Published:Updated:

ஆன்லைன் மோசடியில் தமிழகம் நம்பர் 1... மக்கள் இழந்த பணத்தின் மதிப்பு  ரூ.56 கோடி! 

செ.கார்த்திகேயன்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.எம் மோசடி, நெட் பேங்கிங் எனக் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 56 கோடி ரூபாய் பறிகொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

ஒரு வாரத்துக்கு முன்பு, 76,000 ரூபாய் பிரியாணியும் அதை வாங்கிய சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியாவும் வைரல் ஆனார்கள். ஏனெனில், பிரியாணியை வைத்து, ஆன்லைன் மோசடி கும்பல் பிரியாவிடமிருந்து 76,000 ரூபாயை ஏமாற்றியது. இப்படி வெவ்வேறு வழிகளில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாடு, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் அதிகமான ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சகம்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.எம் மோசடி, நெட் பேங்கிங் எனக் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 56 கோடி ரூபாய் பறிகொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. அண்மையில் வெளியான மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் அதிகமான ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும், அதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

2016-17 நிதி ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தின் மதிப்பு 4 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. இது 2017-18-ம் நிதி ஆண்டில் 41 கோடி ரூபாயாக அதிகரித்து, 2018-19-ம் நிதி ஆண்டில் 11 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த மூன்று நிதி ஆண்டுகளில் மொத்தம் 56 கோடி ரூபாயை ஆன்லைன் மோசடி மூலம் தமிழக மக்கள் இழந்திருக்கிறார்கள். இதே போல, ஹரியானா மக்கள் 31 கோடி ரூபாயையும் மகாராஷ்ட்ரா மக்கள் 46 கோடி ரூபாயையும், டெல்லி மற்றும் கர்நாடகா மக்கள் தலா 18 கோடி ரூபாயையும் இழந்திருக்கிறார்கள்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

மோசடிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது 1,745 மோசடிகளுடன் மகாராஷ்ட்ரா முதல் இடத்திலும்,  948 மோசடிகளுடன் ஹரியானா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 644 மோசடிகளுடன் மூன்றாவது இடத்திலும், டெல்லி 594 மோசடிகளுடன் நான்காவது இடத்திலும் மற்றும் 470 மோசடிகளுடன் கர்நாடகா ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

குறிப்பாக 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆன்லைன் மோசடிகளில் அதிகம் பணத்தை இழப்பது, அவர்களுக்கு ஆன்லைன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இணையப் பயன்பாடு, அதிகரித்திருப்பதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.