இன்றைய நவீன உலகில், கடன் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது கடினம். அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டிருக்கிறது கடன்.
கடனில்லாமல் வாழ்வதென்பது சாமானியர்களுக்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே ஆகிவிட்டது. தனிமனித வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், தொழில் வளர்ச்சிக்கும் கடன் அவசியம். அவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்கும் பழக்கம், மெள்ள மெள்ள ஆடம்பரத் தேவைகளுக்காக வாங்குவதாக மாறும்போது அதுவே பல பிரச்னைகளுக்கு அஸ்திவாரமாகிவிடுகிறது.
“கடன் வாங்குவதற்கு முன்னர் எது நல்ல கடன், எது கெட்ட கடன் என்று பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்” என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். எப்படிப் பிரித்துப் பார்ப்பது... அவரே விளக்குகிறார்.
இவையெல்லாம் நல்ல கடன்!
எந்த நோக்கத்துக்காகக் கடன் வாங்குகிறோம் என்பது முக்கியம். வாங்கும் கடன் உங்கள் வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் அது நல்ல கடன். அதேபோல, கடனுக்கு நீங்கள் வாங்கும் ஒரு பொருள் மதிப்பில் உயரும் தன்மையுடையதாக இருந்தால் அது நல்ல கடன். உங்கள் வாழ்க்கைக்கோ, தொழிலுக்கோ ஒரு பொருள் அவசியமாகத் தேவைப்படுகிறது; ஆனால், அதை வாங்க உங்களிடம் மொத்தமாகப் பணமில்லை; அதே நேரத்தில் அதற்கான தவணைத் தொகையை உங்கள் சம்பாத்தியத்திலிருந்து சுலபமாக உங்களால் செலுத்த முடியுமென்றால், அதற்காக வாங்குவதும் நல்ல கடனே.
உதாரணமாக, விற்பனைத்துறையிலிருக்கும் ஒருவருக்கு இருசக்கர வாகனம் அவசியம். வாகனம் இருந்தால்தான் அவர் அந்த வேலையில் நீடித்திருக்க முடியும், வருவாயைப் பெருக்க முடியும் என்ற நிலையில் வாங்கும் வாகனக் கடன் நல்ல கடன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடனில்லாமல் வீடு வாங்குவது இன்று 99% பேருக்குச் சாத்தியமில்லை. வீட்டு வாடகை மிச்சமாகும். அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய பிரச்னையில்லை. வாங்கிய வீட்டின் மதிப்பு உயரும் வாய்ப்பிருக்கிறது. திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும் அசலுக்கும் வருமான வரி விலக்கு உண்டு. எனவே, வீட்டுக்காக வாங்குவதௌ நல்ல கடன். உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ கல்விக்காக வாங்கும் கடனும் நல்ல கடன். பணமில்லை என்று படிப்பை நிறுத்தாமல், கடன் வாங்கியாவது படிப்பைத் தொடர்வது நல்ல எதிர்காலத்தை உறுதிசெய்யும். அடிப்படைக் கல்வி, உயர் கல்வி போன்றவற்றுக்காகக் கடன் வாங்குவதில் தவறில்லை.

நடுத்தர குடும்பத்தில் திடீரென சமையல் அடுப்போ, கிரைண்டரோ, ஃப்ரிட்ஜோ பழுதாகி புதிதாக வாங்க வேண்டிய நிலையில், மொத்தப் பணத்தையும் கொடுத்து வாங்க முடியவில்லையென்றால், தவணை முறையில் வாங்கித்தான் ஆக வேண்டும். வீட்டு உபயோகப் பொருள்கள் இல்லையென்றால், அசெளகர்யமாக இருக்கும். அந்த நேரத்தில் அது நல்ல கடனா இல்லையா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே!
கெட்ட கடன்கள்!
மேலே குறிப்பிட்டவற்றைத் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்துக் கடன்களுமே கெட்ட கடன்கள்தான். ஏற்கெனவே வருமானம் முழுவதற்கும் செலவையும், பல கடன்களையும் வைத்திருக்கும் ஒரு நடுத்தர குடும்பம் காருக்காகக் கடன் வாங்குவது ஆடம்பரம். அது அநாவசியம். சுற்றுலாவுக்கோ, வேறு தேவையற்ற செலவுக்கோ தனிநபர் கடன் வாங்குவது கெட்ட கடன். வங்கிகள் இந்தக் கடனுக்கு பொதுவாக 14 முதல் 18 சதவிகிதம் வரை வட்டி வாங்குகின்றன. டாக்குமென்டேஷன், பிராசஸிங் என்று தனியாக 2 முதல் 4% வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். வட்டி மற்றும் இதர கட்டணங்களைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், மாதா மாதம் ஒரு தொகையைச் சேமித்து வைத்து, அதைக்கொண்டு இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது லாபகரமானதாக இருக்கும்.
அதேபோல ‘0% வட்டி’ என்று வரும் விளம்பரங்களை நம்பி தேவையற்ற, அத்தியாவசியமற்ற வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதும் கெட்ட கடனே. வீட்டிலிருக்கும் ஃப்ரிட்ஜோ, வாஷிங் மெஷினோ நன்றாக வேலை செய்யும்போது, `புது மாடல் வருகிறது’ என்றோ, `வட்டி இல்லாமல் கிடைக்கிறது’ என்றோ கடன் வாங்குவது தேவையற்ற செலவு. வீட்டிலிருக்கும் பழைய பொருள்களின் ஆயுள்காலம், அவற்றை உபயோகப்படுத்துபவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இன்னும் சில ஆண்டுகளில் ஒரு பொருளைப் பயன்படுத்த முடியாது என்று தெரியும்போது, அந்த இடைப்பட்ட காலத்தில் மாதம் 500 ரூபாயைத் தொடர் சேமிப்பு செய்து வந்தால், அந்தப் பொருளை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரத்தில் முழுப் பணம் கொடுத்தே வாங்கிவிடலாம்.
‘0%’ ஏமாற்று வேலை!
‘0% வட்டி’ என்பது பெரும்பாலான நேரங்களில் ஏமாற்று வேலையே. கன்ஸ்யூமர் கடனுக்கான வட்டி 18 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும். அது உங்களுக்குத் தெரியாத வகையில் பெறப்படும். ஒரு நிறுவனம் ஒரு பொருளை `15,000 ரூபாய். மாதம் 500 வீதம் 30 மாதங்களுக்குச் செலுத்தலாம்’ என்று சொல்லியிருக்கும் ஆனால், அதே பொருளை வேறு டீலரிடமோ, ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களிலோ 10,000 ரூபாய்க்கே ரொக்கத்துக்கு வாங்க முடியும். சொல்வது 0% செலுத்துவது எக்ஸ்ட்ரா 18%.
கிரெடிட் கார்டைக் கையாளத் தெரியாமல் இஷ்டத்துக்குக் கடன் வாங்கியவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு 10 வருடங்களுக்கு மேலாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மிக மிகக் கெட்ட கடன்!
இருக்கும் கடன்களிலேயே கிரெடிட் கார்டு கடன்தான் மிக மிகக் கெட்ட கடன். ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை, அவரிடமிருக்கும் கெட்டப் பழக்கங்கள் கெடுப்பது போல கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் ஃபைனான்ஷியல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கெடும் என்பது உறுதி. கிரெடிட் கார்டைக் கையாளத் தெரியாமல் இஷ்டத்துக்குக் கடன் வாங்கியவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு 10 வருடங்களுக்கு மேலாகும். 24%, 36% என்று இதன் வட்டி விகிதம் மிக அதிகம்.

ஆனால், இந்த ‘பிளாஸ்டிக் மணி’ யுகத்தில் கிரெடிட் கார்டை ஒரேயடியாக ஒதுக்கிவிடவும் முடியாது. நம் மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டும் கிரெடிட் கார்டில் வாங்கும் பழக்கத்தைக் கறாராகக் கடைப்பிடித்தால், அந்தந்த மாத பில்லை முழுவதுமாகச் செலுத்திவிடலாம்; சேரும் பாயின்ட்டுகளுக்கு இலவசப் பொருள் அல்லது கேஷ் பேக் பெறலாம்.
தவணையில் செல்போன் வேண்டாம்!
கடன் வாங்குவதில் பரவிவரும் மற்றொரு மோசமான பழக்கம் ஆண்டுக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவது; அதுவும் மாதத் தவணையில். இளைஞர்களிடம் இந்தப் பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஒருவரால் ஒரு செல்போனை சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உபயோகிக்க முடியும். அப்படியிருக்கும்போது, ஆண்டுக்கு ஒரு முறை செல்போன் மாற்றுவதை யாராலுமே நியாயப்படுத்த முடியாது. அதையும் கடனில் வாங்குவது மிக ஆபத்தான போக்கு.
கடன் வாங்குவதற்கு முன்னர் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். தவணை முறையில் பொருள் வாங்கும்போது உங்கள் எதிர்கால வருமானத்தை இன்றே செலவு செய்கிறீர்கள்; அடுத்த ஐந்தாண்டு உழைப்பையும் சேமிப்பையும் வங்கிக்குத் தாரை வார்க்கிறீர்கள். எனவே, கடன் வாங்குவதற்கு முன்னர் கடன்பட்டாவது வாங்க வேண்டிய அளவுக்கு அந்தப் பொருள் தகுதியானதுதானா என்று யோசித்துக்கொள்ளுங்கள்!
கடன் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியவை!
தேவைக்காகக் கடன் வாங்குங்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதீர்கள்.
வாடகை மூலமான வருமானம், வீட்டின் விலையோடு ஒப்பிடும்போது வெறும் 2-3 சதவிகிதம்தான். எனவே, வீடு (கடனில்) வாங்கி, வாடகைக்குவிட்டுச் சம்பாதிப்பது லாபகரமானதாக இருக்காது.
கடன் வாங்குவதற்கு முன்னர் அவசரகால நிதியாக 3-6 மாத சம்பளத் தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
குறுகியகாலக் கடன் வாங்கி, நீண்டகாலச் சொத்துகளை (மனை, வீடு) வாங்காதீர்கள்.
அந்தந்தத் தேவைக்கு அதற்கென இருக்கும் கடனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணமாகக் காரை, கார் கடன் வாங்கி வாங்குங்கள். இதற்கான வட்டி விகிதம் சுமார் 9.5 சதவிகிதம்தான் இருக்கும். இதற்கு பதில், தனிநபர் கடன் வாங்கி கார் வாங்கினால் 18-22% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்!