Published:Updated:

40-வது ஆண்டைத் தொட்ட நபார்டு வங்கி; தமிழக வளர்ச்சிக்காக ₹40,000 கோடி வழங்க திட்டம்!

நபார்டு வங்கியின் 40வது ஆண்டு தொடக்க விழா
நபார்டு வங்கியின் 40வது ஆண்டு தொடக்க விழா ( PRK )

விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982-ம் ஆண்டு ஜூலை 12 அன்று நிறுவப்பட்ட நபார்டு வங்கி தற்போது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ``தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்காக நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982-ம் ஆண்டு ஜூலை 12 அன்று நிறுவப்பட்ட நபார்டு வங்கி (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி-National Bank for Agriculture and Rural Development) தற்போது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐ.ஏ.எஸ்

இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தினை நோக்கமாகக் கொண்டிருக்கும் நபார்டு வங்கி, கிராம வளர்ச்சிக்கானத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன்களை வழங்குகிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் நபார்டு வங்கியின் 40-வது ஆண்டு தொடக்க விழா காணொளிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ``கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்ததாகப் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், ``இன்று, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேசும்போது, ``நபார்டு வங்கி தனது பணிகளை விரிவுபடுத்தி, ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது." என்றார்.

குறிப்பாக விவசாயிகள் முன்னேற்றம், வங்கிக் கடனுதவியை அதிகரித்தல், ஊரக உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நபார்டு வங்கி கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்து விரிவாக பகிர்ந்துகொண்டார் .

நபார்டு வங்கியின் 40வது ஆண்டு தொடக்க விழா
நபார்டு வங்கியின் 40வது ஆண்டு தொடக்க விழா
PRK
நபார்டு வங்கி அறிவிப்பு... 
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.45 லட்சம் 
நிதி உதவி!

இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் இம்ரான் அமின் சித்திக் முன்னிலையில் இந்தியன் வங்கிக்கும், நபார்டு வங்கிக்கும் இடையே பல்வேறு கடனுதவித் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறப்பாக பங்களித்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு