Published:Updated:

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 5 - மாத வருமானம் ரூ.82,000... கடன் பிடித்தம் ரூ.78,500..!

கடன் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது?

பிரீமியம் ஸ்டோரி

SOLUTION

சைகளுக்கு எல்லையை வகுத்துக்கொள்ளாமல் அகலக்கால் வைத்தால் என்ன ஆகும் என்பதற்கு இவர் சரியான உதாரணம். அவரே பேசுகிறார்...

“என் பெயர் சிவராம் பூபதி. சொந்த ஊர் கோவை. (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் 2016 முதல் பணிபுரிந்து வருகிறேன். நான் டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து, சூப்பர் வைசராகப் பணியில் சேர்ந்தேன். பிறகு பி.டெக் முடித்து 2019-ல் இன்ஜினீயராகப் பதவி உயர்வு பெற்றேன். இன்னும் 16 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் குடியிருப்பு வளா கத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். பள்ளிப் படிப்பு படித்து வருகிறார்கள்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

பணியில் சேர்ந்த நாள் முதலே வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அரசாங்க வேலையில் சேர வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என வெறியோடு இருந்தேன். இடம் வாங்கினேன். கார் வாங்கினேன், நகைகள் வாங்கினேன்.

ஆனால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, செலவு கைமீறிப்போனது. சில வேண்டாத ஆசைகளால் வாழ்க்கை தடம் மாறிப்போனது. பலவிதமான பிசினஸ்களைக் கடன் வாங்கி ஆரம்பித்து தோல்வியுற்று கடன் சுமையை அதிகப்படுத்திக் கொண்டேன். ஒருகட்டத்தில் வாழ்க்கையின் விரக்திக்கே சென்று விட்டேன். நித்தமும் செத்துப் பிழைக்கும் நிலைக்கு ஆளானேன். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் நிலை வந்ததால், என்னால் சமாளிக்க முடியவில்லை.

எனக்கு மொத்த சம்பளம் ரூ.82,000. ஆனால், கடன் கட்ட அனைத்துப் பிடித்தங்களும் போக கையில் ரூ.3,500 மட்டுமே வாங்குகிறேன்.

வெளியில் வட்டிக்கு ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கடன் சலுகைக் காலத்துக்கு விண்ணப்பித்தேன். அதனால் என் சம்பளம் ரூ.52,000 ஆக உயர்ந்தது. இதை வைத்து வங்கிசாரா நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.3 லட்சம், முன்னணித் தனியார் வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம், இன்னொரு தனியார் வங்கி ஒன்றில் ரூ.5 லட்சம் என வாங்கினேன். பணிபுரியும் நிறுவனம் சார்ந்த வங்கி மூலம் ரூ.22 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். பி.எஃப் லோன் ரூ.8.5 லட்சம் வாங்கியுள்ளேன். உறவினர்களிடம் நகைகளை வாங்கி அடமானம் வைத்துள்ளேன்.

மாடல் படம்
மாடல் படம்

இப்போது என்னிடம் உயிரைத் தவிர, வேறு எதுவும் இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் சண்டை நடப்பதால், என்ன செய்வ தென்று தெரியவில்லை. ஏதாவது செய்து கடனை அடைத்துவிட்டு வெளியில் வரலாம் என்றால் முடியவில்லை.

மாதம்தோறும் வட்டி, இ.எம்.ஐ எனக் குடும்பச் செலவுக்கு நான் படாதபாடு பட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது, வழி கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக எண்ணி எனக்குத் தகுந்த வழி காட்டுங்கள்” என உருக்கமாகக் கடிதம் எழுதியிருந்தார் சிவராம். இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“முதலில் நீங்கள் மன தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க் கையில் மீண்டு வர இயலாத சூழ்நிலை என எதுவுமே இல்லை. துணிவு மட்டுமே துணையாக இருந்தால், எல்லாவற்றையும் சமாளித்து மீளலாம்.

நாம் செய்த தவறுகளை உணர்ந்து, இனி அந்தத் தவறுகளைச் செய்யவே மாட்டேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டால் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட முடியும்.

முதலில் நீங்கள் செய்த தவறுகள் என்னென்ன என உணர்ந்து கொள்ளுங் கள். தவறான நிதி நிர்வாகம்தான் பலவிதமான பணச்சிக்கலுக்கு வழி வகுத்துவிடுகிறது. சரியான இலக்கோ, திட்டமோ இல்லாமல் வெறும் மன ஆசைகளுக்காக அகலக் கால் வைத்தது தான் இந்தச் சிக்கலுக்குக் காரணம். கடன் வாங்க அவசியம் ஏற்பட்ட பிறகு, குறைந்த அளவு வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்புகளை ஆராயாமல் ஆண்டுக்கு 36%, 48% தனிநபர்களிடம் கடன் வாங்கியது தவறு. தனிநபர்களிடம் மட்டும் ரூ.20 லட்சம் வாங்கியுள்ளீர்கள். வங்கிகளில் ரூ.9 லட்சம், கம்பெனி வகையில் ரூ.30.5 லட்சம் என மொத்தம் ரூ.59.5 லட்சம் கடன் உள்ளது.

வருமானத்தையும், திரும்பச் செலுத்தும் வாய்ப்புகளையும் ஆராயாமல் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி விட்டதால்தான் மலைப்பாகத் தெரிகிறது. இதில் ரூ.22 லட்சம் மட்டுமே நீண்ட காலக் கடன். மீதியெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டிய குறுகிய காலக் கடன். உங்கள் கடன்கள் நீண்டகாலக் கடன்களாக இருந்தால், மாதாந்தரச் செலவுகளைச் சமாளிக்க பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். எல்லாப் பிடித்தங்களும் போக, ரூ.3,500 மட்டுமே சம்பளமாக கையில் வாங்கும் நிலையில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க இயலாது. எனவே, மாதச் செலவுகளுக்கான பண வரத்தை அதிகப் படுத்திக்கொள்ள வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.

அளவுக்கு அதிகமான கடன் களை வாங்கிவிட்ட சூழ்நிலையில், பிரச்னையை எதிர்கொள்ள உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடனைத் திரும்பச் செலுத்தி முடிக்கக்கூடிய திட்டங்களை வகுப்பது. அதற்குரிய வாய்ப்புகள் துளியும் இல்லாத நிலையில் இரண்டாவதாக, ‘கடனை செலுத்தும் நிலையில் நான் இல்லை’ என்று முறையாகத் தெரியப்படுத்துவது. உங்களுக்கு பணவரத்தோ, சொத்துகளோ இல்லாத நிலையில் இரண்டாவது வாய்ப்பைத்தான் கையில் எடுக்க வேண்டும்.

நீங்கள் நண்பர்கள், உறவினர் களிடம் பரவலாகத்தான் கடன் வாங்கியுள்ளீர்கள். அவர்களை அழைத்து, உங்கள் உண்மையான சூழலைப் புரிய வையுங்கள். தற்போதைய நிலையில், அசலையோ, வட்டியையோ திரும்பச் செலுத்த இயலாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிடுங்கள். செக், இ.சி.எஸ் எனக் கொடுத்திருந்தால் ரிட்டர்ன் ஆகும். உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக யோசிக்காதீர்கள். பரவாயில்லை என விட்டு விடுங்கள்.

ரூ.3.5 லட்சம் பி.எஃப்பில் இருக்கும் பணத்திலிருந்து அதிக பட்சமாக கடன் வாங்கி, பாது காப்பான முறையில் வைத்துக் கொள்ளுங்கள். கையில் வரும் சம்பளம் ரூ.3,500 போக பற்றாக்குறைக்கு அந்தத் தொகையிலிருந்து பயன்படுத்திக் குடும்பச் செலவைச் சிக்கன மாகச் சமாளியுங்கள்.

நீங்கள் ஏற்கெனவே வாங்கிய பி.எஃப் கடன் திரும்ப சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதில் இருந்து விலக்குப் பெற முயற்சி எடுங்கள். அதனால் ரூ.18,000 வரை பணவரத்து இருக்கும் என்பதால், மாதாந்தரக் குடும்பச் செலவுகளை ஈடுகட்டலாம்.

தனியார் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் நிலையில் இல்லை என வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுத்து முறையாகத் தெரியப்படுத்துங்கள். பொதுத்துறை நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றும் நிலையில், திவால் நோட்டீஸ் (மஞ்சள் கடுதாசி) கொடுத்தால் ஏதாவது பாதிப்பு வருமா எனக் கலந்து ஆலோசித்துச் செயல்படவும்.

சட்ட ரீதியாக உள்ள வாய்ப்புகளைக் கொண்டு, ‘கடனைத் திரும்பச் செலுத்தும் சூழல் இல்லை’ எனக் கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு அறிவித்துவிடுங்கள். அதையும் தாண்டி யாராவது நிர்பந்தித்தால், ரிசர்வ் வங்கி ஆம்புட்ஸ்மேனிடம் நீங்கள் புகார் தரலாம்.

வாழ்க்கையில் தைரியமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். இனி ஒருபோதும் புதிதாகக் கடன் எதையும் வாங்காதீர்கள். சிபில் ஸ்கோர் பாதிப்பு, மேற்கொண்டு கடன் வாங்க இயலாத நிலை எனச் சில அசெளகர்யங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், துணிந்து நின்றால் பிரச்னைகளிலிருந்து மீண்டுவரலாம். எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராகி விட்டால் எல்லா சிக்கல்களும் அவிழ்ந்துவிடும். தைரியம் ஒன்றே உங்கள் பலம். வென்று வாருங்கள்.”

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அறிய வேண்டிய ஐந்து பாடங்கள்!

1. கடன் வாங்கும் முன் திரும்பச் செலுத்தும் தகுதியை ஆராய வேண்டும்.

2. தகுதிக்கு மீறிய ஆசை என்பது சிக்கலை ஏற்படுத்தும்.

3. பிசினஸ் செய்ய ஆர்வம் மட்டும் போதாது; சரியான திட்டமும் தெளிவும் தேவை.

4. மிக மிக அதிக வட்டிக்குக் கடனை வாங்கும் முன் ஒருமுறைக்கு நூறு முறை யோசிக்க வேண்டும்.

5. எதிர்பாராத சிக்கல் உருவாகிவிட்ட பிறகு மீண்டு வரும் துணிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு