Published:Updated:

`எஸ்பிஐ வாடிக்கையாளர்களே’- ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரவிருக்கும் புதிய நடைமுறையைத் தெரிந்து கொள்ளுங்கள்

எஸ்.பி.ஐ ஏடிஎம் கார்டுகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தாலோ அல்லது மற்ற வங்கி ஏடிஎம் கார்டு மூல எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுத்தாலோ இந்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது.

எஸ்.பி.ஐ வங்கி
எஸ்.பி.ஐ வங்கி ( vikatan )

நாடு முழுவதும் ஏடிஎம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கி புதிய நடைமுறையைக் கொண்டு வரவுள்ளது. வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

ஏடிஎம்
ஏடிஎம்

போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் நடக்கும் ஏடிஎம் மோசடிகள் குறித்து அன்றாடம் செய்திகளில் படிக்கிறோம். பெரும்பாலும் இது போன்ற மோசடிகள் இரவு நேரங்களில் நடக்கின்றன. இதைக் கட்டுக்குள் கொண்டு வரவே எஸ்.பி.ஐ புதிய விதிமுறைகளைக் கொண்டு வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ள புதிய விதிகளின் படி இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான 12 மணிநேரத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க OTP (One Time Password) என்னும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் கட்டாயமாக்கப்படும்.

அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் வழக்கமாக இருக்கும் நடைமுறைகளில் மாற்றம் இருக்காது. அதே நேரத்தில் பணம் எடுக்கும் முன், அந்தக் கணக்குக்குரிய பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு OTP மெஸ்சேஜ் வரும். அந்த மெஸ்சேஜில் இருக்கும் கடவுச்சொல்/எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்த பின்னரே பணம் எடுக்க முடியும். இந்த விதிமுறை எல்லாம் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரத்தில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றர்கள், ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின் படியே பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஏடிஎம்
ஏடிஎம்

எனினும் எஸ்.பி.ஐ ஏடிஎம் கார்டுகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தாலோ அல்லது மற்ற வங்கி ஏடிஎம் கார்டு மூல எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுத்தாலோ இந்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது. விரைவில் இந்த முயற்சியை அனைத்து வங்கிகளிலும் பின்பற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி பின்பற்றப்பட்டால் முழுநேரமும் OTP முறை கொண்டு வரப்படலாம் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.