Published:Updated:

கடன் வாங்கி பங்கு முதலீடு... நஷ்டமும் கஷ்டமும்! துன்பத்தில் தள்ளிய பேராசை...

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடல் படம்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -8

அனுபவமும் போதிய பயிற்சியும் இல்லாமல் ஒரு தொழில் அல்லது முதலீட்டில் இறங்கினால் மீளமுடியாத சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது) தன் மகனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“என் மூத்த மகன் சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல அறிவாளி. சிறு வயது முதலே நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியில் வளர்ந்தவன். நன்கு படித்து சுயமான திறமையால் முயற்சி செய்து தற்போது மத்திய அரசுப் பணியில் இருந்து வருகிறான்.

சுயதொழில் தொடங்க வேண்டும் என்று ரூ.5 லட்சம் என்னிடம் கேட்ட போது, வேலை பார்த்துக்கொண்டு தொழில் செய்வது சரிப்பட்டு வராது என்பதால் பணம் தர மறுத்து விட்டேன். நான் பணம் இல்லை என்று கூறியதால், என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான்.

ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு, டிரேடிங் என இறங்கினான். அரசாங்க வேலையைக் காட்டி பல வங்கிகளில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், அலுவலக நண்பர் களிடம் கடன் பெற்று பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டான். சந்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிறரை நம்பி இறங்கிய தால், நிறைய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சமாளிக்க முடியாமல் போனதால், கடந்த மூன்று மாதங் களாக தலைமறைவாக இருக்கிறான். ‌எங்கே போனான் என்று தெரியாமல் தவிக்கிறேன். அவனை நம்பி வீடு கட்ட நான் வாங்கிய வங்கிக் கடனை கடந்த மூன்று மாதங்களாகச் செலுத்த முடியாமல் பரிதவிக்கிறேன்.

நடுத்தெருவில் நிற்க வைத்த மகனை எப்படி மீட்டு எடுப்பது என அறியாமல் தவிக்கிறேன். தாய் தந்தைக்குத் தெரியாமல் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க வழி தெரியாமல் வயதான காலத்தில் எங்களைக் கண்ணீர் விட வைத்த மகனை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அனுபவம் இல்லாமல் ஆழம் தெரியாமல் காலை விட்டதால், இன்று நான் கஷ்டத்தில் தவிக்கிறேன்.

என் பெயரில் கோவையில் முக்கிய மான பகுதியில் அரை கிரவுண்ட் மனையில் இரண்டு அடுக்கு வீடு 2,000 சதுர அடியில் உள்ளது. இதற்கு ரூ.62 லட்சம் வீட்டுக் கடன் வங்கியில் நிலுவையில் உள்ளது. வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி. என் மூத்த மகன் அலுவலக நண்பர்களிடம் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் வரையும், வங்கியில் தனிநபர் கடன் ரூ.25 லட்சம் வரையும் வாங்கியுள்ளான்.

வரும் பிப்ரவரி மாதம் இளைய மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. அவனும் மூத்தவனுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளான். பர்சனல் லோன் ரூ.5 லட்சம், தன் சேமிப்பில் இருந்த ரூ.5 லட்சம் எனக் கொடுத்து உதவி செய்துவிட்டு, இன்று தன் திருமணச் செலவுகளுக்கு சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான்.

எனக்கு இதையெல்லாம் நினைத்து மன அழுத்தமாக உள்ளது. நான் தவறு ஏதும் செய்யவில்லை. மகன் செய்த நம்பிக்கை துரோகம் என்னைக் கொல்கிறது. அவன் மனைவி வீட்டார் ரூ.70 லட்சம் செட்டில்மென்ட் செய்யும் படி என்னை வற்புறுத்தி வருகின்றனர். கோவை வீட்டில் அவர்கள் என் அனுமதியின்றி தங்கியுள்ளார்கள்.”

மாடல் படம்
மாடல் படம்

இனி இவருக்கு நாம் வழங்கும் தீர்வுகள்...

“பொதுவாகவே, எல்லோருமே ஒரு விஷயத்தைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தெரியாத முதலீடுகளில் பிறரை நம்பி இறங்கக் கூடாது. குறிப்பிட்ட முதலீடுகளில் ஆர்வம் இருந்தால் அதுகுறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன் ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு உரிய பயிற்சியுடன்தான் இறங்க வேண்டும்.

உங்கள் மகன் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் பிறரின் தூண்டுதலால் மட்டுமே பங்குச் சந்தையில் இறங்கியுள்ளார். இன்றைக்கு மிக விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வந்துவிட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பங்குச் சந்தையைக் குறித்த நிஜமான விவரங்களைச் சொல்லாமல், கோடி கோடியாகச் சம்பாதிக் கலாம் என ஆசையைத் தூண்டு கிறார்கள் சில மோசடிப் பேர்வழிகள். அவர்களை நம்பி பங்குச் சந்தையில் இறங்கியதுதான் உங்கள் மகனின் நஷ்டத்துக்கு பிரதான காரணம்.

எல்லோருமே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம், கடன் வாங்கி பங்குச் சந்தையில் பணத்தைப் போடக் கூடாது என்பதைத்தான். உங்கள் மகன் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். பங்குச் சந்தை முதலீட்டின் அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ளாமல் அவர் முதலீடு செய்துள்ளதே அவருடைய தோல்விக்கு முக்கியமான காரணம்.

அவருக்கு தற்போதுள்ள கடனுக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் என்பதால், அவர் எப்போது திரும்ப வருவார் எனத் தெரியாமல் அவரைச் சார்ந்து ஆலோசனைகளை வழங்க இயலாது. உங்களுக்குள்ள பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்று மட்டும் பார்ப்போம்.

சட்டபூர்வமாக உங்கள் மகன் வாங்கிய கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கேரன்டர் கையொப்பம் இடாத பட்சத்தில் உங்கள் மகன் வாங்கிய கடனை உங்களிடம் கேட்க கடன் கொடுத்த தனிநபர் களுக்கோ, வங்கிகளுக்கோ அதிகாரம் கிடையாது. எனவே, உங்கள் மகன் வாங்கிய கடனைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பிரச்னைக்கான வழிகளை மட்டும் பாருங்கள்.

உங்கள் இளைய மகன் தன் அண்ணனுக்குக் கொடுத்த கடன் பற்றியும், பெரிதாகக் கவலைப் பட்டு மன அழுத்தம் கொள்ளா தீர்கள். உங்கள் இளைய மகனுக்கு சின்ன வயதுதான் என்பதால், இழப்பைத் தாங்கிக்கொண்டு சமாளித்துவிட முடியும். அவர் திருமணத்துக்காகக் குறைந்தபட்ச வட்டியில் கடன் பெற்று சிக்கனமாகத் திருமணத்தை நடத்திக்கொள்ள முடியும்.

உங்கள் மகன்கள் இருவருமே குழந்தைகள் அல்ல. விவரம் அறிந்தவர்கள்தாம். எனவே, அவர்களின் பிரச்னையை உங்கள் தலையில் ஏற்றிக் கொள் வதைத் தவிர்க்கவும்.

உங்கள் மூத்த மகனின் மனைவி வீட்டார் உங்கள் மகன் தலைமறைவாக இருக்கும் நேரத்தில் உங்களிடம் செட்டில் மென்ட் கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உங்கள் மகன் இல்லாத சூழலில் மருமகளுக்கு உங்களால் உதவ முடிந்தால் நல்லதுதான். இது குறித்து வழக்கறிஞர் ஒருவருடன் ஆலோசித்துச் செயல்படவும்.

உங்களுக்கு தற்போதுள்ள சிக்கல் வீட்டுக் கடன்தான். மாநகரத்தில் உள்ள உங்கள் வீடு ரூ.1 கோடிக்கு விற்கும் எனச் சொல்லியுள்ளீர்கள். இப்போதைய சூழலில் வீட்டை விற்றுவிட்டு, வங்கிக் கடன் ரூ.62 லட்சத்தை அடைத்துவிடுங்கள். மீதியுள்ள தொகையை உங்கள் இரண்டு மகன்கள், உங்களுக்கு என மூன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

பிரச்னையைக் கண்டு பயம் கொள்வதால் தீர்வு எதுவும் கிடைத்து விடாது. பொதுவாகவே, நமக்கான சிக்கலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டாலே பாதித் தீர்வு கிடைத்துவிடும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

ஐந்துவிதமான அனுபவப் பாடங்கள்!

1. அதிக வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது.

2. ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேலான விஷயங்களில் கவனம் செலுத்தி வெல்லும் திறன் நமக்கு உள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும்.

3. புரிந்துகொள்ளாமல் பங்குச் சந்தை முதலீட்டில் நேரடியாக இறங்கக் கூடாது.

4. செய்யப்போகும் முதலீடுகளைக் குறித்து குடும்பத் தினருடன் ஆலோசனை செய்வது ஆபத்தை உணர உதவும்.

5. தோல்வியை எதிர்கொண்டு ஜெயிக்கத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, ஓடி ஒளிவது தீர்வாகாது.

கடன் வாங்கி பங்கு முதலீடு... நஷ்டமும் கஷ்டமும்! துன்பத்தில் தள்ளிய பேராசை...

குறிப்பிட்ட முதலீடுகளில் ஆர்வம் இருந்தால் அதுகுறித்து முழுமையாக அறிந்து கொண்டு, அதன் ரிஸ்க்கைப் புரிந்து உரிய பயிற்சிபெற்றே இறங்க வேண்டும்.