Published:Updated:

25,000 மட்டுமே எடுக்க முடியும்..!- வங்கிப் பிரச்னையால் நகையை விற்கும் இந்தி நடிகை

பி.எம்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அதிகபட்சமே 25,000 ரூபாய்வரை மட்டுமே தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளதால், தன்னிடமுள்ள நகைகளை விற்க முடிவெடுத்துள்ளார் இந்த நடிகை.

நுபுர் அலங்கார்
நுபுர் அலங்கார்

மகாராஷ்டிராவிலுள்ள, பஞ்சாப் & மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பி.எம்.சி வங்கி) மோசடியால் ஒரு நடிகையும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நுபுர் அலங்கார்
நுபுர் அலங்கார்

பி.எம்.சி வங்கியில் 'நுபுர் அலங்கார்' என்ற இந்தி நடிகை கணக்கு வைத்துள்ளார். இவர், சாவரியா உள்ளிட்ட சில இந்திப் படங்களிலும், இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வேறு சில வங்கிகளிலும் வங்கிக்கணக்கு இருந்தபோதும், சில ஆண்டுகளுக்கு முன், அவற்றையெல்லாம் பி.எம்.சி வங்கிக்கே மாற்றிவிட்டார். இந்த நிலையில், மோசடிப் பிரச்னையில் சிக்கியுள்ள பி.எம்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அதிகபட்சமே 25,000 ரூபாய்வரை மட்டுமே தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டால் இவரது வங்கிக்கணக்கிலிருந்து 25,000 ரூபாய்க்குமேல் பணம் எடுக்க முடியவில்லை. எனவே, செலவுக்கே பணமில்லாமல் மிகப்பெரிய நிதிநெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தனது சக நடிகர்கள் மற்றும் நண்பர்களிடம் சிறிய அளவில் செலவுக்குப் பணம்பெற்றாலும், தொடர்ச்சியாக அவர்களிடமே கேட்க முடியாதென்பதால் தனது நகைகளை விற்றுச் செலவழிக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

நுபுர் அலங்கார்
நுபுர் அலங்கார்

பி.எம்.சி வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆறு மாத காலத்துக்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டாலும், வங்கிப்பிரச்னை ஆறு மாதத்துக்குள் முடியாவிட்டால் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் தொடரக்கூடும். எனவே, பணப்பிரச்னையைச் சமாளிக்க சொந்த வீட்டை விற்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இருந்தும் செலவழிக்க முடியாத சூழல் மிகுந்த மன உளைச்சல் தருவதாகவும் கூறியிருக்கிறார்.