Published:Updated:

``2014-க்குப் பிறகுதான் பொதுத்துறை வங்கிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன" - நிர்மலா சீதாராமன்

`` `ஜன்தன் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் தற்போது சிறு வணிகக்கடன், முத்ரா வங்கிக்கடன் எனப் பலவித கடன்களை சிறுசிறு வணிகர்களும் பெறமுடிகிறது. கொரோனா ஊரடங்கு தடைகளையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடிகிறது” - நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நூற்றாண்டு விழாவையொட்டி டி.எம்.பி வங்கியின் பிரத்யேக தபால்தலை மற்றும் பிரத்யேக அஞ்சல் அட்டையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தொடர்ந்து நடமாடும் ஏ.டி.எம் வாகனம் மற்றும் தடுப்பூசி வாகன சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ``வங்கித்துறையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு விதமான பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் கடன்கள் திரும்பி வராத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு நிதித்துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

விளக்கேற்றிய நிர்மலா சீதாராமன்
விளக்கேற்றிய நிர்மலா சீதாராமன்
விற்கப்படும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் - எதிர்கால விளைவுகள் என்னென்ன?

2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதன் காரணமாகத் தற்போது பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் இருந்துகொண்டே பல கிராமங்களுக்கு வங்கி சேவையைக் கொடுக்க முடியும் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வைப்புத் தொகை இல்லாமல் அனைவரும் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, `ஜன்தன் யோஜனா’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.

இந்தக் கணக்கு தொடங்கப்பட்டது மூலமாகவே தற்போது சிறு வணிகக்கடன், முத்ரா வங்கிக்கடன் எனப் பலவித கடன்களை சிறுசிறு வணிகர்களும் பெறமுடிகிறது. கொரோனா ஊரடங்கு தடைகளையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடிகிறது.

வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. அது எல்லாருக்கும் முக்கியமான ஒன்று. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வங்கிச் சேவையில் 74% அரசு நிர்ணயித்த முக்கியத் துறைகளுக்கு கடன் கொடுத்துள்ளது. கொரோனா 2-வது அலை ஊரடங்கில்கூட எந்தவித கூடுதல் பிணையம் இல்லாமல் கடனுதவி கொடுக்க அரசு உதவியது. அதன் காரணமாகத் தற்போது தொழில்கள் அனைத்துமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகள் அரசு அறிவிக்கக்கூடிய நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
IPO-ல் ரூ.1,000 கோடி திரட்டும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி... கடந்த நிதியாண்டு செயல்பாடு எப்படி?

நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.வி.ராமமூர்த்தி பேசினார். ``வரலாற்றில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளான தேச விடுதலை, பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அண்மையில் உருவான பெருந்தொற்றான கோவிட் 19 உள்ளிட்ட பல்வேறு சோதனையான காலகட்டங்களை வங்கி வெற்றிகரமாக சந்தித்து வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கோவிட் 19 பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக இன்றைய தேதிவரை 13,753 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,567.62 கோடி நிதியை வழங்கியுள்ளது.

டிஜிட்டல் பேங்கிங் யுகத்தில், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன் பணப் பெட்டகம் மற்றும் கரன்சி நோட்டுகளைக் கையாளுதல், அடுக்கிக் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி” என்றார்.

சமீபத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கின் புதிய பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியாக உள்ளது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இந்தப் புதிய பங்கு வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு