Published:Updated:

கண்ணை மறைத்த காதல்... கடனில் தள்ளிய மனைவி! நிம்மதிக்கு என்ன வழி? நிபுணர் வழிகாட்டல்

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -15

கண்ணை மறைத்த காதல்... கடனில் தள்ளிய மனைவி! நிம்மதிக்கு என்ன வழி? நிபுணர் வழிகாட்டல்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -15

Published:Updated:
மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையை கணவன் மனைவி இருவரில் ஒருவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் கஷ்டம்தான். தன் மனைவியின் பகட்டு, ஆடம்பரத்தால் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் சென்னையைச் சேர்ந்த வருண்குமார் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) தன் நிலையை நம்மிடம் விளக்கினார்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

“எனக்கு வயது 28. கல்லூரியில் படிக்கும்போதே நான் அவந்திகாவை காதலித்தேன். அவந்திகா, பணக்கார வீட்டுப் பெண். அவளுடைய அப்பா பெரிய தொழில் அதிபர்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஆரம்பத்தில் அவந்திகா கண்டுகொள்ளவில்லை. நான் தொடர்ந்து முயற்சி செய்த பிறகு தான் அவள் என்னை விரும்ப ஆரம்பித்தாள்.

‘அவள் வசதியானவள். அவளுடைய லைஃப் ஸ்டைலுக்கு உன்னால் சமாளிக்க முடியாது’ என நண்பர்கள் சொன்ன அறிவுரைகள் எதையும் நான் கேட்கும் மனநிலையில் இல்லை. கல்லூரி இறுதியாண்டு முடிக்கும்போது நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை அவளுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். என் பெற்றோரை சமாதானம் செய்து ஏற்றுக்கொள்ள வைத்தேன். எனக்கு ஒரு தம்பி, தங்கை உண்டு. வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம்.

அவந்திகா பங்களாவில் வாழ்ந்து பழகியதால், சிறிய வீட்டில் அவளால் இருக்கப் பிடிக்கவில்லை. திருமணம் ஆகி நான்கே மாதங்களில் உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு வீட்டில் எல்லோரிடமும் சண்டை போட்டு விட்டு, தனிக் குடித்தனம் போக வேண்டும் எனச் சொல்ல, அவளை மகிழ்ச்சிப்படுத்த பெரிய வீட்டைப் பார்த்து குடிபோனேன். எனக்கு ரூ.40,000 சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், வாடகை மட்டுமே ரூ.20,000 கொடுப்பதால் பிற செலவு களைச் சமாளிக்க முடியவில்லை.

மாடல் படம்
மாடல் படம்

நினைத்த போதெல்லாம் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள் அவந்திகா. அவளுக்கு சமையல் செய்வதில் நாட்டம் இல்லை என்பதால், பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துதான் சாப்பிட்டோம்.

குடும்பச் செலவு மாதம்தோறும் ரூ.1 லட்சம் ஆனது. கிரெடிட் கார்டு, நண்பர் களிடம் கைமாத்து எனச் சமாளித்தேன். கூடுதல் சம்பளத்தில் வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்தும் அமைய வில்லை. என் மனைவி வேலைக்குச் சென்றால் நிலைமையைச் சமாளிக்கலாம். ஆனால், ‘எங்கள் கம்பெனியிலேயே 100 பேர் வேலை செய்கிறார்கள். நான் வேலைக்குப்போவது அவமானம்’ எனச் சொல்லிவிட்டாள்.

கடந்த நான்கு மாதங்களாக பிக்னிக், ஷாப்பிங் என அழைத்துச் செல்வதில்லை எனச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாள். கடந்த மாதம் சண்டை முற்றிப்போய் அவள் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். விவாகரத்து கோரப் போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

குடும்ப வாழ்க்கை இப்படியிருக்க, அவளால் எனக்கு கடந்த இரண்டு வருடங்களில் ரூ.13 லட்சம் கடன் ஆகிவிட்டது. கிரெடிட் கார்டுகளில் ரூ.4 லட்சம், பர்சனல் லோன் ரூ.3 லட்சம், நண்பர்களிடம் வாங்கியது ரூ.6 லட்சம் எனக் கடன் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளேன். இப்போதைய என் ஒரே நோக்கம், கடனிலிருந்து மீண்டுவருவது மட்டுமே.

அப்பா, தம்பியிடம் உதவி கேட்டால் ரூ.5 லட்சம் வரை உதவி கிடைக்கும் என்பதைத் தவிர, எனக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. அதுவும் அவர்களிடம் கேட்க தயக்கமாக உள்ளது. நான் என்ன செய்தால் மீண்டுவர முடியும்?”

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“உங்கள் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. முதலில் உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சம்பாத்தியம், செலவுகள், சேமிப்பு உள்ளிட்ட நிதி சார்ந்த விஷயங்களில் கணவன் மனைவி இருவரும் ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி இருக்கவும் வாய்ப்பு மிக மிகக் குறைவுதான்.

ஆனால், குடும்ப வருமானம், செலவுகளைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப செயல்பாடுகளை நாம் அமைத்துக்கொள்வதுதான் குடும்பம் என்கிற வண்டி தொடர்ந்து இயங்க ஒரே வழி. இதற்கு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றுதான் ஆக வேண்டும்.

உங்கள் மனைவியிடம் இந்த அனுசரனையும், குடும்பப் பொருளாதாரம் குறித்த சிந்தனையும் துளியும் இல்லாத காரணத்தால்தான் இந்தச் சிக்கலே உருவாகியுள்ளது. நீங்கள் ஈட்டும் வருமானத்துக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, திருமணத்துக்கு முன்பே உங்கள் மனைவிக்குப் புரிய வைக்க முயற்சி எடுத்தீர்களா எனத் தெரியவில்லை. காதல் மயக்கத்தில் நீங்கள் அதைச் செய்யத் தவறியிருக்கலாம். திருமணத் துக்குப் பிறகு, இதுபற்றி உங்கள் மனைவியிடம் பேசி பிரயோஜன மில்லை. காரணம், பணம் குறித்த மதிப்பீடு உங்கள் மனைவிக்கு வேறு மாதிரியாக இருக்கிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போது, ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உண்மையான அன்பும் அக்கறையும் மட்டுமே, நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் இணைந்து சரியான பாதையில் பயணிக்க உதவும். இதை நீங்கள் புரிந்துகொண்டு அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்வது அவசியம்.

விவாகரத்து என்கிற அளவுக்கு உங்கள் மனைவி போன பிறகு, சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்து உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொள்ள நீங்களும் ஆயத்தமாகி இருப்பீர்கள். வாழ்க்கையைப் புதுப்பிக்கும்முன் கடன் வலையில் இருந்து மீண்டு விட்டால் நல்லது என்ற உங்கள் தவிப்பை உணர முடிகிறது.

வாழ்க்கையில் சில நேரங்களில் ஈகோ பார்க்காமல் முடிவு எடுப்பதுதான் நல்லது. முதலில் ரூ.20,000 கொடுக்கும் வாடகை வீட்டைக் காலிசெய்துவிட்டு உங்கள் பெற்றோருடன் வசிக்க ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் உங்கள் சூழலைத் தெளிவு படுத்துங்கள். அவர்களிடம் இணக்கமாகப் பேசி, நீங்கள் குறிப்பிட்டபடி ரூ.5 லட்சம் உதவியைப் பெறுங்கள். இதில் ரூ.4 லட்சத்தை கிரெடிட் கார்டு கடனை அடைக்கப் பயன் படுத்துங்கள். ரூ.1 லட்சத்தை நண்பர்களிடம் வாங்கிய கடனில் அவசரப்படுபவருக்குத் தந்து விடுங்கள். பர்சனல் லோனை இ.எம்.ஐ மூலமே செலுத்தி வாருங்கள்.

உங்கள் சம்பளம் 40,000 ரூபாயில் ரூ.10,000 பர்சனல் லோன், ரூ.10,000 குடும்பச் செலவுக்கு என ஒதுக்குங்கள். மீதம் ரூ.20,000 இருக்கும். ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் என்ற கணக்கில் இரண்டு ஆண்டுகளில் உங்கள் நண்பர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் ரூ.5 லட்சத்தைச் செலுத்திவிடலாம்.

உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தாலோ, அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலோ திட்டமிட்டதற்கு முன்கூட்டியே கடனில் இருந்து விடுபட லாம். உங்கள் பெற்றோர் மற்றும் தம்பியிடம் வாங்கிய தொகையை வெளிக் கடன்களை அடைத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்துங்கள். மூன்று ஆண்டுகளில் முழுமையாகக் கடன் சிக்கலில் இருந்து மீண்டுவிடலாம்.

கடனைச் செலுத்திய பிறகு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு வாழ்க்கையைப் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் அமைத்துக்கொண்டு வாழுங்கள்!’’

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அணுகுவது தவறில்லை. ஆனால், நிதி சார்ந்த விஷயங்களில் பிராக்ட்டிக்கலாக இருப்பது முக்கியம்.

2. நம்முடன் வாழ்பவருக்கு குடும்பப் பொருளாதார நிலையை முடிந்தவரை புரிய வைக்க வேண்டும்.

3. வரவுக்கு மீறி செலவுகள் செய்யும் சூழலைக் குறுகிய காலத்துக்குள் உணர்ந்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

4. சிக்கல் உருவாகிவிட்ட பிறகு, ஈகோ பார்த்து தயங்கி நிற்பதில் பயனில்லை.

5. வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது பொருளாதாரம் சார்ந்தும் சிந்திக்க வேண்டும்.