் பணத்துக்குப் பாதுகாப்பு..!

பொது மக்கள் சிறுக சிறுகக் கட்டிச் சேமித்த / சேமிக்கும் சிறு சேமிப்புத் தொகை உரிய பாதுகாப்புடன் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்த உதவும் அத்தியா வசியமான ஓரு கருவியாக விளங்கிவரும் வங்கித்துறை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்றதொரு வளரும் நாட்டுக்கு வலிமையான வங்கிக் கட்டமைப்பு அடிப்படை ஆதாரமாகக் கருதப்படுகிறது.

1970-கள் வரை இந்தியாவில் இருந்த பெரும்பாலான வங்கிகள் தனியார் வசம்தான் இருந்தன. பொது மக்களின் பணத்தைத் தனியார் வங்கிகள் முறைகேடாகப் பயன் படுத்துவதாக அந்த வங்கிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பல தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டன. 1990-களில் அறிமுகப் படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகப் புதிய வங்கிகள் தொடங்க உரிமம் வழங்கப்பட்டாலும் பெரும் முதலாளிகளிடம் வங்கிகள் சென்றுவிடாத படிக்கு ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் மிகுந்த கவனத் துடனேயே செயல்பட்டன. இருந்தாலும், சில தனியார் துறை வங்கிகள் தவிர, யெஸ் பேங்க், டைம்ஸ் பேங்க், செஞ்சுரியன் பேங்க், குளோபல் டிரஸ்ட் பேங்க் போன்ற பல புதிய தலைமுறை வங்கிகள் தோல்வியையே தழுவியுள்ளன. குறிப்பாக, யெஸ் பேங்க், ஐ.எல்.எஃப்.எஸ், திவான் ஹவுசிங், லக்ஷ்மி விலாஸ் பேங்க், பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் வீழ்ச்சிக்குப் பின்னர் ‘பெரு நிறுவன சீர்கேடுகள்’ இருந்ததும் அவை வெகு காலத்துக்குப் பின்பே கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சீர்கேடுகள் வங்கிகளில் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை களை ஆர்.பி.ஐ முதலில் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மோசடி எதுவும் நடக்காது என்று உறுதியான பின்பே பெரு நிறுவனங்களுக்கு வங்கி தொடங்கும் அனுமதி தரப்பட வேண்டும்!

யார் வங்கி தொடங்க வாய்ப்புண்டு?

த்து ஆண்டுகளுக்குமுன், வங்கி தொடங்கும் அனுமதியைப் பெற்றாக வேண்டும் எனப் பல பெரு நிறுவனங்கள் துடித்தன. அந்த நிறுவனங்களில் பாதி இன்று வங்கி தொடங்கும் அனுமதியைக் கேட்கும் நிலையில் இல்லை. தற்போதைய நிலையில், ஆதித்ய பிர்லா கேப்பிடல், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், எம் அண்ட் எம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பிரமள் கேப்பிடல், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுசிங், டாடா கேப்பிடல் ஆகிய பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்கும் அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் எவற்றுக்கு வங்கி தொடங்க அனுமதி கிடைக்கும் என்பது இனிவரும் நாள்களில் தெரியும்!