Published:Updated:

ஆடம்பரத் திருமணம்... வெளிநாட்டில் ஹனிமூன்... கசக்கும் வாழ்க்கை..! கடனிலிருந்து விடுபட என்ன வழி..?

கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -12

ஆடம்பரத் திருமணம்... வெளிநாட்டில் ஹனிமூன்... கசக்கும் வாழ்க்கை..! கடனிலிருந்து விடுபட என்ன வழி..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -12

Published:Updated:
கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

கட்டாயத் தேவைக்கு கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், ஆடம்பரம் செய்வதற்காகவும் அடுத்தவர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்கினால் கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கும் சேலத்தைச் சேர்ந்த ஹெச்.சிவபாலன் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) அவருடைய கதையைச் சொல்கிறார்...

“என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். நான் சென்னையில் எம்.என்.சி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தேன். மாதச் சம்பளம் ரூ.65,000. எனக்கு 2019-ம் ஆண்டின் மத்தியில் திருமணம் ஆனது. என்னுடைய திருமணச் செலவுகளுக்காக அப்பா ரூ.5 லட்சம் சேர்த்து வைத்திருந்தார். அந்தப் பணத்துக்குள் சுருக்கமாக திருமணத்தைச் செய்துவிடலாம் என என் அம்மா சொன்னார். ஆனால், அண்மையில் நடந்த என் பெரியப்பா மகன் திருமணத்தைவிட பிரமாண்ட மாக நடத்திவிட வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அதற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். தன் நண்பர் ஒருவரிடம் வாங்கியதால் அவர் பெரிதாக வட்டி எதுவும் நிர்ணயிக்கவில்லை. வங்கி வட்டி அளவுக்குக் கொடுத்தால் போதும் என்று சொல்லி, தன் மகளின் திருமணத்துக்கு முன்பு திரும்பத் தருமாறு கூறியிருந்தார்.

மாடல் படம்
மாடல் படம்

ஏற்கெனவே அப்பா சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன், அவர் கடன் வாங்கிய ரூ.5 லட்சமும் சேர்த்து ரூ.10 லட்சம் செலவு செய்து ஊர் மெச்ச திருமணத்தை முடித்தோம். ஏற்கெனவே திருமணச் செலவுகளுக்காக நான் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் வாங்கியிருந்தேன். இந்தப் பணத்தை ஹனிமூன் செல்ல பயன்படுத்திக்கொண்டேன். கையில்தான் காசு இருக்கே... என்ற எண்ணத்தில் மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாட்டுக்குச் சென்று வந்தோம்.

இந்த ரூ.5 லட்சத்துக்கு இ.எம்.ஐ செலுத்திவரும் சூழலில்தான் திடீரென கொரோனாகால நெருக்கடியில் நான் வேலை நீக்கத்துக்கு ஆளானேன். கடந்த ஜூன் மாதம் வேலை பறிபோன பிறகு, மாதாந்தரச் செலவுகளுக்கும், இ.எம்.ஐ செலுத்தவும் தடுமாறிப் போனேன். ஹோட்டல், பிக்னிக் என சம்பளம் முழுக்க ஜாலியாகச் செலவு செய்து பழகிவிட்ட நிலையில், திடீரென வருமானம் இல்லாமல் போனதும் வாழ்க்கை வெறிச்சோடிப் போனது. அண்மையில் எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளதால் செலவுகள் இன்னும் அதிகமாகிவிட்டன.

ஆறு மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து கடந்த மாதம் முதல்தான் நான் புதிய வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். சம்பளம் ரூ.48,000. முன்பைவிட குறைவான சம்பளம் என்றாலும் தற்போதைய சூழலை நினைத்து கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டேன். விசாலமாகச் செலவு செய்து பழகிவிட்டு திடீரென செலவுகளைக் கட்டுக்குள் அடக்கு வதால், எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துவிடுகிறது. இனிமையாய் தொடங்கிய வாழ்க்கை இன்றைக்குக் கசக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிம்மதியற்ற சூழலில் இப்போது இன்னொரு சிக்கலும் வந்துவிட்டது. அப்பா, என் திருமணத்துக்காக வாங்கிய கடன் ரூ.5 லட்சத்தை உடனே குறைந்தபட்ச வட்டியுடன் செலுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. அப்பாவின் நண்பர் அடுத்த மாதம் அவருடைய மகளுக்குத் திருமணம் வைத்துள்ளதால் பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்கிறார்.

எம்.என்.சி நிறுவனத்தில் பணியாற்றிய போது பி.எஃப் கணக்கில் ரூ.4 லட்சம் வரை இருந்துள்ளது. தற்போது புதிய நிறுவனத்தில் அந்த பி.எஃப் கணக்கிலேயே தொடர விவரம் கேட்டுள்ளார்கள். அப்பா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். பென்ஷனாக ரூ.20,000 வருகிறது. சேலத்தில் அவர் தனியாக வசிக்கிறார். வேறு சேமிப்பு, சொத்து என எதுவும் இல்லை. என் மனைவி திருமணத்துக்கு முன்பு சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஸ்டோர் கீப்பராக இருந்தார். இப்போது வேலைக்குப் போகவில்லை. குழந்தை இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு வேலைக்குப் போக இயலாத சூழலில் உள்ளார். என் மனைவியிடம் 20 சவரன் நகை உள்ளது. நகையை அடமானம் வைத்து கடனைச் செலுத்திவிடலாம் என்றாலும், என் மனைவி அதற்குச் சம்மதம் தருவாரா என்பது இன்றைய சூழலில் சந்தேகம்தான். திடீரென பணத்துக்கு என்ன செய்வது எனத் தவிப்பாக இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே என அப்பா பதற்றமாக உள்ளார். என்னுடைய இந்த நெருக்கடியிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“நடுத்தர வருமானம் கொண்ட குடும்பச் சூழலில் இருந்து படித்து நல்ல வேலையில் அமர்ந்த நீங்கள் நிதி நிர்வாகத்தைக் கொஞ்சமும் கற்றுக்கொள்ளாமல் போனது ஆச்சர்யமாக உள்ளது. ரூ.65,000 சம்பளம் வாங்கிய நீங்கள் மாதம் ரூ.25,000 சேமிப்பு மற்றும் முதலீடு செய்திருக்க முடியும். ஆனால், மொத்த வருமானத்தையும் செலவு செய்தே பழகிவிட்டீர்கள். அவசரகாலச் செலவுகளுக்காவது சேர்த்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

உங்கள் திருமணத்துக்காக உங்கள் அப்பா ரூ.5 லட்சம் சேர்த்து வைத்திருந்த நிலையில், அந்தப் பணத்துக்குள் நீங்கள் திருமணத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும். அடுத்தவர் வீட்டுத் திருமணத்துடன் ஒப்பிட்டு, கடன் வாங்கி கெளரவத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியம்தானா என உங்கள் அப்பா யோசித்திருக்க வேண்டும். வீம்புக்காகவும், வீண் பிடிவாதத்துக்காகவும் செய்த செலவுதான் இன்று உங்களுக்கு நெருக்கடியாக மாறி நிற்கிறது. ஹனிமூன் சென்றது தவறில்லை. பட்ஜெட்டுக்குள் திட்டமிட்டு உள்நாட்டிலேயே சென்று வர நிறைய இடங்கள் உள்ளதே!

சரி, நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இப்போதைய சிக்கலில் இருந்து விடுபடும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

உங்கள் அப்பாவின் நண்பர் கொடுத்த கடனை, அவர் தனது தேவைக்கு அவசரமாகக் கேட்கும் இந்தச் சூழலில் உங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதே தவிர, மீளமுடியாத கடனில் சிக்கி விட்டதாக எண்ணி நீங்கள் மன உளைச்சல் அடைய வேண்டிய தில்லை. குடும்பத்திலும் வீணாக பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனி நீங்களும், உங்கள் மனைவியும் முன்புபோல ஆடம்பரமாகச் செலவு செய்யக் கூடாது என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நீங்கள் வாங்கும் சம்பளம் ரூ.48,000 என்பதை ரூ.11,000 பர்சனல் லோன் இ.எம்.ஐ-க்கு, ரூ.17,000 குடும்பச் செலவுகளுக்கு, ரூ.10,000 வீட்டு வாடகைக்கு எனப் பிரித்துக் கொண்டு இந்த 38,000 ரூபாய்க்குள் உங்கள் மாதாந்தர பட்ஜெட்டை முடிக்க வேண்டும்.

அடுத்து, உங்கள் அப்பாவின் நண்பரிடம் வாங்கிய கடனை அடைக்கும் வழிகளைச் சொல்கிறேன்.

முதல் வழி... நகை அடமானக் கடன் வாங்குவது. உங்கள் மனைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நகைக்கடன் வாங்கி, உங்கள் அப்பா வாங்கிய கடனை அடைத்துவிட்டு, பிறகு உங்கள் சம்பளத்தில் மீதமாகும் 10,000 ரூபாயைக் கொண்டு நகைக்கடனை அடைத்து முடிக்கலாம்.

இரண்டாவது வழி... முந்தைய நிறுவனத்தில் உள்ள பி.எஃப் கணக்கை குளோஸ் செய்துவிட்டு அதிலுள்ள ரூ.4 லட்சத்துடன் இன்னும் ரூ.1 லட்சம் பர்சனல் லோன் வாங்கி கடனைக் கட்டி முடித்துவிடலாம். இப்படிச் செய்யும்போது 5 ஆண்டுகளுக்கு முன் பி.எஃப் கணக்கை குளோஸ் செய்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விவரங்களைக் கவனத்தில்கொள்வது அவசியம்.

மூன்றாவது வழி... புதிய நிறுவனத்தில் பணியாளர் கடன் ரூ.2.5 லட்சம் கிடைக்குமா என்று முயற்சி செய்து பாருங்கள். அல்லது பர்சனல் லோன் ரூ.2.5 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள். முந்தைய நிறுவன பி.எஃப் கணக்கு புதிய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு தொடரப்படும் நிலையில் அதிலிருந்து ரூ.2.5 லட்சம் லோன் எடுத்துக் கொள்ளுங்கள். ரூ.2.5 லட்சம் பர்சனல் லோனை இரண்டரை ஆண்டுகளுக்குச் செலுத்தும்பட்சத்தில் ரூ.9,500 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். சம்பளத்தில் மீதப்படும் 10,000 ரூபாயை இதற்குப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

இந்த மூன்று வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்து கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வாருங்கள். ஆனால், இதை யெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு எதிர்காலத்தில் நிதி நிர்வாகத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும். உங்கள் மாதாந்தர முதல் செலவே முதலீடாக இருக்கட்டும். பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகிக்கொண்டால் பெரும்பாலும் கடன் சிக்கலில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. வறட்டுக் கெளரவத்துக்காக ஆடம்பரம் செய்யக் கூடாது.

2. கடன் வாங்கி சுற்றுலாச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

3. அவசரகாலச் செலவுக்காவது சேமிக்க வேண்டும்.

4. பட்ஜெட் போடாமல் செலவு செய்வது பணத்தை விரயமாக்கிவிடும்.

5. பண நெருக்கடி நேரும்போது குடும்ப உறுப்பினர்கள் சண்டை போட்டுக்கொள்ளாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும்.