
சிறிய வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் எடுத்திருந்தால், அதன் கணக்கும் புதிய வங்கியின் கணக்குக்கு மாற்றப்படும்.
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக, பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன்மூலம் வங்கிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்மூலம், வங்கிகளின் நிர்வாகத்திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் இணைப்பு என்பது நிர்வாகரீதியில் மிகப்பெரிய செயல்முறை. இணைக்கப்படவுள்ள வங்கிகளின் டேட்டாபேஸ்களை முதலில் ஒன்றாக இணைக்க வேண்டும். வங்கிகள் கையாளும் டேட்டாபேஸ்கள் எக்கச்சக்கம் என்பதால், அந்தப் பணி முடிவதற்கே மாதக்கணக்கில் ஆகும். இணைக்கப்படும் வங்கிகளின் அதிகாரிகள், பணியாளர்கள், அவர்களின் பணியிடங்கள், வங்கிக்கிளைகள் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
இப்போது குறிப்பிட்டுள்ள அனைத்துமே நிர்வாகரீதியிலான மாற்றங்கள். இவற்றைத்தாண்டி, இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களாக இருக்கும் பொதுமக்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள், குழப்பங்கள் எழுகின்றன. இவ்வளவு நாள்களாக வங்கிக்கணக்கு வைத்துள்ள வங்கியே இன்னொரு வங்கியோடு ஐக்கியமாகும்போது அவரது வங்கிக்கணக்கில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வங்கியில் வீட்டுக்கடனோ, வணிகக்கடனோ பெற்றிருந்தால் இனி அந்தக் கடன் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஆர்.செல்வமணியிடம் கேட்டோம்.
``பொதுவாக வங்கிகள் இணைப்பின்போது ஒரு வங்கி பெரிய வங்கியாகவும், அதோடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகள் இணைவதாகவும் இருக்கும். இணைப்புக்குப் பின்னர் உருவாகும் வங்கிக்கு, முதன்மையான வங்கியின் பெயரில்தான் தொடர்வார்கள். வங்கி இணைப்புக்குப்பின், முதன்மை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. அதே வங்கிக்கணக்கில் எப்போதும்போல் தொடரலாம்.

ஆனால், இணைக்கப்படும் சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள்தான் நிறைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலில் அவர்களின் வங்கிப்பெயர், முதன்மை வங்கியின் பெயருக்கு மாற்றம் பெறும். அடுத்ததாக, வங்கிக்கணக்கு எண் மாற்றப்பட்டு, முதன்மை வங்கியின் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவார்கள். வங்கிக்கணக்கு எண் மட்டுமின்றி, செக் புக், டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்தும் மாறும். ஏற்கெனவே இருந்த வங்கியின் பெயரில் பயன்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு ஆப் இனி பயன்படாது. அதை நீக்கிவிட்டு, புதிய வங்கியின் ஆண்ட்ராய்டு ஆப்பை இனி பயன்படுத்த வேண்டும்.
சிறிய வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் எடுத்திருந்தால், அதன் கணக்கும் புதிய வங்கியின் கணக்குக்கு மாற்றப்படும். வட்டிவிகிதத்தைப் பொறுத்தவரை, முதன்மை வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதத்துக்கு மாற்றுவார்கள். பெரும்பாலும் முதன்மை வங்கியின் வட்டி விகிதம் சற்று குறைவாக இருக்கும். எனவே, இவர்களின் வங்கிக்கடனுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இது சாதகமான அம்சம்தான்.

பொதுவாக, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை அந்தந்த வங்கிகளுக்கென இருக்கும் ஏ.எல்.எம். எனப்படும் சொத்துப் பொறுப்பு மேலாண்மைக் குழு (Asset and liability management) தீர்மானிக்கும். ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கும்போதெல்லாம் அதற்கேற்ப வங்கிக்கடனுக்கான வட்டி விகிதத்தையும் மாற்றுவது குறித்து அந்தக் குழுதான் முடிவெடுக்கும்.
வங்கிகள் இணைப்புக்குப்பின் உங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே வங்கிக் கிளை உருவானால், நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போதுள்ள சூழலில், வங்கிக்கணக்கு தொடங்கியபின்னர் வங்கிக்கே செல்லாமல் பணம் எடுக்க, பணம் செலுத்த என அனைத்தையும் ஏடிஎம், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தால் செய்ய முடியும் என்பதால் வங்கியில் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றம் வாடிக்கையாளர்களைப் பாதிக்காது" என்றார்.

இதிலிருந்து, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு குறித்து வாடிக்கையாளர்கள் அஞ்சத் தேவையில்லை எனத் தெரிகிறது. வங்கி நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும், வாராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும்தான் வங்கிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த இணைப்பு நடவடிக்கை சில மாத காலம் நடைபெறும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் வங்கிக்கடன் போன்ற உதவிகளைப் பெறுவது சற்று தாமதப்படலாம். அதைத்தவிர பெரிய அளவில் சிக்கல் எழ வாய்ப்பில்லை. எனவே, வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி எந்த வங்கியோடு இணைக்கப்படுகிறது, முதன்மை வங்கி எது என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டால் போதும்.