இந்திய வங்கிகளுக்கு இது ஒரு கெட்ட காலம் என்றுதான் கூற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு, கடன் வாங்கியவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பானால், வங்கிகள் ரூ.2 லட்சம் கோடிக்குமேல் நஷ்டப்பட வேண்டியிருக்கும் என நமது மத்திய ரிசர்வ் வங்கி நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல வங்கிகளில் ரூ.133 லட்சம் கோடிக்குமேல் டெபாசிட்டுகளை வைத்துள்ள சாதாரண முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இதனால் மறைமுகமாகப் பாதிக்கப் படுவார்கள் என்பதையும் கூறியுள்ளது.
வங்கித் தொழில் என்பதே டெபாசிட்டுகளை மக்களிடமிருந்து சேகரித்து, சில சதவிகிதம் வட்டியைக் கூட்டி, தேவைப்படும் மக்களுக்கு கடன் தருவதுதான். ஆனால், ‘டெபாசிட்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டியைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருங்கள்; ஆனால், கடன் கொடுத்தவர்களுக்கு வட்டிக்கு வட்டி வாங்காதீர்கள்’ என்ற பேச்சுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த சில நாள்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, வட்டிக்கு வட்டி (Interest on Interest) என்பது கோவிட்-19 காலத்தில் தவிர்க்கப்படலாம் என்ற பேச்சும் இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதற்கிடையே, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில், கடந்த மார்ச் – ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதத்துக்கு மொரடோரியம் எடுத்தவர்களின் பாதிப்பை அறிவித்துள்ளது. ரூ.30 லட்சம் கடன் இன்னும் 15 வருடங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டிய காலம் உள்ளது என எடுத்துக்கொண்டால், அந்தக் கடனுக்கு ரூ 4.54 லட்சம் அல்லது 16 இ.எம்.ஐ கூடுதலாகச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஆகவே, இந்த ஆறு மாத காலத்தில் வட்டிக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தரும்பட்சத்தில், வீட்டுக் கடன் வாங்கியவருக்கு இந்த ரூ.4.54 லட்சம் சுமாராக மீதமாகும் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ரூ.30 லட்சத்தைவிடக் குறைவாகக் கடன் வாங்கியவர்களுக்கு, நிவாரணம் குறைவாகவும், அதே சமயத்தில் அதிகத் தொகை கடன் வாங்கியவர்களுக்கு அதிகமாகவும் நிவாரணம் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. இதில் நீதிமன்றம் ஏதேனும் உச்சபட்ச வரம்பை நிர்ணயம் செய்யுமா அல்லது கடன் தொகை ஒரு பொருட்டாக இருக்காதா என்பதில் இதுவரை தெளிவு பிறக்கவில்லை.
இந்த ஆறு மாத காலத்தில் ஒழுங்காகக் கடனை செலுத்தி வந்தவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதும் இந்தச் சமயத்தில் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. மேலும், இந்த நிவாரணத்தை அரசாங்கம் ஈடுகட்டுமா அல்லது கடன் கொடுத்த நிறுவனங்கள் தத்தமது கணக்குகளில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதும் தெளிவாகவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுத்துறை வங்கிகளுக்கு அரசாங்கம் எப்படியும் இந்த இழப்பை ஈடு செய்துவிடும் என்பது சொல்லப்படாத சட்டம். ஆனால், தனியார் வங்கிகள்தான் முழிபிதுங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் மிகவும் பலவீனமாக இருக்கும் தனியார் துறை வங்கிகள்பாடு திண்டாட்டம்தான்!

இந்த ஆறு மாத மொரடோரிய காலத்துக்கு வட்டியையோ, வட்டிக்கு வட்டியையோ தள்ளுபடி செய்தால், அது கடன் வாங்கியவர் களுக்கு சுமையைக் குறைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்தப் பளுவை அரசாங்கம் தன்மீது அரசாங்கம் தூக்கி வைத்துக்கொண்டால், சந்தையில் சலசலப்பு அதிகமாக இருக்காது; பொருளாதார நெருக்கடிகளும் வராது. சில வளர்ந்த பொருளாதார நாடுகளில் நடந்ததுபோல, பல கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்தது போல, நமது அரசாங்கமும் செய்தால், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சிதான்!
ஆனால், கோவிட்-19 பிரச்னை காரணமாக அரசின் வருமானம் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் அப்படியொரு முடிவை எடுக்குமா என்பது கேள்விக்குறியே!
இந்தப் பிரச்னையில் தெளிவு பிறக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!