Published:Updated:

ரிசர்வ் வங்கியின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்..! - ஜி.டி.பி வளர்ச்சி காணுமா?

ஜி.டி.பி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.டி.பி

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பல தவணைகளாக 2.50% அளவுக்குக் குறைத்துள்ளது

கொரோனா பேரிடர் காரணமாக, வரலாறு காணாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளதுடன், நுகர்வோர் பணவீக்கம் (CPI) கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தக் கடினமான சூழ்நிலையில், புதிய அங்கத்தினர்களுடன் முதன்முறையாகக் கூடிய நமது ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் (Monitary Policy Committee) முடிவுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கொள்கை வட்டி விகிதமான ரெப்போவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத நிலையில், ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து ஏராளமான சிறப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக்கள் குறித்தும், அவை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும் பார்ப்போம்.

ஜி.டி.பி
ஜி.டி.பி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. நீண்டகால ரெப்போ நடவடிக்கைகள் (On Tap TLTRO)

இந்தத் திட்டத்தின்கீழ், வங்கிகளுக்கு (ரெப்போ விகிதத்துடன் தொடர்புடைய) குறைவான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கியால் மூன்றாண்டுகளுக்குக் கடனாக வழங்கப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் தொகையை வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனக் கடன்களில் முதலீடு செய்ய வேண்டும்.

அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள், கடன் சந்தையிலிருந்து பெருமளவு கடன் திரட்ட உத்தேசித்துள்ள தற்போதைய நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தடையின்றி கடன் உதவி கிடைக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

2. அரசு கடன் பத்திர முதலீட்டு வரம்பு அதிகரிப்பு

நிரந்தர முதலீடு (HELD TO Maturity) என்னும் பிரிவின்கீழ் வணிக வங்கிகள் அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் உச்சவரம்பை 19.5 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உயர்த்தியிருந்தாலும், புதிய உச்சவரம்பு 31.3.2021 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. காலக்கெடு முடிய சில மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்து வந்த நிலையில், அரசுக் கடன் பத்திரங்களில் அதிகமாக முதலீடு செய்ய வங்கிகள் தயக்கம் காட்டின. ஆனால், தற்போது இந்த கால அவகாசம் மேலும் ஓராண்டு வரை (31.3.2022) நீட்டிக்கப் பட்டிருப்பதால், வங்கிகள் தமது முதலீட்டை ஆக்கபூர்வமாகத் திட்டமிட வழிபிறந்துள்ள துடன் கடன் சந்தையில் அரசுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாகவே தொடரவும் உதவியாக இருக்கும்.

3. மாநில அரசுகளுக்கு கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி நேரடியாக வாங்குதல் (OMO)

இதுவரை, மத்திய அரசு வெளியிடும் கடன் பத்திரங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி (Open Market Purchases என்ற முறைப்படி) பொது கடன் சந்தையிலிருந்து நேரடியாக வாங்கி வந்தது. தற்போது முதன்முறையாக, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களையும் சந்தையிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் முடிவை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் மாநிலங்களின் கடன் வட்டி சுமை குறையும். ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாக்கத்தால் ஏற்பட்ட ‘வரி வருவாய் இழப்பீட்டை’ சரிசெய்யும் விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், ரிசர்வ் வங்கியின் முடிவு பதற்றத்தை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது முதன்முறையாக, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களையும் சந்தையிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் முடிவை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

4. ஏற்றுமதியாளர்களுக்கான ஆதரவு

இந்திய ஏற்றுமதியாளர்கள் கொரோனா பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில்கொண்டு, ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ‘கணினி வாயிலான எச்சரிக்கை பட்டியல் (System Based Caution Listing)’ முறையை நிறுத்தி வைத்துள்ளது. ஏற்றுமதியாளர்களை ஏற்றுமதிப் பட்டியலில் வைப்பதற்கு, மீண்டும் பழைய முறைப்படி, வங்கிகளின் பரிந்துரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்றுமதி யாளர்களுக்குப் பெரும் பாரம் குறைந்துள்ளது. இதன்மூலம் ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றியுள்ளது.

ஜி.டி.பி
ஜி.டி.பி

5. வீட்டுக் கடன்களுக்கான மாறுதல்கள்

வீட்டுக் கடன் அளவீட்டின் அடிப்படை யிலும் கடன் மதிப்பு விகிதாசாரத்தின்பேரிலும் வங்கியின் ரிஸ்க் மதிப்பீடுகள் செய்து வரப் பட்டன. இதனால் அதிக அளவிலான வீட்டுக் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்க வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்பட்டு வந்தது. 31 மார்ச் 2022 வரையில் புதிய கடன் பெறுபவர் களுக்கு, ரிஸ்க் அளவீடு கடன் மதிப்பு விகிதாசாரத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. இதனால், அதிகளவில் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக வசூலிக்கப்படாது. நலிந்துபோயுள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

6. வங்கிசாரா நிதி நிறுவனங்கள்

முதன்மைத் துறையில் (Priority Sector) கடன் வழங்குவதற்காகக் குறிப்பிட்ட வகையிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வணிக வங்கிகளுடன் இணைந்து செயல்பட கடந்த 2018-ம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அனுமதி வங்கிசாரா நிதித் துறையைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அதாவது, வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள் உட்பட அனை வருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வீச்சு மற்றும் வணிக வங்கிகளின் கடன் வழங்கும் திறன் ஆகியவை இணையும்போது, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வசதி சென்றுசேரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிசர்வ் வங்கியின் புதுமையான முயற்சிகள்

பொதுவாகவே, ஜனநாயக நாடுகளில், பொருளாதார வளர்ச்சி / மீட்சி என்பது அரசியல் தலைமையின் அடிப்படைக் கடமையாகவும், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவது தலைமை வங்கியின் முக்கியப் பொறுப்பாகவும் இருந்து வருகிறது.

கொரோனா பேரிடருக்கு முன்பிருந்தே, தொடர் தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க போதிய முன்னெடுப்புக்களை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும், ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தை மீட்டெடுக்க தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்குள் ரிசர்வ் வங்கி தனது கொள்கை வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை பல தவணைகளாக 2.50% அளவுக்குக் குறைத்துள்ளது. நுகர்வோர் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவான 6 சதவிகித்திலிருந்து 7.34 சதவிகிதத்துக்குமேல் சென்றுவிட்ட தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில், வட்டி விகிதங்களை மேலும் மேலும் குறைப்பது சவாலான ஒன்றாகும்.

ஆனால், தொழில் விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடுகளைத் தூண்டுவதற்கு கடன் சந்தையில் குறைவான வட்டி விகிதங்கள் நிலவுவது அவசியமாகிறது. எனவே, தனது கொள்கை வட்டி விகிதங்களை நேரடியாகக் குறைக்காமலேயே, கடன் சந்தையில் வட்டி விகிதங்கள் குறைவாகவே வைத்திருப்பதற்கான பல புதுமையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, மாநில அரசு கடன்களைத் திரும்ப வாங்குவது, நீண்டகால ரெப்போ திட்டங்கள், வங்கிகளும் வங்கிசாரா நிறுவனங் களும் இணைந்து கடன் வழங்குவது மற்றும் வீட்டுக் கடன் சீர்திருத்தங்கள் ஆகியவை நடப்பு ரிசர்வ் வங்கி கவர்னரின் புதுமையான திட்டங்களாகும்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, நமது ஜி.டி.பி உயரும் என்று எதிர்பார்க்கலாம்!