கறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? #DoubtOfCommonMan

இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சிங்காரம் என்ற வாசகர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ``சுவிஸ் பேங்க் என்ற வார்த்தை எல்லா இந்தியர்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. சுவிஸ் பேங்க் என்றால் என்ன? அதில் யாரெல்லாம் கணக்குத் தொடங்கமுடியும்? ஏன் அந்த வங்கியை இங்கிருப்பவர்கள் தேர்வு செய்கிறார்கள்?" என்பது அவருடைய கேள்வி.
இதுகுறித்து ஆடிட்டர் ஏ.கோபால்கிருஷ்ண ராஜுவிடம் பேசினோம்.
கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு.


``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், யூபிஎஸ் வங்கி (UBS), கிரெடிட் சுஸி பேங்க் (Credit Suisse bank), கன்டோனல் பேங்க் (cantonal bank) ஆகிய மூன்றும் முக்கியமானவை. இவற்றில் கன்டோனல் பேங்க், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் வங்கி.
வெளிநாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க பெரும்பாலான நாடுகளின் வங்கித்துறைகள் அனுமதிப்பதில்லை. ஆனால், சுவிட்சர்லாந்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியுண்டு. ஆனால், வங்கிக்கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. நம் நாட்டில் வாடிக்கையாளர் குறித்து கே.ஒய்.சி பார்த்து முடித்துவிட்டாலே வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம். ஆனால், அங்கே வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அனைத்துமே சரியாக இருந்தாலும்கூட, வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியளிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. வங்கிக்கணக்கு தொடங்க அனுமதி மறுக்கவும் வாய்ப்புள்ளது.

பாஸ்போர்ட், தொழில் அல்லது பணிகுறித்த விவரங்கள், நிறுவனம் தொடர்பான ஆவணங்கள், லைசென்ஸ் மற்றும் வரித்தாக்கல் விவரங்கள், முதலீடு செய்யவுள்ள பணத்தைச் சம்பாதித்ததற்கான ஆதாரம் மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கும் அங்கு பதில்தர வேண்டும். வங்கிக்கணக்கு குறித்த ரகசியம் காக்கப்படும் என்பதால் அதற்கேற்ப கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகள் கடுமையானவை. பொதுவாக உலகெங்கிலும் உள்ள வங்கிகளில், வாடிக்கையாளரின் பெயர், வாடிக்கையாளரின் அடையாள எண் (Customer ID), வங்கிக்கணக்கு எண் ஆகிய மூன்றும் இடம்பெறும். வாடிக்கையாளரின் பெயரை வைத்துதான் வங்கிக்கணக்கை அடையாளப்படுத்துவார்கள். ஆனால், ஸ்விஸ் வங்கிகளில் கஸ்டமர் ஐ.டி மட்டுமே முதன்மையானதாக இருக்கும். வாடிக்கையாளரின் பெயர், வங்கியின் மேல்மட்ட அதிகாரிகள் அளவில்தான் தெரியும். எனவே வெளிநபர்கள் மட்டுமின்றி, வங்கி ஊழியர்களேகூட வாடிக்கையாளரை அடையாளம் காண்பது கடினம். சுவிட்சர்லாந்து அரசின் வங்கிச்சட்டப்படி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வெளியில் சொன்னால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த வங்கிகளைப் பெருமளவு நாடிவருகிறார்கள்.


சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில், சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்களின் டெபாசிட் மற்றும் சுவிட்சர்லாந்தில் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அந்நாட்டில் வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன்காரணமாகவும் வெளிநாட்டினர் இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதாரம் நிலையானதாக இருக்கும். அந்த நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி காண்பதில்லை. சுவிட்சர்லாந்தின் பணமான `சுவிஸ் பிராங்க்'கை இந்திய ரூபாயோடு ஒப்பிட்டால், ஒரு சுவிஸ் பிராங்கின் மதிப்பு, 71 ரூபாய்க்குச் சமமாகும். பத்து ஆண்டுகளுக்குமுன் இதே சுவிஸ் பிராங்க், 45 ரூபாய்க்குச் சமமாக இருந்தது. சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் சீராக இருப்பதும்கூட மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், இந்த வங்கிகளில் முதலீடு செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது" என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!