Published:Updated:

செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கும் மூளை மந்திரம்! கிரெடிட் கார்டு, டோக்கன்கள் உஷார்..!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு

C R E D I T C A R D

வசதி இருப்போர், வசதி இல்லாதோர் என்று இந்த உலகம் இரண்டாகப் பிரிந்துள்ளது. உலகின் போக்கை விடுங்கள்; இந்தியாவில் கூட 77.4% செல்வம், ஜனத்தொகையில் 10% இந்தியரிடம் குவிந்துள்ளது (Global Wealth Report of Credit Suisse Research Institute). மேலும், இந்த வித்தியாசம் நாளுக்கு நாள் வளர்ந்து பணக்காரர்கள் மென்மேலும் உயர்வதும், ஏழைகள் இன்னும், இன்னும் நலிவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

மாதம் 20 தேதியானால், கையிருப்பு காலியாகி, அடுத்துவரும் மாத வருமானத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போர் இந்தியாவின் ஜனத்தொகையில் 70 சதவிகிதத்துக்கும் அதிகம் என்று இன்னொரு சர்வே தெரிவிக்கிறது.

எதிர்பாராத விதமாக ரூ.5,000 செலவை எதிர்கொள்ள நேர்ந்தால், பலருக்கும் அந்த மாத பட்ஜெட் ஆட்டம் காண்கிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள் விதிக்கும் வட்டி விகிதம் மிக அதிகம் என்று தெரிந்தாலும், வேறு வழியின்றி கிரெடிட் கார்டை உபயோகித்து செலவுகளைச் சமாளிக்க நேர்கிறது. கிரெடிட் கார்டை உபயோகிக்கையில் செலவு எகிறுவது சகஜம். மாதம் முடிந்து கிரெடிட் கார்டு பில் கையில் வரும் போதுதான் தவறு உறைக்கிறது.

டாக்டர் மொய்ரா சோமர்ஸ் என்னும் நியூரோசைக்காலஜிஸ்ட் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறார். நம் மூளை கிரெடிட் கார்டு போன்ற சாதனங்களைப் பணம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையாம். பணத்தைச் செலவழித்து ஒரு பொருளை வாங்குகையில், பொருள் வாங்கிய சந்தோஷத்துடன் பணம் கையை விட்டுச் சென்ற வலியையும் சேர்த்து மூளை அனுபவிக்கிறது. ஆனால், கிரெடிட் கார்டை உபயோகித்து பொருள்களை வாங்கும்போது சந்தோஷம் மட்டுமே உணரப் படுவதால், மேலும் மேலும் வாங்கிக் குவிக்கத் தோன்றுகிறது என்பதே அவர் சொன்ன விஷயம்.

இந்த உளவியல் உண்மையை அறிந்த கேஸினோக்களும் பணத்துக்கு பதில் டோக்கன்கள், பிளாஸ்டிக் கார்டுகள் போன்றவற்றைப் பயன் படுத்துவதன் மூலம் “நாம் பணத்தைச் செலவழிக்கவில்லை; வெறும் டோக்கன்தானே” என்பது போன்ற மழுப்பல்களை மக்களின் மூளையில் ஏற்றி பணம் பறிக்கின்றன.

உடல் களைப்படையும்போது, மூளை அவசரமாகச் செயல்பட்டு, தேவையோ இல்லையோ, கண்ணில் பட்டதை வாங்கிக்கொண்டு வெளியேற நினைக்கிறதாம். நம் மால்களும் சூப்பர் மார்க்கெட்டுகளும் பெரிய பெரிய சைஸ்களில் அமைக்கப் பட்டிருப்பது இந்தக் காரணத் துக்காகவே.

இப்படி நம் மூளையை மழுங்கடித்து செலவுகளை அதிகப்படுத்தும் தந்திரங்கள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதே மூளையின் செயல்பாடுகளை சாதகமாகப் பயன் படுத்தி சேமிப்பை அதிகப்படுத்த இயலுமா என்று மனநல நிபுணர்கள் ஆராய்வதும் தொடர்கிறது. பின் அவரும் முறைகளைப் பயன் படுத்தினால், அனாவசிய செலவைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்க நம் மூளையைப் பயிற்றுவிக்க முடியும் என்று அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

1. செலவு ஏற்படுத்தும் வலியை உணருங்கள்

இன்றைய வாழ்வில் கிரெடிட்/ டெபிட் கார்டுகளைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க இயலாது. ஆனால், துணிமணிகள், ஹோட்டல் உணவுகள், சினிமா, நாடகம் போன்ற கேளிக்கைகளுக்காகச் செலவிடும் தொகையை மட்டுமாவது பணமாகச் செலவு செய்ய வேண்டும். அப்போது அநாவசிய செலவுகள் மட்டுப்படும். மனதைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் கிரெடிட் கார்டுகளை பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு, தேவையான பணத்துடன் ஷாப்பிங் கிளம்பலாம்.

2. பணம் இருப்பதை மூளை உணர அனுமதிக்காதீர்கள்

வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பற்றிய எண்ணம் செலவுகளை அழைத்து வரும். ஆகவே, வங்கியில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக் ஷன் தருவது, எஸ்.ஐ.பி போன்ற முதலீடுகளை ஆட்டோ இன்வெஸ்ட் முறையில் மேற்கொள்வது போன்ற ஏற்பாடுகளைச் செய்வதன்மூலம் அதிகப்படியான பணம் அக்கவுன்ட்டில் இருப்பதைத் தவிர்க்கலாம்.

3. வாங்க நினைப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப் போடுங்கள்

டிவியிலோ, விசேஷ வீடுகளிலோ நாம் பார்த்து அதிசயித்த சில பொருள்கள் கண்ணில் தட்டுப்படும்போது அவற்றை வாங்க மனம் துடிப்பது இயற்கை. அப்போதெல்லாம் “இது எனக்கு மிக அத்தியாவசியத் தேவையா? வாங்காமல் போனால் திரும்பக் கிடைக்காத அபூர்வப் பொருளா?” என்பது போன்ற சிந்தனை களை எழுப்பி, வாங்கும் எண்ணத்தை 10 நிமிடம் ஒத்திப்போடுங்கள். மூளை அந்த விருப்பத்தைக் கைவிட்டு விடும்.

4. எங்கெங்கெல்லாம் அதிகப் பணம் உதவும் என்பதைச் சிந்தியுங்கள்

நாம் அனைவரும் விரும்புவது என்ன? பாதுகாப்பான வசிப்பிடம், சரியான மருத்துவ உதவிகள், விரும்பிய மேற்படிப்பு, மனதுக்குப் பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்த முதலீடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம்... இவைதானே? ஆனால், பணப் பற்றாக்குறையால் நம் வாழ்வு சுருங்கிப்போகிறது. சிலருக்கு மட்டும் கிடைக்கும் இந்தப் பணம் சார்ந்த வசதிகள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் வேண்டும் என்றால், சேமிப்பு மிக முக்கியம் என்பதை அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும்.

5. நிறைய படியுங்கள்; பேசுங்கள்

பணம் பற்றிப் பேசுவதே தவறு என்ற பழமையான எண்ணத்தைக் கைவிட வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், இன்டர்நெட்டில் உலாவரும் அரசியல் மற்றும் சினிமா கிசுகிசுக்கள் பற்றியும் காரசாரமாக விவாதிக்கும் நாம், நல்வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதாரம் பற்றிப் பேசத் தயங்குகிறோமே, ஏன்? இன்று இன்டர்நெட்டில் தனிநபர் பொருளாதாரம் குறித்த கட்டுரை களும், யூடியூப் நிகழ்ச்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்ப்பதும், நண்பர்கள் மற்றும் குடும்பத் தாருடன் அவைபற்றி விவாதிப் பதும் பொருளாதார ரீதியில்நம் மூளையை வலுப்படுத்த உதவும்.

நம் மூளையை பிறர் ஆக்கிர மித்து நமக்கே வேட்டு வைப்பதை, அந்த மூளையின் உதவி கொண்டுதானே வெல்ல முடியும்? நம் மூளையும் ஒரு தீப்பொறி போலத்தான். அதைக் கொண்டு விளக்கையும் ஏற்றலாம்; வீட்டையும் எரிக்கலாம். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

பிட்ஸ்

சீன அரசின் கோபத்துக்கு உள்ளான சீனத் தொழிலதிபர் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாகத் தலைமறைவாக இருந்தார். அவர் இப்போது வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்.