மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திட்டச் செலவுக்கான நிதியில் பாதித்தொகை வெளியில் இருந்து பெறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட இருக்கிறது. இது தவிர, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனில் சில சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தனியார்மயமாக்க வேண்டிய வங்கிகள் எவை என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள்தான் தனியார் மயமாக்கலுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் வங்கித் துறை வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது.

இந்த வங்கிகளில் 2021-22-ம் ஆண்டில் இரண்டு வங்கிகள் மட்டும் தனியார்மயமாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆரம்பத்தில், வரும் நிதியாண்டிலேயே நான்கு வங்கிகளையும் தனியார் மயமாக்கிவிடலாம் என்று மத்திய அரசு கருதியது. ஆனால், அதற்கு ஊழியர்கள் சங்கத்தில் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால், எச்சரிக்கையுடன் செயல்படும்படி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால், உடனே இரண்டு வங்கிகள் மட்டும் விற்பனைக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய அரசின் தனியார்மயமாக்கலைக் கண்டித்து ஏற்கெனவே பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமையில் இருந்து இரண்டு நாள் போராடத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்கும் என்பதால், ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார் சில பொருளாதார வல்லுநர்கள்.
ஆரம்பத்தில் சிறிய மற்றும் நடுத்தரப் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கி அதற்கு எந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் பெரிய வங்கியையும் தனியார்மயமாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் 13,000 ஊழியர்களைக் கொண்ட சிறிய வங்கியாக இருக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராதான் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முதல் வங்கியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 26,000 ஊழியர்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 33,000 ஊழியர்களும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 50,000 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு, அரசியல் நிலவரம் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவு கடைசி நேரத்தில் மாறுபடலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. வங்கிகளைத் தனியார் மயமாக்கும் இந்தப் பணி இன்னும் 5 முதல் 6 மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், அடுத்து வரும் நாள்களில் இது குறித்த விவரங்கள் வெளியாக ஆரம்பித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது!