Published:Updated:

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 3 - சொந்த வீடு உங்களுக்கு சுமையா... சுகமா?

கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்

கடன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வு!

SOLUTION

துபாயில் பணியாற்றிவரும் ஓர் இளைஞர் தன் கடன் சுமையை finplan@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் அவர் சொல்லியிருந்ததாவது...

“என் பெயர் தேவராஜன். எனது வயது 32. எனது ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். நான் தற்போது துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் மேற்பார்வை யாளராக வேலை பார்க்கிறேன். எனது மாத வருமானம் இந்திய மதிப்பில் 40,000 ரூபாய். நான் பணிபுரியும் நிறுவனம் என்னுடைய தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவுகளை ஏற்றுக்கொள்வதால், என்னால் மாதம் 35,000 வரை சேமிக்க முடிகிறது.

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 3 - சொந்த வீடு உங்களுக்கு சுமையா... சுகமா?

நான் துபாயில் பணிபுரியும் காலகட்டத்திலேயே சொந்த வீடு உள்ளிட்ட சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வகையில் சொந்தமாக வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வீட்டுக் கடன் வாங்கினேன். முதலில் ரூ.6 லட்சம் வாங்கினேன். பற்றாக் குறை ஏற்பட்டதால் பின்னர் ரூ.2 லட்சம் வாங்கினேன். நான் வாங்கிய இந்தக் கடனுக்கான வட்டி 15.5%. மாதத்துக்கு தோராயமாக 12,000 ரூபாய் வரை 15 வருடங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளேன்.

இப்போது வீடு வேலை முடிந்து விட்டது. வீட்டைக் கட்டி முடிக்க மொத்தமாக ரூ.20 லட்சம் வரை ஆகிவிட்டது. எனக்கு கடனுக்கான இ.எம்.ஐ 12,000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாக இருக்கிறது. 15 வருடங்களுக்குக் கணக்கு போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. துபாயில் இருக்கும்போதே நான் மிக விரைவாக இந்தக் கடனை முடித்துவிட்டு வெளியே வர வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய இந்த யோசனை சரியா..? நான் என்ன செய்தால் சரியான தீர்வாக இருக்கும்? இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் செய்ய உள்ளேன். திருமணத்துக்குப் பிறகு மேலும் மூன்று, நான்கு ஆண்டுகள் துபாயில் பணிபுரியலாம் என நினைக்கிறேன். அதன்பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளேன். அந்த நேரத்தில் கையிருப்பு பணம் உள்ளதைப் பொறுத்து முடிவு எடுக்க வேண்டும். அதனால்தான் கடனை சீக்கிரமாக அடைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 3 - சொந்த வீடு உங்களுக்கு சுமையா... சுகமா?

எனது இந்தப் புதிய வீட்டை தவிர, சொத்து என்று ஏதும் இல்லை. எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா இருக் கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது சிறு வயதிலேயே நான் பெற்றோரை இழந்து விட்டேன். அண்ணன், அக்கா, அண்ணிதான் என்னை நன்றாக வளர்த்து ஆளாக்கினார்கள். நான் டிப்ளோமா மெக்கானிக்கல் படித்திருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

இவருக்காக நாம் வழங்கும் தீர்வு இனி...

“பொதுவாக எல்லோரும் செய்யும் தவற்றைத்தான் நீங்களும் செய்துள்ளீர்கள். சொந்த வீடு என்பது எல்லோருக்கும் மிகப் பெரிய கனவு என்பதை மறுக்க வில்லை. ஆனால், அதற்கு முன்னதாக உள்ள திருமணச் செலவுகள், குடும்பப் பாதுகாப்புக் கான ஹெல்த் இன்ஷூரன்ஸ், டேர்ம் இன்ஷூரன்ஸ் போன்ற அடிப்படை விஷயங்களைத் தாண்டித்தான் சொந்த வீடு என்ற இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பலரும் சொந்த வீடு என்பதைத்தான் முதல் இலக்காக வைத்துக் கொள்கிறார்கள்.

கடன் வாங்கும்போதே அதை எப்படித் திரும்பக் கட்டப் போகிறோம் என எந்தத் திட்டமும் வைத்துக்கொள்ளாமல், கடன் வாங்கிய பிறகு இ.எம்.ஐ கட்டும் போதுதான் உங்களைப்போல சுமையை உணர ஆரம்பித்து, மன உளைச்சலுக்கு ஆளா கிறார்கள். வீட்டுக்கான கடனைச் செலுத்தும் நிலையில் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவதால், மற்ற குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியா மலும், அடிப்படைத் தேவை களுக்கான முதலீடுகளைச் செய்ய முடியாமலும் தடுமாறுகிறார்கள்.

இனி நீங்கள் என்ன செய்யலாம், இந்தச் சிக்கலில் இருந்து மீண்டு வர உங்களுக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்று பார்ப்போம்.

நீங்கள் ரூ.20 லட்சத்துக்கு வீட்டைக் கட்டியிருந்தாலும், ரூ.8 லட்சம் மட்டுமே கடன் வாங்கி யிருக்கிறீர்கள். வங்கிகளில் கடனுக்கு முயற்சி செய்திருந்தால் குறைந்த வட்டியில் வாங்கியிருக்கலாம். உங்களுக்கு வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருந்திருக்கும் நிலையில்தான் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கியதாக நினைக்கிறேன். தனியார் நிதி நிறுவனத்தில் 15.5% வட்டி என்பது இன்றைய சந்தைச் சூழலில் அதிகம் என்று சொல்ல முடியாது.

ரூ.12,000 இ.எம்.ஐ என்ற வகையில் 15 ஆண்டுகளுக்குக் கணக்குப் போட்டுப் பார்த்தால், ரூ.22 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்பதால்தான் நீங்கள் மிக விரைவில் கடனைச் செலுத்தி முடிக்க நினைக்கிறீர்கள். இது பெரிய தொகை என நீங்கள் யோசிக்கும் நேரத்தில், கால அளவு, வீடு பயன்பாடு குறித் தெல்லாம் யோசிக்கவில்லை. இப்படி யோசிப்பவர்கள் மொத்தப் பணத்தையும் சேர்த்துக் கொண்டு வீடு கட்டுவதுதான் சரியானது.

உங்களுக்கான தீர்வாக மூன்று ஆப்ஷன்களைச் சொல்கிறேன். முதல் ஆப்ஷன், திருமணத்துக்குப் பிறகு, உங்கள் செலவுகளைக் கணித்துவிட முடியும். செலவு களை வரைமுறைப்படுத்தி, இ.எம்.ஐ-யை அதிகரித்துச் செலுத்த முயற்சி செய்யலாம். அல்லது தற்போதைய இ.எம்.ஐ தொகையைச் செலுத்தி வருவதுடன், ஆறு மாதம், ஒரு வருட காலத்துக்கு ஒருமுறை பணத்தைச் சேர்த்து, ரூ.50,000 - ரூ.1 லட்சம் எனக் கூடுதல் தொகையாகச் செலுத்திவந்தால், நீங்கள் நினைப்பதுபோல நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் கடனைக் கட்டி முடிக்கலாம். வீட்டுக் கடன் முன்கூட்டிச் செலுத்துவதற்கு அபராதம் ஏதும் இல்லை.

இரண்டாவது ஆப்ஷன்... கடனைக் கட்டி முடிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், நான்கு ஆண்டு காலத்தையும் கடனைச் செலுத்தவே செலவிட்டு விட்டால், ஊருக்கு வந்ததும் தொழில் ஆரம்பிக்க உங்களிடம் பணம் இருக்காது. தொழில் கடன் வாங்க மெனக்கெட வேண்டியிருக்கும். எனவே, தற்போது செலுத்திவரும் இ.எம்.ஐ தொகையை அப்படியே செலுத்தி வரலாம்; உபரித் தொகையை ரெக்கரிங் டெபாசிட் மூலம் சேமித்து வாருங்கள். ஊருக்கு வந்ததும் தொழில் ஆரம்பித்து தொழில் நன்றாக வளரும் சூழலில் கடனை ப்ரீ குளோஸ் செய்து விரைந்து அடைக்கலாம். தொழில் ஆரம்பிக்க ரெக்கரிங் டெபாசிட் தொகை உதவியாக இருக்கும்.

மூன்றாவது ஆப்ஷன்... நீங்கள் தற்போது திட்டமிட்டுள்ளபடி, நான்கு ஆண்டுகள் துபாயில் பணிபுரிந்து வீட்டுக் கடனை ப்ரீ குளோஸ் செய்துவிடலாம்; அதற்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் வரை துபாயில் பணிபுரிந்து பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்கு வந்து செட்டிலாகத் திட்டமிட்டால் தொழில் ஆரம்பிக்க பணச் சிக்கல் வராமல் இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது சிலருக்கு சுமை. இன்னும் சிலருக்கு சுகம். உங்களைப் பொறுத்தவரை, மனரீதியான சிக்கல் தானே தவிர, பெரிய சுமை எனச் சொல்ல முடியாது. நான் தந்த மூன்று ஆப்ஷனில் நீங்கள் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யப் போகிறீர் என்பது உங்கள் சூழ்நிலையைப் பொறுத்தது. உங்களுக்கேற்ற சிறந்த முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.’’

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

ஐந்து அனுபவப் பாடங்கள்!

1. முதல் இலக்காக சொந்த வீட்டைத் தேர்வு செய்யக் கூடாது.

2. முடிந்த அளவுக்கு குறைவான வட்டியில் கடன் வாங்க முயற்சி செய்ய வேண்டும்.

3. செலுத்தி முடிக்க வேண்டிய தொகையைக் கணக்கிடும் நேரத்தில், நீண்டகால அவகாசம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

4. கடனை ப்ரீ குளோஸ் செய்யும் முன், அதற்குப் பிறகான பணத் தேவைகளைத் திட்டமிட வேண்டும்.

5. கடன் வாங்கும் முன்பே கடன் வட்டி, இ.எம்.ஐ உள்ளிட்ட அம்சங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிட்ஸ்

கோவிட்19-க்குப் பிறகு திவால் நிலைக்குச் செல்லும் தொழில் நிறுவனங்கள் சுமார் 60% அளவுக்கு உயர்ந்துள்ளது. 1,025 தொழில் நிறுவனங்கள் ஐ.பி.சி (IBC) நடைமுறைக்கு வி்ண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளன!