Published:Updated:

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 6 - பறிபோன வேலை... பெருமைக்காக சொந்த வீடு..!

கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்

கடன் சுமையிலிருந்து மீளும் வழி..!

SOLUTION

பெருமைக்கு முன்னுரிமை கொடுத்து, வலுக் கட்டாயமாகச் சிலர் கடன் வலையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களில் இந்த இளைஞரும் ஒருவர். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. இனி, அவர் சொல்வதைக் கேட்போம்.

‘‘என் பெயர் தேவேந்திரன். எனக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). வயது 26.

நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா, சின்னதாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். பூர்வீக நிலம் இரண்டு ஏக்கரை விற்றுத்தான் அப்பா என்னைப் படிக்க வைத்தார்.

குடியிருக்கும் ஓட்டு வீடு, அம்மாவின் நகை தவிர, வேறு எதுவும் சொத்து இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்ததும் சென்னையில் முன்னணி  நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் உறவுமுறையில் எனக்குத் திருமணம் செய்ய நினைத்தார் அப்பா. திருமணத்துக்கு முன், ஊர் மெச்ச சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

கடந்த ஆண்டு ஜனவரியில் முன்னணி தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் லோன் வாங்கி ஊரில் வீட்டைக் கட்டி முடித்தேன். கட்டு மானத்தின்போது சில உறவினர்களின் பேச்சைக் கேட்டு சில வசதிகளைச் செய்ததால், கூடுதலாக ரூ.5 லட்சத்தை அப்பா உறவினரிடம் வாங்கித் தந்தார்.

கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த ஏப்ரல் முதல் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் ஊரில் தங்கியே பணியாற்றி வந்தேன். இடையில் நிறுவனம் எடுத்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் நான் வேலையை இழக்கும் சூழல் உருவானது. 

நான்கைந்து மாதங்கள் முடிந்த நிலையில், சரியான வேலை இன்னும் அமையவில்லை. மாதம்தோறும் ரூ.75,000 வரை சம்பளம் வாங்கிய எனக்கு 20,000, 25,000 சம்பளத்தில் கிடைக்கும் சின்ன வேலைகளில் சேர மனம் ஒப்பவில்லை. வீட்டுக்கான இ.எம்.ஐ ரூ.19,000 வரை செலுத்த மிகுந்த சிரமப்பட்டு வருகிறேன். அப்பாவின் மளிகைக் கடை வருமானத் திலிருந்துதான் இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன்.

இந்த நிலையில், எனக்கு பெண் கொடுப்பதாக இருந்த உறவினர் எனக்கு வேலை இல்லை என்பதால், வேறு இடத்தில் வரன் பார்த்து திருமணத்தை முடித்துவிட்டார். தற்போது இன்னொரு சிக்கலும் சேர்ந்துவிட்டது. அந்த உறவினரிடம்தான் என் அப்பா கடன் வாங்கியுள்ளார். இப்போதுதான் இந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது. அவர் உடனே வட்டியுடன் பணத்தைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். நெருக்கடியாக இருந்தாலும் அப்பாவின் மளிகைக் கடைதான் இப்போதைக்கு ஓரளவு குடும்பச் செலவுகளைச் சமாளிக்கக் கைகொடுத்து வருகிறது.

ஊர் பெருமைக்குப் பிரமாண்டமாக வீட்டை கட்டி வைத்திருந்தாலும் நான் மாடி வீட்டு ஏழை என்பது என்னை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தற்போதைய சூழலில் என்ன செய்வது என்ற குழப்பத்தில் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். என் கடன் சிக்கல் தீர வழியைச் சொன்னால் உதவியாக இருக்கும்” என்று முடித்திருந்தார்.

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“நிறைய பேர் செய்யும் தவற்றைத்தான் நீங்களும் செய்துள்ளீர்கள். வேலை கிடைத்ததும் வீட்டைக் கட்டிவிட வேண்டும், அதுவும் ஊர்பெருமைக்காக பெரிய வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தது தவறு. வாங்கிய கடன் தொகைக்குள் வீட்டைக் கட்டி முடிக்காமல், கூடுதல் கடன் வாங்கி ஆடம்பரம் செய்தது அடுத்த தவறு.

உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை வரிசைப்படி, வீடு என்பது அவசியம்தான். ஆனால், வேலையில் சேர்ந்து சரியாக செட்டில் ஆகாத நிலையில் வீட்டுக் கடனில் வீடு கட்ட அவசரப்படக் கூடாது. வீடு, கார், ஃபாரின் டூர் எனக் கனவுகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால், வேலையில் நிலைத்தன்மை ஏற்பட்டபிறகுதான் இவற்றுக்கு முயற்சி செய்ய வேண்டும். பணியில் சேர்ந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிலைத்தன்மையைப் பெற முடியும். அதிக சம்பளத்தில் வேலை என்பதில் அதிக ரிஸ்க்கும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்க சரியான தருணம் எது என அறிந்துகொண்டு வாங்க வேண்டும்.

எப்போதுமே எதிர்பாராத நிகழ்வுகள் என்னவெல்லாம் நடக்க வாய்ப்புள்ளன என ஓரளவு கணித்து, அவை நடந்தால் சமாளிக்க என்னவெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என யோசித்து முடிவு செய்தால் பெரிய சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்க முடியும்.

சரி, இனி என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். மளிகைக் கடன் வருமானத்தின் மூலம் குடும்பச் செலவுகளைச் சமாளித்து, இ.எம்.ஐ செலுத்த முடிகிறது என்பதே உங்களுக்கு பலம் தரும் விஷயம்தான்.

நீங்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகப் போவ தில்லை என்ற முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்பார்க்கும் சம்பளத்தில் வேலை அமையும் வரை, கிடைக்கும் வேலையில் அமர்ந்துகொண்டு முயற்சி செய்வதே நல்லது. சிறிய வயதில் சம்பளத்தை மட்டும் அளவு கோலாகப் பார்க்காமல், பணி அனுபவம் என்பதையும் பார்க்க வேண்டும். 

நீங்கள் கடன் பெற்ற வங்கியில் பேசி கடன் தவணைக் காலத்தை 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு நீண்டகாலமாக மாற்றிக் கொண்டால் மாதம்தோறும் நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ குறையும்.

கடன் கொடுத்தவர் நெருங்கிய உறவினராக இருக்கும் நிலையில் திடீரென நெருக்கடி கொடுக்க ஏதாவது மன வருத்தங்கள் காரணமாக இருக்கலாம். அவரிடம் இணக்கமாகப் பேசி சூழ்நிலையை விளக்கிச் சொல் லுங்கள். மாதம்தோறும் ரூ.10,000 என்ற அளவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதாகக் கூறுங்கள்.

கடன்
கடன்

அதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் பொதுத்துறை வங்கியொன்றில் நகை அடமானக் கடன் பெற்று அவருடைய கடனைச் செலுத்தி விடுங்கள். 7% வட்டிக்கு கடன் பெறும் வாய்ப்பு உண்டு. நகைக் கடனுக்கு மாதம் ரூ.10,000 ஒதுக்கிக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை நகையை மீட்டு திரும்ப அடமானம் வைக்க வேண்டியிருக்கும். ஐந்து ஆண்டுகளில் நகைக்கடன் முழுவதையும் அடைத்து நகையை மீட்டுவிடலாம்.

இடையில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்பட்சத்தில், நீங்கள் விரைவாகக் கடனை அடைத்துவிடலாம். பி.எஃப் பணம் ஏதும் எடுக்காமல் இருந்தால், அதை எடுத்துக் கொண்டு, பற்றாக்குறைக்கு மட்டும் நகைக்கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.

மற்றபடி உங்களுக்கு இழந்த வேலை திரும்பக் கிடைக்கும்போது எல்லா சிக்கல்களும் தீர்ந்துபோகும்.

உங்களுக்கு 26 வயதுதான் ஆகிறது என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிதி நிர்வாகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது என்பதற்கு இப்போதைய சிக்கல் உங்களுக்கு நல்ல பாடம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் புகழ வேண்டும் என்தற்காகவோ, பெருமை பேச வேண்டும் என்பதற்காகவோ ஆசைப்படாமல் நமக்காக நாம் வாழப் பழகிக் கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதை மறக்காதீர்கள்.”

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

ஐந்துவித அனுபவப் பாடங்கள்!

1. வேலை மற்றும் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை அடையாமல் நீண்டகால கடன்களை வாங்கக் கூடாது.

2. பெருமைக்காகக் கடன் வாங்கி மனஉளைச்சலுக்கு ஆளாகக் கூடாது.

3. பிறர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு அகலக்கால் வைத்துவிடக் கூடாது.

4. இளம் வயதில் சம்பளத்தை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது.

5. இளம் வயதில் பணத்தைப் பெருக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்!

பிட்ஸ்

இ-காமர்ஸ் நிறுவனம் உடான் (Udaan) சமீபத்தில் 280 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 3 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது!