Published:Updated:

கடனில் வாங்கிக் குவித்த பொருள்கள்... இறுக்கும் இ.எம்.ஐ சுமை..! மீண்டுவரும் வழிமுறைகள்

இ.எம்.ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
இ.எம்.ஐ

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு - 11 - SOLUTION

பலருக்கு இ.எம்.ஐ-யில் பொருள்கள் வாங்குவது என்றாலே ஏதோ சும்மா கிடைக்கிறது என்ற எண்ணம்தான். இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு, கஷ்டப்படுவார்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த விக்டர் தன் இ.எம்.ஐ சுமையை நம்மிடம் பகிர்ந்தார்...

கடன்
கடன்

“எனக்கு வயது 31. எஸ்.எம்.இ நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறேன்.

கடந்த ஆண்டு திருமணம் ஆனது. என் கம்பெனியில் அக்கவுன்ட் செக்‌ஷனில் பணிபுரிந்த பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். நான் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குகிறேன். என் மனைவிக்குச் சம்பளம் ரூ.18,000.

காதல் திருமணம் என்பதால், இரண்டு வீட்டாரும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருகிறோம். திருமணமான சில நாள்களில் எங்கள் கம்பெனி மேனேஜர் எங்களை ஒரு விருந்துக்கு அழைத்தார். அப்போது அவருடைய வீட்டில் இருந்த பொருள்களைப் பார்த்துப் பிரமித்துப் போனோம். டிவியே ரூ.1 லடத்துக்கு மேல் இருக்கும். அரண்மனைபோல வீட்டை வைத்திருந்தார்.

‘விக்டர், உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. வீட்டுக்குத் தேவையான பொருள்களைத் தவணை முறையில வாங்கிப் போடுங்க. நம்ம சம்பளத் துக்கு நாம எப்ப சம்பாதிச்சு இதை எல்லாம் வாங்கி... அனுபவிக்கப் போறோம்’ என அட்வைஸ் பண்ணியதுடன் பிரமாண்ட கடையொன்றின் மேனேஜருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என சகலத்தையும் வாங்கினோம். இதனால் என் சம்பளம் மொத்தமும் இ.எம்.ஐ கட்டவே சரியாய் போனது. என் மனைவியின் சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுத்து மாதச் செலவு களைச் சமாளிக்க முடியாத நிலை உருவானது. இக்கட்டான ஒரு சமயத்தில் என் நிலையைச் சொல்லி மேனேஜரிடம் கடன் கேட்டபோது, ‘என்ன விக்டர் இப்படி விவரமில்லாம பண்ணிட்ட... ஒவ்வொரு பொருளா வாங்கிருந்தா, இப்படிச் சிக்கல் வந்திருக்குமா?’ என்று கடிந்துகொண்டார்.

பிரமாண்டமாக எல்லா பொருள் களையும் வாங்கி வைத்துவிட்டு, அவற்றை அனுபவிக்க ஏற்ற மனநிலை இல்லாமல் நிம்மதி இழந்து தவிக்கிறோம்.

என்னுடன் பணிபுரியும் ஒருவர், நான் கஷ்டப்படுவதைக் கேட்டு, 30% விலையைக் குறைத்துக் கொடுத்தால் இரண்டு, மூன்று பொருள்களை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறார். என் அப்பா விடம் உதவி கேட்கச் சொல்லி வற்புறுத்து கிறார் என் மனைவி.

‘ஒரே நேரத்தில் ரூ.4 லட்சத்துக்கு இ.எம்.ஐ-யில் எப்படி பொருள் களை வாங்கினாய்..? வருமானத் துக்கு தகுந்தபடி வாழத் தெரியலையே உனக்கு...’ என நண்பர்கள் திட்டுகிறார்கள். என்ன செய்தால் சுலபமாக இந்தச் சிக்கலில் இருந்து மீள முடியும்?’’ என்று சொல்லுங்கள்.

என் பி.எஃப் கணக்கில் உள்ள ரூ.2.5 லட்சத்தைத் தவிர, வேறு தொகை எதுவும் இல்லை. என் மனைவியிடமும் அணிந்துள்ள மூன்று பவுன் தவிர, தங்க நகை எதுவும் இல்லை. பி.எஃப் பணம் மொத்தத்தையும் எடுத்து கடனைக் கட்டிவிடலாமா என்று கூட நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புள்ளதா..?” என்று கேட்டிருந்தார் விக்டர்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“தவணைத் திட்டங்களில் அத்தியாவசியமான பொருள் களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடனைத் திரும்பக் கட்டும் திறனை அறியாமல், வரவு செலவு விவரங்களை மனக்கணக்குக்கூட போட்டுப் பார்க்காமல் பொருள்களை ஒரே நேரத்தில் வாங்கிக் குவித்தது சரியா என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழலில் பொருளாதார விஷயங்களில் மிகக் கவனமாகச் செயல் பட்டிருக்க வேண்டும்.

உங்கள் மேனேஜர் வீட்டில் உள்ள பொருள்களைப் பார்த்து, அதேபோன்று விலை உயர்ந்த பொருள்களை வாங்க நினைத்தது மிக மிகத் தவறு. அவருடைய சம்பளம், சேமிப்பு, பொருளாதாரப் பின்புலங்கள் வேறு, உங்கள் நிலை வேறு என்பதை நீங்கள் கவனத்தில்கொண்டு செயல் பட்டிருக்க வேண்டும்.

புதுமணத் தம்பதிகள் சிரமம் இல்லாமல் வாழட்டும் என அவர் இ.எம்.ஐ-யில் பொருள்கள் வாங்க உதவியதில் தவறே இல்லை. ஆனால், நீங்கள் பட்ஜெட் போட்டு மீதமாகும் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்ப பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். ரூ.15,000 முதலே நல்ல டிவி கிடைக்கும் போது பெரிய திரை கொண்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவியை வாங்கியதைப் பார்க்கும்போது தேவையை மீறிய பேராசைதான் காரணம் என்று அழுத்தமாகச் சொல்ல முடியும்.

கடனில் வாங்கிக் குவித்த பொருள்கள்... இறுக்கும் இ.எம்.ஐ சுமை..! மீண்டுவரும் வழிமுறைகள்

எந்தவொரு பொருளை வாங்கும் முன்னும் உடனே முடிவு எடுக்காமல் ஒன்றிரண்டு வாரம் ஆறவிட்டு முடிவு செய்யும் போது, வாங்கும் பொருள் அவசியம் தேவையா என்பதை அறியும் வாய்ப்பு உருவாகும்.

சரி, நடந்துபோன தவறுகளால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து மீண்டுவரும் வழிகளைப் பார்ப்போம். நீங்களும், உங்கள் மனைவியும் மொத்தம் ரூ.43,000 மாதம் சம்பளம் வாங்கும் நிலையில், உங்களுக்கு உள்ள ரூ.4 லட்சம் கடன் சாதாரண மானதுதான். இதற்காகக் பெரிதாகக் கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

உங்கள் கவலையை ஓரங்கட்டி விட்டு மாதாந்தர செலவுகளைச் சமாளிக்கப் பண இருப்பைச் சற்று அதிகமாக்கிகொள்ள என்ன வழி என்று பாருங்கள். இ.எம்.ஐ தொகை பாதியாகக் குறைந்தால், உங்கள் சிக்கல் தீர்ந்துவிடும். அதற்கான சில வழிகளைச் சொல்கிறேன்.

உங்கள் பி.எஃப்-லிருந்து ரூ.2 லட்சம் அளவுக்கு லோன் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அடுத்து, நீண்டகாலத்துக்கு செலுத்தும் வகையில் உங்கள் கம்பெனியில் பணியாளர் கடன் கிடைக்க வாய்ப்பிருப் பின் அதற்கான முயற்சிகளை எடுங்கள்.

இந்த இரண்டையும் தவிர, சிக்கல் இல்லாத வழியில் ரூ.2 லட்சம் நீண்ட காலக் கடனாகச் செலுத்தும் வகையில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளதா என யோசியுங்கள். இவை அனைத்தும் கைகொடுக்காத நிலையில் ரூ.2 லட்சம் வரையிலான பொருள்களை 30% குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து உங்கள் அலுவலக நண்பருக்கு கொடுத்துவிட்டு கையோடு பணம் வாங்கி, கடனைத் தீர்த்துவிடுங்கள்.

மீதமுள்ள ரூ.2 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ முடிந்ததும் தேவையைப் பொறுத்து ஒவ்வொன்றாக வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஆர்.டி அல்லது லிக்விட் ஃபண்டுகளில் பணத்தைச் சேர்த்துக்கொண்டு பொருள்களை வாங்கினால் பண விரயத்தைத் தடுக்கலாம்.

குறைவான மாத வருமானம் உள்ளவர்கள் தவிர்க்க இயலாத சூழலில் கடன் வாங்கும்போது, நீண்டகாலம் செலுத்தும் வகையில் வாங்கினால் மாதாந்தரச் செலவுகளுக்கு திண்டாடும் நிலை இருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள். நிதித் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் வாழ்க்கைச் சூழலை முழுமையாக அறிந்த உங்கள் மீது அக்கறை கொண்டவர்களிடம் ஆலோசனை செய்தால் தவறுகளைத் தவிர்க்க முடியும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் கற்க வேண்டிய 5 பாடங்கள்!

1. கடனைத் திரும்பக் கட்டும் கணக்கீட்டைக் கடன் வாங்கும் முன்பே போட்டுப் பார்க்க வேண்டும்.

2. நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப நம் தேவைகளை முடிவு செய்ய வேண்டும்.

3. வசதிமிக்கவர்களைப் பார்த்து வாழ்க்கைத் தரத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடும்.

4. பணத்தைச் சேர்த்துக்கொண்டு பொருள்களை வாங்குவது நல்லது.

5. எது தேவை, எந்த அளவுக்குத் தேவை என்பதில் தீர்க்கமான முடிவெடுக்கும் திறன் முக்கியம்.