Published:Updated:

ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்குமா புதிய வங்கி?

தலையங்கம்

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவின் பல்வேறு மாநில நிதியமைச்சர்களில் யாரும் சிந்தித்துப் பார்த்திராத வகையில் யோசித்து வருகிறார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசின் கருவூலத்திலிருந்து, அரசாங்கத்தின் பல்வேறு துறை களுக்குத் தேவையான நிதியைத் தருவது உள்ளிட்ட நிதி சார்ந்த பணிகளுக்காக ‘பணம் செலுத்து வங்கி’ (Payment Bank) ஒன்றைத் தொடங்க இருப்பதாகவும் இதற்கான அனுமதியை நமது மத்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டு விண்ணப்பிக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர். இந்த அனுமதி தமிழக அரசுக்குக் கிடைக்கும் எனில், இந்தியாவிலேயே ‘பணம் செலுத்து வங்கி’க்கான உரிமம் பெறும் முதல் மாநிலமாகத் தமிழகம் இருக்கும்!

இந்த ‘வங்கி’க்கு இப்போது என்ன அவசியம் என்று பலரும் கேட்கலாம். ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், வரவு எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு செலவுக் கணக்கும் முக்கியம். இந்த அடிப்படை விதிமுறைதான் நாட்டுக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்தாலும், அது முறையாகச் செலவு செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை நிதியமைச்சருக்கு உண்டு.

இந்தக் கடமையை நன்கு உணர்ந்த பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர் பதவியேற்றவுடன் தமிழகத்தின் பல்வேறு துறைகளுக்கு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எப்படிச் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க, பல்வேறு துறைகளில் 1,946.3 கோடி ரூபாய் செலவழிக்கப்படாமலே வங்கிக் கணக்குகளில் பல ஆண்டுகளாகத் தூங்குவதைக் கண்டுபிடித்தார். மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்கிற கூப்பாடு ஒருபக்கம் இருக்க, இப்படி பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் கிடப்பது யார் குற்றம்?

தமிழக அரசாங்கத்துக்கென தனியாக ‘பணம் செலுத்து வங்கி’க்கான உரிமம் கிடைத்தால், அரசின் எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தேவையோ, அந்த அளவு நிதியை அரசால் அளிக்க முடியும். தவிர, அரசு அளிக்கும் நிதியில் ஒவ்வொரு துறையும் எவ்வளவு செலவு செய்கிறது, எப்படிச் செலவு செய்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அரசுப் பணம் ஒவ்வொரு ரூபாயும் யார், யாருக்குப் போகிறது என்கிற விவரம் பதிவாகும் என்பதால், ஊழல், லஞ்சம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்!

தமிழக அரசின் இந்த நடவடிக்கை, வெளிப்படையான நிதி நிர்வாகத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்ட வெளிப்படையான நிர்வாகம், எல்லாத் துறைகளிலும் வர வேண்டும் என்பதுதான் காலம்காலமாக நம் மக்களின் எதிர்பார்ப்பு. ஆகவே, லஞ்சம், ஊழல், கமிஷன் என்பதை எல்லாம் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் அனைத்துத் துறை அமைச்சர்களும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்போல, வெளிப்படையான நிர்வாகத்துக்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க முன் வர வேண்டும்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு