Published:Updated:

வங்கிக்கடன் தள்ளிவைப்பு... ‘‘இது நிவாரணம் அல்ல... தண்டனை!’’

உண்மை நிலவரம் இதுதான்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது மத்திய அரசு. இதனால், பொருளாதாரரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் பல சலுகை களையும் அறிவித்தது. அதில் முக்கியமானது, வங்கிக்கடன் தவணைகளை மூன்று மாதங்கள் கழித்துச் செலுத்தலாம் என்பது.

இந்தச் சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘‘இது வாராக்கடனில் சேர்க்கப்படாது; சிபில் ஸ்கோரும் கழிக்கப்படாது’’ என்றும் தெரிவித்தார். ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கும் வியாபாரிகளுக்கும் இந்த அறிவிப்பு ஆறுதலைக் கொடுத்தது. தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வருமானம் இல்லாத மக்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் சற்றே நிம்மதி அடைந்தனர்.

ஆனால், வழக்கம்போல் மார்ச் மாத இறுதியில் ‘அடுத்த மாத (ஏப்ரல்) தவணைக்கு கணக்கில் பணத்தைத் தயாராக வைத்திருங்கள்’ என்று வங்கிகளிடமிருந்து குறுந்தகவல்கள் வரவே வாடிக்கையாளர்கள் அதிர்ந்துபோனார்கள். இதையடுத்து, ‘மத்திய அரசின் உத்தரவை எந்த வங்கியும் மதிக்கவில்லையா அல்லது இது ஒரு கண்துடைப்பான அறிவிப்பா?’ என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வங்கிகளில் கடன் வாங்கியுள்ள வாடிக்கையா ளர்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘வங்கிகளிலிருந்து, ‘கொரோனாவால் இந்த மூன்று மாதத் தவணைக்கு சலுகை பெற வேண்டுமென்றால், எங்களிடம் கோரிக்கை வையுங்கள்’ என்று ஒரு லிங்க்கை அனுப்புகின்றனர். ஆங்கிலத்தில் உள்ள அதைப் படித்துப் புரிந்து கொள்ளவே நீண்ட நேரம் பிடிக்கிறது. அதன் பிறகு தவணைகளைத் தள்ளிவைக்க ரிக்வெஸ்ட் கொடுத்தால், ‘கேப்சா’வைப் பதிவுசெய்யுமாறு விளையாட்டு காட்டுகின்றனர். சில வங்கிகளோ உங்கள் ரிஜிஸ்டர் மொபைல் நம்பர் தவறானது எனக் கூறி நம்முடைய ரிக்வெஸ்டை நிராகரிக் கின்றன.

இன்னும் சில வங்கிகள் இதைகூடச் செய்வ தில்லை. சேமிப்புக்கணக்கில் இருந்த பணத்தை ஆட்டோ டெபிட் செய்துவிட்டனர். சில தனியார் வங்கிகளின் கஸ்டமர் கேரில் இதைப் பற்றிக் கேட்டால், ‘கடன் தொகைக்கான தவணையை ஆட்டோமேடிக்காக எடுத்து விடுவோம். பணம் போடாமல் வைத்திருந்தாலும் செக் பவுன்ஸ் அபராதம், நிலுவைக்கான வட்டிபோட்டு வசூல் செய்வோம்’ என்கின்றனர். வியாபாரம் செய்கிறவர்கள், சிறு நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கு இது பெரும்சுமை. இந்த விஷயத்தில் அரசு மக்களை ஏமாற்றிவிட்டது’’ என்றனர்.

வங்கிக்கடன் தள்ளிவைப்பு... ‘‘இது நிவாரணம் அல்ல... தண்டனை!’’

‘வங்கிக்கடன் தவணைகளைச் செலுத்த, மூன்று மாத கால நீட்டிப்பு தர வேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கைவைத்தவர்களில் ஒருவரான மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிப்பவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இந்தக் கோரிக்கையை எழுப்பினோம். இதை ஏற்று, ‘வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் மீதான தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது’ என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், பலருடைய வங்கிக்கணக் கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இன்னும் சில தனியார் வங்கிகள் பணம் கட்டச் சொல்லி குறுந்தகவல் அனுப்பு கின்றன.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி தனது இணையதளத்தில் ஒரு கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாகனக்கடன் ஆறு லட்சம் ரூபாயாகவும் நிலுவைத் தவணைகள் 54 மாதங்களாகவும் இருக்கும் நிலையில், அந்த மூன்று மாதத் தவணை செலுத்துதல் தள்ளிவைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் 19,000 ரூபாய் கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ.எம்.ஐ-க்குச் சமம். அதேபோல் வீட்டுக்கடன் 30 லட்சம் ரூபாயாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கும்பட்சத்தில், மூன்று மாதத் தவணை செலுத்துதல் தள்ளிவைக்கப் படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் ரூபாய் கட்ட வேண்டி வரும். இது எட்டு இ.எம்.ஐ-க்குச் சமம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.பி.ஐ-யின் இந்தக் கணக்கு, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளிவைப்பு வாடிக்கையாளர்களுக்கான நிவாரணமல்ல, தண்டனை. தவணைகளுக்கு மூன்று மாத அவகாசம் தருவதற்கு அபராதமோ கூடுதல் வட்டியோ விதிக்கக் கூடாது என்பது தான் கோரிக்கை. அரசு இதை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சரும் ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒரு பக்கம் சலுகை அறிவித்துள்ள நிலையில், கந்துவட்டிக் காரர்களைவிட மோசமாக வங்கிகள் நடந்துகொள்வது ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்’’ என்றார்.

 சு.வெங்கடேசன் - பி.ஸ்டாலின்
சு.வெங்கடேசன் - பி.ஸ்டாலின்

வழக்கறிஞர் பி.ஸ்டாலின், ‘‘மத்திய அரசு கொண்டுவந்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன்படி எந்த வகையான பேரிடர் ஏற்பட்டாலும் மக்களுக்குத் தேவையானதை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது, வங்கிக்கடன் சுமையை அரசே ஏற்பது போன்ற வற்றுக்காகத்தான் பேரிடர் நிவாரணத் துக்காக பல கோடிகளை மத்திய அரசு ஒதுக்குகிறது. அப்படியிருக்கையில் கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் விவசாயிகள், மீனவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் பெற்றுள்ள வங்கிக்கடன் களுக்கு மூன்று மாதத் தவணையைத் தள்ளிவைப்பதைவிட, அவற்றைத் தள்ளுபடியே செய்யலாம். இந்த மோசமான நிலையில் வங்கிகள் மக்களை நெருக்கினால், இதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்’’ என்றார்.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘மூன்று மாதத் தவணை களைச் செலுத்த அவகாசம் அளித்தது, சிறுதொழில்முனைவோர், குறைந்த ஊதியக்காரர்கள் உள்ளிட்டோர் தற்காலிகமாக நிலவும் நெருக்கடியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான். பொதுவாக, மூன்று மாதத் தவணைகளை தொடர்ச்சியாகச் செலுத்தாமல்போனால் அந்த வங்கிக்கடன், வாராக்கடன் கணக்கில் சேரக்கூடும். ரிசர்வ் வங்கி இப்போது அளித்துள்ள சலுகையால், வாராக்கடன் கணக்கில் இது வராது. வங்கிக்கடன்களைச் செலுத்துவதில் சிரமமில்லை என்பவர் கள், தவணையைத் தள்ளிப்போடாமல் வழக்கம்போல் செலுத்தலாம்.

 சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

தவணைத்தொகையில் ஒருவரது வங்கிக்கடனின் அசல் மற்றும் அதற்கான வட்டி என இரண்டும் குறிப்பிட்ட விகிதத்தில் மாதந்தோறும் கழிக்கப்பட்டுவரும். வங்கிக்கடனின் தொடக்கத்தில் கட்டும் தவணையில், வட்டியே அதிகப் பங்குவகிக்கும். போகப்போக வட்டியின் பங்கு குறைந்து அசல் பெருமளவு கழிக்கப்படும்.

தற்போது மத்திய அரசு, தவணைகளைத் தள்ளிப்போடும்படி மட்டுமே குறிப்பிட்டுள்ளது. எனவே, தவணைகளைச் செலுத்தாவிட்டாலும் எஞ்சியுள்ள அசலுக்கான வட்டி தானாகவே கணக்கிடப்படவே செய்யும். இது, இந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, உங்களுடைய தவணையில் குறிப்பிட்ட அளவு கூடுதலாகும். இந்தக் கணக்கைத்தான் பலரும் வெளியிடுகின்றனர். இதற்காகத்தான் இந்த மூன்று மாதங்களுக்கு வட்டியை மட்டுமாவது கட்டும்படி சொல்கிறோம். வட்டியைச் செலுத்திவிட்டால், அதன்பிறகு வழக்கம்போல் தவணையைச் செலுத்திவரலாம்.

இ.சி.எஸ் முறையில் வங்கிக்கடன் செலுத்தும்போது ஆட்டோ மேட்டிக்காக வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்துவிடும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், பணம் எடுக்காது. எதுவாயிருப்பினும் நீங்கள் முறையாக வங்கிக்குக் கடிதம் அனுப்பியோ அல்லது நேரில் சென்றோ மூன்று மாதத் தவணை தள்ளிவைப்பு குறித்த உங்கள் கோரிக்கையைக் கூறினால், அதன்படி செயல்படுத்து வார்கள். எடுக்கப்பட்ட பணம் ரீஃபண்ட் செய்யப்படும். அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது. எனவே, இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று விளக்கினர்.

பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் முடிவெடுக்க வேண்டும்.... அதுவும் விரைவாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு